ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் ஓர் உரையாடல்

எம். கருணாகரனின் கவிதை மொழிகவிதைகளுடன் ஓர் உரையாடல்எம்.சேகர்


தொடர் (2)

வேண்டுதல்

கடவுளிடம் கேட்டுப் பார்க்கலாம்
புண்ணிய ஆத்மாக்களின்
வருகைக்கானக் கால அளவை
நீட்டி வைக்காமல்
வேண்டுதலை நிறைவேற்ற
சீக்கிரம்
வருகையை துரிதப்படுத்தலாம்
என்று


வந்து போகின்றவர்களின்
ஆத்ம பரிவர்த்தனை
ஆக்கத்தையழித்து ஆழிவுகளைக்
கொடுத்துக் கொண்டிருக்கிறது


மனிதம் அழித்து மனிதம் வாழ
உபாசனைகள் தொடர்வதைத்
தடுக்க முடிவதில்லை


கடவுளைத் தேடிப் போனேன்


அவர் மழுங்கியக் கத்தியைத்
தீட்டிக் கொண்டிருந்தார்


சமுதாயத்தின் ஓர் அங்கமாக அதனோடு இணைந்தும் முரண்பட்டும் இசைந்தும் மோதியும் ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் சூழலில் வாழ்பவன் மனிதன். மனித குலத்தின் வாழ்க்கை நடைமுறைகளினால் அவனுக்கு ஏற்படும் உணர்வுநிலையின் ஒரு வெளிப்பாடாக அவனுக்குள் குமுறிக்கொண்டிருப்பதை எழுத்துகளாக உருமாற்றி வெளிக்கொணருகின்றான். அவன் வெளிக்கொணரும் அத்தகைய எழுத்துகளில் அவனும் இருக்கிறான். அவனைப்போன்ற பிறரும் இருக்கிறார்கள். அவனைப் போன்ற பிறரும் அதனை எதிர்கொள்கின்றனர். எனவே ஒரு படைப்பானது அதன் தோற்றம், அதன் பொருள், அதன் பயன்பாடு ஆகிய மூன்று நிலைகளிலும் மனிதனோடு தொடர்புடையதாக விளங்குவது இங்குத் தவிர்க்க இயலாததாகிவிட்டது.


இக்கவிதையின் முதல் வாக்கியமும், 

 /கடவுளிடம் கேட்டுப் பார்க்கலாம்/

இறுதி வாக்கியமும்,

 /அவர் மழுங்கியக் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்தார்/

என இக்கவிதையின் ஆதியும் அந்தமும் முரண்பட்டு நின்று சமகால வாழ்வியலின் சமூக, பொருளாதார, சமய தார்மீக நியாயங்களின் முரண்களைச் சுட்டி நிற்கின்றன. கூடவே நம்மவர்கள், கொடுமை கொடுமைன்னு கோயிலிக்குப் போனா அங்கொரு கொடுமை அவுத்துப்போட்டு ஆடுதுன்னு சொல்வதுபோலத்தான் இக்கவிதையும் இயலாமையின் எதார்த்தத்தை மிகவும் இயல்பாகச் சொல்லிச் செல்கிறது.


புண்ணிய ஆத்மாக்களின் வருகையை வேண்டி கவிதை நகருகிறது. எவை இந்தப் புண்ணிய ஆத்மாக்கள்? அவைகளின் தேவைகள் என்ன? இப்புவியில் அவை ஜனிக்கவேண்டிய அவசியம்தான் என்ன? இப்படிப் பல கேள்விகள் இவ்வரியை உள்வாங்கியபோது தோன்றுகிறது. சமகால உலக நடப்புகளும் போர்களும் தீவிரவாதத் தாக்குதல்களும் உள்நாட்டின் இன, மத பேதங்களும் அதனாலான ஒரு சமூகத்தின் பேரிழப்புகளும் மன உளைச்சல்களும் அதற்கான காரணிகளாக இருக்கலாம். இந்து மத நம்பிக்கையின்படி உலகம் மனித உறவு, மரபார்ந்த வாழ்க்கை முறை, பண்பாடு, அரசியல் என அனைத்திலும் சீரழியும்போது கடவுள் கல்கி அவதாரம் எடுப்பார் எனக் கூறப்படுகிறது. அந்தக் கல்கியைக்கூட இக்கவிதை வேண்டி அழைத்திருக்கலாம்.


தாங்க இயலா மனவேதனையோடு விரக்தியின் எல்லையில் பல நெருக்கடிகளுக்குள்ளே சிக்கித்தவித்து நின்றுகொண்டிருக்கும் ஒரு மனிதனின் இயல்பான எண்ணவோட்டங்களையும் இயலாமையையும் இக்கவிதை பதிவு செய்திருக்கிறது.


/மனிதம் அழித்து மனிதம் வாழ உபாசனைகள் தொடர்வதைத் தடுக்க முடிவதில்லை/ என்ற வரியும் /கடவுள் மழுங்கியக் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்தார்/ 

என்ற வரியும் மனிதனால் மனிதனுக்கே ஏற்படும் உபாதைகளையும் அழிவுகளையும் உயிர்ச்சேதங்களையும் உலக நடப்பியலையும் உணர்த்துகிறது. மனிதனை நல்வழிப்படுத்த அவனால் உருவாக்கப்பட்ட மதங்களாலேயே அவன் இன்று தன்னையும் அழித்துக்கொண்டு மற்றவர்களையும் அழித்து, கஷ்டப்பட்டு நிர்மாணித்துள்ள இந்த அழகிய உலக வாழ்க்கையையும் அழித்துக்கொண்டு திரிகிறான் என்பதைப் பாடுபொருளாகக் கொண்டு இக்கவிதை பயணிக்கிறது என்றால் அது மிகையாகாது.


ஒரு கவிஞனின் எழுத்தானது வெளிப்பட்டுக் கிடப்பதைக் கவிதைக்குள் மறைத்துக் காட்டுவதாகும். வாசகன் என்பவன் கவிதைக்குள் மறைந்துகிடப்பதைத் தன் வாசிப்புத் திறன், கருத்தறிதல் திறன், பொருட் திறன் கொண்டு அறிந்துகொள்பவனாகவும் வெளிக்காட்டுபவனாகவும் இருக்கவேண்டும். இவ்விரண்டு புரிதல்களும் ஒரு கவிதைக்குள் நிகழ்கின்றபோதுதான் கவிதை இங்கு முழுமையடைகிறது.


-    தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக