செவ்வாய், 28 மார்ச், 2017

மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் உரையாடல் 6




(6)

கடவுளின் காட்சி


ஒவ்வொரு கணத்திலும் இடர்படுத்திக்கொண்டிருப்பதைக்
கடந்து செல்லும் வலிமையற்று
காத்திருக்கும் அத்தருணத்திலும்
அசைக்க இயலாத நம்பிக்கை உணர்வை
ஏற்றி வைக்கும்
உன் வார்த்தைகளின் சக்தி



எனக்கானது என்று
மனசுக்குள் நிறைத்துக்கொண்டு
ஒட்டியிருக்கும்
இந்த உயிரின் தவிப்பை
உன் பாதங்களில் வைத்து முத்தமிடுகிறேன்



காத்தருள்வதும்
கண்டுகொள்ளாமல் போவதும்
உன் விருப்பம்



கடவுள் எங்கும் இருக்கலாம்


@@@@@@@@


நம் தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் எப்போதும் ஒரு குறிக்கோளையோ அல்லது ஒரு நோக்கத்தையோ அடிப்படையாகக்கொண்டவையாகும். நம் முன்னோர்கள் இலக்கியம் என்பது உயர்ந்த ஒரு நோக்கத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும் எனக் கூறுவர். மக்களின் உணர்வுகளைச் செம்மைப்படுத்தி, மென்மைப்படுத்தி, நுண்ணிய உணர்வுகளை அவர்களுக்குள்ளே வளர வைத்து அவர்களைப் பண்படுத்துவதையே இலக்கியத்தின் தலையாய நோக்கமாக இருந்து வந்தது. கலை வாழ்க்கைக்காக என்பதே நமது இலக்கிய மரபாகும். அதன் நோக்கில்தான் நமது சங்க இலக்கியம் உட்பட இலக்கியங்கள் தோன்றலாயின. 


ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களுக்கு எது தேவை என படைப்பாளன் நினைக்கின்றானோ அதுவே அவனின் படைப்பின் பாடுபொருளாக அமைந்திருப்பதை நமது இலக்கியங்களின் மூலம் சுட்டமுடிகிறது. ஆனால், கலை கலைக்காக என்பது மேலை நாட்டவர்களின் வாதமாகும். அதற்கேற்றார்போல் அவர்கள் இலக்கியம் தொடர்பாக பல கோட்பாடுகளையும் விமர்சனப் பார்வைகளையும் முன் வைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் கீழ்த்திசை நாடுகளுக்கு அவர்களின் வருகையானது ஒரு மாபெரும்  இலக்கியத் தாக்கத்தை நமது படைப்புகளிலும் ஏற்படுத்தியது. நமது உயரிய மரபின் நோக்கங்களை நாம் பின்தள்ளிவிட்டு மேலைநாட்டவர்களின் இலக்கியக் கோட்பாடுகளை முன் வைத்து, அவர்களைப் பின்பற்றி எழுதத் தொடங்கினோம். பாரதியின் வசனகவிதையிலிருந்து இன்றைய நவீன படைப்புகள்வரை தொடரும் நிலை இதுதான்.


இயற்கையோடு இயைந்து, வளர்ந்து, வாழ்ந்த இனம் தமிழினம். வாழ்வியலுக்காகப் படைப்பிலக்கியத்தை உருவாக்கிய இனம் தமிழினம். அதனால்தான் ஆண்டுக்கொருமுறை வேளாண்மைக்கு உதவும் சூரியனுக்கும், மாட்டுக்கும் பொங்கல் வைத்து தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் ஒரு வாழ்வியல் முறையை உருவாக்கினான். உறவுகளோடு சங்கமிக்க காணு பொங்கலை உருவாக்கினான். இப்படியாக இயற்கையோடும் உறவுகளோடும் வாழ்வின் உயரிய நாகரிகத்தைப் படிப்படியாக வளர்த்துக்கொண்ட இனம் தமிழினம். அந்த தமிழினத்தின் இன்றைய வாழ்வியல் நிலை என்ன? அவன் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான்? இனியும் அவன் எப்படி தன் எதிர்கால சவால்களை எதிர்கொள்வான் என்பதெல்லாம் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயமாகும்.


அந்தத் தமிழனின் ஒரு குரலாக அதுவும் மலேசியத் தமிழனின் ஒரு வாழ்வியல் குரலாகத்தான் எம்.கருணாகரனின், கடவுளின் காட்சி என்ற கவிதையை என்னால் அணுகமுடிகிறது. இக்கவிதை ஒரு தனிமனித உணர்வாகவும் அல்லது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வாகவும் நாம் பார்க்கலாம்.


ஒவ்வொரு கணத்திலும் இடர்படுத்திக்கொண்டிருப்பதைக் / கடந்து செல்லும் வலிமையற்று /காத்திருக்கும் அத்தருணத்திலும் / அசைக்க இயலாத / நம்பிக்கை உணர்வை / ஏற்றி வைக்கும் /உன் வார்த்தைகளின் சக்தி /


எனும் வரிகளில் ஒரு தனிமனிதனின் கடைசித்துளி நம்பிக்கையாக அவன் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றுதான் அவனுக்குக் கைக்கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. 


எப்பேர்பட்ட இன்னல்களிலும் தன்னை ஏதோ ஒரு சக்தி காத்தருளும் என்ற நம்பிக்கையை இவ்வரிகள் உணர்த்துகின்றன. இந்தச் சக்தி என்பது ஒவ்வொரு மனிதனுக்குள் வெவ்வேறாக இருந்துகொண்டு அவனை இயக்கிக் கொண்டிருப்பவை. எப்படிக் காற்றை நம்மால் காட்ட இயலாதோ அதுபோல இந்தச் சக்தியையையும் காட்ட இயலாது. ஆனால் காற்றை உணர முடியும். அதுபோல இச்சக்தியையும் அவரவர் தன் நம்பிக்கைக்கு ஏற்றவாறு உணரமுடியும். இந்தச் சக்தியானதைச் சிலர் கடவுகளாகப் பார்க்கின்றனர். சிலர் தெய்வங்களாகப் பார்க்கின்றனர். இன்னும் சிலர் கடவுள் நம்பிக்கை இல்லாமலும் தெய்வ நம்பிக்கை இல்லாமலும் அச்சக்தியை நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்று என்ற நிலையிலாவது வைத்திருப்பார்கள். அது இப்பிரபஞ்சத்தின் சக்கியாகக் கூட இருக்கலாம். இப்பிரபஞ்சம் நாம் அறியா பல கோடி விஷயங்களைத் தன்னக்தே கொண்டதாகும். அப்படிப்பட்ட ஏதோ ஒரு சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயங்கிக் கொண்டு அவனின் கடைசி நம்பிக்கையாக இருந்து அவனை இறுதிவரை இயக்கிக் கொண்டிருப்பதை இவ்வரிகள் சுட்டுகின்றன.    

                        

-        தொடரும்         (மக்கள் ஓசை  - 260317)



(

ஞாயிறு, 19 மார்ச், 2017

கவிதைகளுடன் உரையாடல் - மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் 5





(5)

உயிர்ப்பின் கரங்கள்


உயிர் கூட்டில் சூழ் கொண்டு
மீண்டும் ஒரு பிறப்பை செய்விக்கும் என் பிஞ்சு விரல் பறவைகள்
பறப்பதற்கு எத்துணை பிராய்த்தனம் செய்தும்
என் உயிரில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும்
அதன் வாசம்
பிரித்தெடுத்தல் என்பது இயலாது

ஒவ்வொரு முறையும்
கூர் கத்திகள் கிழித்தென் உயிரில் கலந்திருக்கும் வலியை
மறக்கடிக்கும்
என் வாசம் பூத்த
உயிரின் பிம்ம பிஞ்சுக் கரங்கள்

இன்றெல்லாம் என் உயிர்ப்பின் அந்தக் கரங்களில் மென்மை அகன்று
கடுமை கனத்திருக்கிறது

இருந்து விட்டு போகட்டும்
என்றும் நினைவில் ஆழ் பதிந்த
என் உயிர்களின் பஞ்சு கரங்கள்
போதும் எனக்கு


@@@@@@@


கவிதைகளை வாசிக்கும்போதும் கேட்கும்போதும் ஒவ்வொருவரும் தத்தம் உள அமைப்புக்கேற்பக் கவிதை காட்டும் காட்சிகளை அவரவர் மனத்திலே கட்டமைத்துக்கொள்கிறார்கள். அவரவர் மனத்திலே அவிழ்த்துவிடப்படும் காண்பிய ஆக்கத்தின் (visualisation) வழியாகக் காட்சிப்படுத்துதல் அரங்கேறுகிறது. இதிலிருந்து புனைவு என்பது சொல்வழியான தொடர்பு மட்டுமன்றி சொல் வழியான காண்பிய உருவாக்கத்திற்கும் தொடர்புமாகிறது.


எம். கருணாகரனின், உயிர்ப்பின் கரங்கள் கவிதையின் சொற்சித்திரம் மேலே கூறப்பட்ட கூற்றுக்கு மிகவும் பொருத்தமாகப் பொருந்திப்போகிறது. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்ற நமது முதுமொழியை நம் முன்னே காட்சிப்படுத்திச் செல்கிறது என்றால் அது மிகையாகாது.


உயிர் கூட்டில் சூழ் கொண்டு/மீண்டும் ஒரு பிறப்பை செய்விக்கும் என் பிஞ்சு விரல் பறவைகள்/பறப்பதற்கு எத்துணை பிராய்த்தனம் செய்தும்/என் உயிரில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும்/அதன் வாசம்/பிரித்தெடுத்தல் என்பது இயலாது/


எத்தனை ஆழமான சொற்பிரயோகம். வாசிக்கும்போதே நேரிடையாக நம்மோடு உரையாடி காட்சிப்படுத்தும் அழகிய உள்ளார்ந்த வரிகள். கவிதை முழுக்க இதுபோன்ற வாழ்க்கையின் அனுபவ வரிகள். இதுவே இக்கவிதையின் சிறப்பு.



ஒவ்வொரு முறையும்/கூர் கத்திகள் கிழித்தென் உயிரில் கலந்திருக்கும் வலியை/மறக்கடிக்கும்/என் வாசம் பூத்த/உயிரின் பிம்ம பிஞ்சுக் கரங்கள்



பிரசவத்தின் வலிகளையும் அவை மறக்கடிக்கப்படும் மந்திரமான குழந்தையின் பேரொளியில் அனைத்தையும் மறந்துபோகும் தாய்மையின் மகத்துவத்தையும் புனிதத்தையும் பேரன்பையும் மிகவும் மென்மையாக மகரந்தப்பொடிகளைப் போல கவிதையில் தூவியுள்ள கவிஞர் ஒரு பெற்றோரின் பார்வையில் இக்கவிதையை நகர்த்திச் சென்றிருக்கிறார். சிறு பிராயத்தில் பிஞ்சு விரல்களால் மிதிபடும் தந்தையின் மார்பில் எல்லையில்லா மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அந்தப் பிஞ்சின் மிதிகளின் ஆனந்த தாண்டவம் தந்தையின் உணர்வுமுழுக்கு நிரம்பிவழிந்திருக்கும். ஆனால் பிள்ளைகள் பெரியவர்களானதும், அவர்களின் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போகும் வேளையில், அவர்கள் உதிர்க்கும் சொற்கள் பெற்றோரை வேதனைப்படுத்தும் விதத்தில் அமையும்போது அடுத்த வரிகள் வருகிறது இப்படி.


இன்றெல்லாம் என் உயிர்ப்பின்/அந்தக் கரங்களில் மென்மை அகன்று/கடுமை கனத்திருக்கிறது



பிள்ளைகள் வளர வளர அவர்கள் தங்களுக்கான உலகில் சஞ்சரிக்க விரும்பும் காலம் அது. பெற்றோர் எவ்வளவுதான் சொன்னாலும் அது நல்லதாகவே இருந்தாலும்கூட அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைமுறை இடைவெளி விழுந்துபோவது இன்றைய வாழ்க்கை முறையில் மிகவும் சர்வசாதாரணமானது. கொஞ்சிப் பேசிய வாயிலிருந்து உதிரும் சுடுச்சொற்களால் வெந்துபோகும் பெற்றோர்களின் மனங்களைப் பதிவு செய்திருக்கும் இவ்வரிகள் நேரிடையாகச் சொல்லாமல் உருவகமாகச் சொல்லப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. பழமையானதும் பழமைப்பிடிப்பிலிருந்து வெளியேறத் துடிப்பதுமான இரு வேறு துருவங்களாகப் பெற்றோர் பிள்ளை உறவுகள் இன்றைய சூழலில் நீண்டுகொண்டிருப்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.


அன்று மார்பில் மிதித்த பிள்ளை இன்று நஞ்சுநாவால் மிதிக்கும்போதும்கூட, அன்றைய பிஞ்சு பிள்ளையின் மென்மையையும் அரவணைப்பையும் அன்பையும் என்றும் நினைவில் கொண்டு வாழும் பெற்றவர்களின் மனத்தைக் காட்சிப்படுத்திக்காட்டுகிறது கவிதை.



இருந்து விட்டு போகட்டும்/என்றும் நினைவில் ஆழ் பதிந்த/என் உயிர்களின் பஞ்சு கரங்கள்/போதும் எனக்கு



இதுபோன்ற அக வரிகளால் உணர்த்துமுறையில் சிறந்து விளங்குகிறது கவிதை. சொல் ஆழமும் படைப்பின் நுட்பமும் செறிவுடன் கவிதையின் பொருளை அழகுறப் பதிவு செய்திருக்கிறது. கவிஞனின் உள்ளத்தில் செறிந்து கிடக்கும் எண்ணங்கள் வலியுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் வலிமையுடன் நிற்கிறது கவிதையின் பாடுபொருள்.

(மக்கள் ஓசை 19032017)



-    தொடரும்

திங்கள், 13 மார்ச், 2017

கவிதைகளுடன் ஓர் உரையாடல் - மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் 4






(4)

இரகசியமானவன்


என்னை நீங்கள் கொல்லாமல் இருப்பதே தருமமானதல்ல
இருந்தாலும்
எல்லாவற்றிலும் மறைப்புக்களிட்டு
என்னை மறைத்துக் கொண்டிருக்கிறேன்


எப்போதும் வெளிப்படையானவனாகக்
காட்டிக் கொள்ளவே முயன்றிருக்கிறேன்
என்னை நீங்கள் தடுத்துக் கொண்டே  இருந்தீர்கள்


என் மறைப்புகள் எனக்கு சுகமானது
இனி எதையும் உடைப்பதற்கில்லை


என் வலைப்பின்னல் உறுதியாகிக் கொண்டிருக்கிறது


என் மகன் கூட
என்னை விட அடர்ந்த இரகசியக் காரனாய்
மாறிக் கொண்டிருக்கிறான்








என்று தணியுமிந்த சுதந்திர தாகம்
என்று தணியுமெங்கள் அடிமையின் மோகம்


என்ற பாரதியின் வரிகளை,

இந்த சுதந்திர தாகம்
எப்போது தணியப் போகிறது
எங்கள் அடிமையின் மோகம்
எப்போது மடியப்போகிறது


என வேறு வடிவத்துக்கு மாற்றினாலும், அது தன் கவித்துவப் பாதிப்பை இழந்துவிடவில்லை. ஏனெனில் இங்கு வெளிப்படுத்தப்படுவது ஒரு கருத்தல்ல. ஓர் ஆழமான உணர்வு; வேட்கை. இந்த உணர்வின் தாக்கமே இதைக் கவிதை என நிர்ணயிக்கிறது. அதன் யாப்பும் இசையும் இதற்கு வெறும் அணிகலன்களாகும். அவ்வளவுதான். (மார்க்கிசியமும் இலக்கியத் திறனாய்வும், எம்.ஏ.நுஃமான்)


அதுபோல, கண்ணதாசனின்,


வறுமை நாட்டில் வந்ததேன் மக்கள்
உரிமைத் திமிரால் உழைக்காததுதான்


வரிகளை, யாப்பு வடிவத்தை நீக்கி எழுதினால்,


நாட்டில் ஏன் வறுமை வந்தது?
மக்கள் உரிமைத் திமிரினால்
உழைக்காமல் இருந்ததனால்தான்


என்று அமையும் பட்சத்தில் இதை நாம் வெறும் கருத்தாக மட்டுமே கொள்வோமே தவிர, கவிதை என்று சொல்லமாட்டோம். இக்கருத்து செய்யுளில் அமைந்ததனால் மட்டும் இது கவிதையாகிவிடுவதில்லை. அது இன்னும் ஒரு கருத்தே தவிர கவிதையல்ல; செய்யுளில் கூறப்பட்ட கருத்தாக மட்டுமே இதைப் பார்க்கமுடிகிறது. ஆகையினால், கவிதையின் உள்ளார்ந்து கலைவிதி என்பது செய்யுளாக்கம் அல்ல; ஒரு கருத்தை செய்யுளில் கூறுவதல்ல என்பதும், மாறாக கவிதையின் உள்ளார்ந்த கலைவிதிகளுள் முக்கியமானது அது வெறும் கருத்து வெளிப்பாடாக அன்றி, ஓர் உணர்வு வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பதேயாகும் என்கிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்.


அவ்வகையில் எம். கருணாகரனின், ரகசியமானவன் கவிதையும் வெறும் கருத்தாடலால் மட்டுமல்லாமல் உணர்ச்சியின் கொந்தளிப்பாலும் உளப்பூர்வமாகப் படைக்கப்பட்டுள்ளது என்ற வகையினைச் சார்ந்ததாகும். கவிதையினை மேலோட்டமாகப் பார்த்தால் வேறொன்றாகவும் உளப்பார்வையினுள் தீவிர வேட்கையுடன் நுணுகி நுணுகிப் பார்த்தால் வேறொரு பரிமாணத்திலும் கவிதையின் பாடுபொருள் புதைந்திருப்பதைக் காணலாம்.


பொய்யான சில பேர்க்குப் புது நாகரிகம்
 புரியாத பல பேர்க்கு இது நாகரிகம்


என்ற வாலியின் பாடல் வரிகள்தான் இக்கவிதையை நான் வாசித்தபோது என் நினைவைத் தைத்தன. ஒவ்வொரு விடியலும் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அனுபவத்தை வழங்குகிறது. அந்த அனுபவங்கள் அவன் சக மனிதனோடு உறவாடும்போது அவனுக்கு அரணாக நிற்கின்றபோது, தான் சார்ந்த, தனக்கு நேர்ந்த, தனக்கான தேடலில் அவன் அவனை யாராக உணர்கின்றானோ, அவனாகவே அவன் மாறிவிட்டிருப்பான். அவனைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களும் அவனுக்குள் ஏற்படும் மாற்றங்களும் அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகிறது. இதையே கவியரசு கண்ணதாசன்,


ஒருவன் மனது ஒன்பதடா – அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா


என தன் வாழ்வியல் பாடங்களைப் பாடலாகப் பதிக்கின்றார்.
இதுதான் வாழ்க்கை. இங்கு இப்படித்தான் எல்லாம் நடக்கும் எனத் தெளிவாகத் தெளிந்துகொண்டவன் அந்த நெளிவு சுழிவுகளுக்கு ஏற்ப தானும் வாழப் பழகிக்கொள்கிறான். இந்த வாழ்க்கையில் நிஜங்கள் தொலைவதும் தேய்வதும் பொய்யாக பிறர் விரும்பும் வண்ணம் தன் முகத்துக்கு முகமூடிப் போடுவதும் பேசும் பேச்சும் பொய்யான சிரிப்பும் உண்மையில்லாத நட்பும் எளியோரை மிதிப்பதும் வலியோரை போற்றுவதும் என இன்றைய மனிதனின் அவலம் வெறும் சுயநலத்தோடு மட்டும் சுற்றித் திரிவது பலர் கண்களுக்குத் தெரிவதில்லை. செய்யும் செயல் அனைத்திலும் தன்னலம் மட்டும்தான் நிறைந்திருக்கும். அவனோடு ஒத்த எண்ணமும் போக்கும் கொண்டவர்கள் அவனைச்சுற்றி வட்டமடித்துக்கொண்டு அவரவர்களுக்கானதைச் சாதித்துக்கொள்வார்கள். இந்த வளையம் நாளுக்கு நாள் வலுவாகிக்கொண்டு பெருகிக்கொண்டே இருக்கிறது என்பதை,


என் வலைப்பின்னல் உறுதியாகிக் கொண்டிருக்கிறது


என்ற வரிகளின்மூலம் கவிஞர் இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் எச்சரிக்கை மடல் விடுக்கிறார்.

தான் யார் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும். பொய்முகங்களோடு இன்றும் இப்போதும் எப்போதும் நம்மைச் சுற்றி மனிதக்கூட்டங்கள் அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட கூட்டத்தின் பிரதிநிதி ஒருவனின் வாக்குமூலமாக இக்கவிதையை நான் பார்க்கிறேன்.


என் மகன் கூட
என்னை விட அடர்ந்த இரகசியக் காரனாய்
மாறிக் கொண்டிருக்கிறான்


என்ற வாக்குமூலத்தின்வழி அவன் தெரியப்படுத்தும் ஒரு செய்தி என்னவெனில், இனி அடுத்துவரும் தலைமுறையும் இதைவிட மோசமான மனிதக்கூட்டங்கள் கொண்ட குழுக்களாக வாழும் என்கின்ற ஓர் எச்சரிக்கையாகவே இக்கவிதையை கவிஞர் படைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. பொய்களின் இறுக்கம் இன்னும் இறுகி இறுகி வேறொரு பரிமாணத்தில் மனிதனின் எதிர்கால வாழ்வுக்கு மாபெரும் ஒரு சவாலாக இருக்கப் போவதை இக்கவிதை சுட்டுகிறது.


நாட்டிலும் நம் இனத்திலும் நடக்கும் சாக்கடை அரசியலிலும் போலி விளம்பர உத்திகளிலும் பொய்யான சிநேகிதங்களிலும் முகமன் பார்த்துப் பழகும் உறவுகளிலும் என இன்னமும் பல அவலங்களை நாம் காணவேண்டி வரும் என்பதை இக்கவிதையின் மூலம் இலைமறைகாயாக எம். கருணாகரன் வெளிப்படுத்தியுள்ளார். போலிகளின் சாம்ராஜ்யத்தை சக்கர வியூகத்தை உடைத்த அபிமன்யுபோல இங்கு உடைத்தெறியப்போவது யார்? அந்த இரகசியக்காரன் எங்கிருக்கிறான்? ஏன் அது நானாகவும் இருக்கலாம் அல்லது நீங்களாகவும் இருக்கலாம்.


மனித நலனின் அக்கறை கொண்ட ஒரு படைப்பாக இக்கவிதையின் பாடுபொருள் விரிந்துள்ளது பாராட்டுக்குரியது.



-    தொடரும்

ஞாயிறு, 5 மார்ச், 2017

மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் ஓர் உரையாடல்






(3)

ஆழ்மனம்


அடர்ந்த இருட்டொன்றில் வந்தமர்ந்த
காகம் கரைந்து கொண்டிருந்தது
அது தேடி வந்தது
கிடைக்காதென்று தெரிந்தும்
இன்னும் சத்தமாயக் கரைந்தது



விட்டகர்ந்து நின்று பார்த்தேன்
கண்கள் விழிக்க
என்னைப் பார்த்திருந்தன கல்லறைகள்



யாரோ ஒரு சாமியாடி
மந்திரம் சொல்லி வீசியப் பூக்களில்
இனம் புரியா நறுமணம்


இப்போதும்
நான்
வாசமாகிறேன்



ஒரு மனிதனின் ஆழ்மனத்தில் அவனுக்கே தெரியாமல் புதைந்திருக்கும் சில ஆசைகளும் விருப்பங்களும் ஏக்கங்களும் சில வேளைகளில் அவனையறியாமலேயே அவனின் தியான நிலையில் அவனுக்குள் இருந்து ஏதோ ஒரு வகையில் வெளிப்படுதல் உண்டு. அப்படி வெளிப்படும் அந்த உணர்வுகள் எழுத்துகளாக உருமாறி ஒரு சொல்லாக, ஒரு தொடராக நம்மை நோக்கி வீசப்படுதலும் உண்டு. அந்த வகையில் இந்தச் சொல்லாடல்கள் பல தொடர்களாகி ஒரு நவீன கவிதைக்குரிய கூறுகளுடன் தோற்றம் பெற்றுள்ளன.


பொதுவாக ஏமாற்றம் தரும் செயல்களில் நாம் தெரிந்து ஈடுபடுவதில்லை. அப்படித் தெரிந்தும் நாம் ஒரு செயலைச் செய்கிறோமென்றால், அந்த செயல் எத்தகைய உன்னதமான இலக்கைக் கொண்டிருக்கவேண்டும் என்ற சிந்தனைக் கீற்றை நமக்குள் வீசிச் செல்கின்றன இக்கவிதையின் முதல் ஐந்து வரிகள். கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்கிறது ஏசுவின் தர்மம். முயற்சி ஒன்றே வாழ்க்கையின் அச்சாணி என்பதை மிகவும் அழகாக வலியுறுத்துகின்றன அந்த முதல் ஐந்து வரிகள்.


அதை அடுத்து, காகம் என்ற பறவையோடு இறந்துபோன நமது மூதாதையர்களைத் தொடர்புப் படுத்தும் ஐதீகமும் நமது மரபில் இருக்கிறது. நாம் செய்யத் தவறிய சில கடமைகளை நமக்கு உணர்த்துவதாகக் கூட அந்தக் காக்கையின் கரைதலுக்குப் பொருள் கொள்ள வாய்ப்பும் இங்கு இருப்பதை இக்கவிதையில் அடுத்துவரும் வரிகள் காட்டுகின்றன. அடுத்து வந்துள்ள தங்களின் வாரிசுகள் தங்களை மறந்துபோய், தங்களுக்குச் செய்ய வேண்டியதை அவர்கள் செய்யாமல் இருப்பதை அறிந்தும் இனியும் இவர்கள் நமக்காக எதையும் செய்யப் போவதில்லை என்பதைத் தெரிந்தும், அந்தக் காகத்தின் வடிவில் இருக்கும் அந்த மறந்துபோன உறவுகள் எதையோ உணர்த்துவதற்காகக் கரைவதை நிறுத்தாமல் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன என்பதாகவும் பொருள் கொள்ளவும் வாய்ப்புகளை இக்கவிதை வரிகள் வழங்குகின்றன.  


ஆன்மாக்களுக்கு அழிவில்லை என்பதை விழித்திருந்து உணர்த்தும் கல்லறைகள் சொல்ல விரும்புவது என்ன? அது எதற்கான அறிகுறி? ஏன் இப்படியெல்லாம் ஒரு தியான நிலையில் ஆழ்மனம் வெளிக்கொணருகிறது? போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு தனிமனிதனும் தன் நிலையில் நின்று சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும் என்ற ஒரு செய்தியை,


/கண்கள் விழிக்க என்னைப் பார்த்திருக்கின்றன கல்லறைகள்/ 


என்ற வரிகள் உணர்த்துகின்றன. 


குடும்பம் நமது சொத்து. நமது முன்னோர்களும் மூதாதையர்களும் நமது வழிகாட்டிகள். நம்மேல் உண்மையான அக்கறையும் பேரன்பும் கொண்டவர்கள். இவ்வுலகில் இல்லாவிட்டாலும் என்றும் நம்மை ஆசிர்வதிப்பவர்கள். இதை நன்கு உணர்ந்திருக்கும் சீன சமூகம் இன்றளவும் தங்களின் மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவாகச் செய்து வரத் தவறுவதில்லை. அந்த சமூகம் எல்லா நிலையிலும் சீரும் சிறப்புடனும் பொருளாதார வசதியுடனும் இருக்கிறது.


இறந்தவர்களுக்கு நடுகல் நிறுத்தி வணங்கி வந்த நமது மரபும் சங்க இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளது. ஆனால் நம்மில் எத்தனை பேர் அதுபோன்ற கடமைகளை நிறைவாகச் செய்து வருகிறோம் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். சிந்தனை மாற்றத்தால் இதுபோன்ற மரபுகளைப் புறந்தள்ளி வாழும் மனிதர்களின் விழிகளுக்கு அந்தக் கல்லறை விழிகளின் ஏக்கங்கள் புரியுமா என்ற கேள்வியோடு இக்கவிதை வரிகள் நம்மைக் கடந்து செல்கின்றன.


இறுதி ஆறு அடிகள், ஒரு வகையான ஞான ஒளியை அந்த மனிதனுக்குள் தெளித்து, அவனை ஒளிப்பெறச் செய்கிறது. தான் ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்த ஓர் ஆத்மாவின் புனித வெளிப்பாட்டை,


 /இப்போதும் நான் வாசமாகிறேன்/ 


என்ற வரிகள் குறிப்பதை உணரலாம்.


இது ஒரு தத்துவார்த்தமான படைப்பு. ஆழ்மன உணர்வின் நெருக்குதலில் கொட்டப்பட்ட உணர்வின் மொழி. அந்த மொழிக்கான மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலானது. அவரவர்க்கு ஒரு புரிதல் உண்டு. அந்த வகையில் இந்தக் கவிதை எனக்குச் சொன்ன மொழியில் எனது பார்வை இது.



-    தொடரும்