சனி, 18 பிப்ரவரி, 2017

கவிதைகளுடன் ஓர் உரையாடல் - மக்கள் ஓசை கட்டுரைத் தொடர்

எம். கருணாகரனின் கவிதை மொழிகவிதைகளுடன் ஓர் உரையாடல்எம்.சேகர்






நாவல்களை ஒரு முறை படித்தவுடன் அதன் கதை தெரிந்துவிடுகிறது. அவற்றை நான் திரும்பப் படிப்பதில்லை. இதற்கு மாறாக, கவிதை நூல்களை நான் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். ஏனெனில், கவிதை என்பது ஒவ்வொருமுறை படிக்கும்போதும் உங்கள் மனநிலைக்கேற்ப அது தரும் உணர்வுகள் மாறுகின்றன என்கிறார் கியாரெஸ்தமி. அவரின் கூற்றுக்கு இசைவாக இந்தக் கவிதைகள் தரும் மொழியும் அதன் புரிதலும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வேறுபட்டு புதியதொரு மொழியாடலையும் புத்தம் புதிய புரிதல்களையும் கொடுத்துக்கொண்டிருக்கும் வல்லமை வாய்ந்தவையாகும்.


மலேசிய எழுத்துலகில் தவிர்க்க முடியாத ஓர் இலக்கிய ஆளுமையான திரு. எம்.கருணாகரன் அவர்கள் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை என இயங்கிக்கொண்டிருப்பவர். 1980 களில் சுபன், சுங்கைவே என்ற பெயரில் எழுதி வந்தவர் பின்னாளில் சிரம்பானுக்குத் தகவல் இலாகவில் பணிநிமித்தமாக மாற்றலாகி வந்த பிறகு, எம். கருணாகரன் என்ற பெயரில் தொடர்ந்து எழுதி வருகிறார். தேசிய அளவிலான சிறுகதை, கவிதை போட்டிகளில் பல பரிசுகளையும் வென்றுள்ளார். சென்ற ஆண்டு மழைச்சாரலின் 2016 க்கான இலக்கிய விருதினையும் பெற்றுள்ளார்.


அண்மைய காலமாக அவர் எழுதிய சில கவிதைகள் என் பார்வைக்கு வந்தபோது, அந்தக் கவிதைகளின் மொழியும் சொல்லாடல்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவ்வகையில் எம்.கருணாகரனின் கவிதைகளுடன் எனக்கான புரிதலை அதன் உரையாடலை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே இக்கட்டுரைத்தொடராகும்.

(1)

தொலைந்து போன நான்

இன்றைய நாளின் நகர்வு
விசித்திரமானது


காலையில் தேடி வந்து
உணவு முடித்துப்போகும்
ஆறுமுகத்தைக் காணோம்
கடன்கள் மூச்சு முட்ட முண்டியடித்தும்
முகம் வாடாமல் சிரிக்கும்
பொன்னையா எங்கே
நீண்ட நாள் பழகியும் இன்னமும்
நண்பனாய் முகம் காட்டாத
தாடிக்கார முகமது
கணினி திரையில்
காலையில் முகம் புதைத்து
மாலையில் கோபம் காட்டும்
ஷாஹருடின்
விடியற்காலை கனவில்
திடீரெனக் காட்டுக் கத்தலாய்க்
கத்தும் அவளும்
இன்னும் கொஞ்ச நேரமெனும்
மகனின் வேண்டுதலும்
இல்லாதது விசித்திரமானது


சிறகுகள் முளைக்கப் பறந்துகொண்டிருந்தேன்
இதமாக வருடிப்போகும் காற்று
மேகக்கூட்டத்தில் குளிர்
நட்சத்திரக் கூட்டத்தில்
நான் வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன்


ரொம்ப கிட்டத்தில் நிலவின் ஒளி
நான் பறந்துகொண்டிருக்கிறேன்


புற்றுநோயில் உயிர் பிரிந்த
அம்மாவின் கடைசி நிமிடம்
முதல் காதலில் திரும்பிப்போன
காதலியின் கண்
நட்பு முறித்த நண்பனின் முகம்
வாழ்வில் தோற்றதால்
காரி உமிழ்ந்த
அவளின் கடைசி சொல்


இன்னும் எல்லாம்
பறக்க பறக்க இறகுகள் உதிர
பறந்துகொண்டே கீழே பார்த்தேன்


எனது கார்
என்னைக் காணோம்

 - எம்.கருணாகரன்


வாழ்வின் நிலையாமையை மிகவும் எளிய கவிதை மொழிநடையில் சொல்லிச் செல்லும் கவிதை எம்.கருணாகரனின், தொலைந்து போன நான்’. இக்கவிதை யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான சர்ரியலிசக் கவிதையாக வகைப்படுத்தலாம். ஒரு படைப்பாளன் படைப்பாளனாக மட்டும் இருந்துகொண்டு எழுதும் படைப்புகளை இதுபோன்ற ஆய்வுகள்தான் முன்னெடுத்துச் சொல்லக்கூடியதாக இருக்கும். அப்போதுதான் இக்கவிதை மற்றவர்களாலும் பேசப்படும். இலக்கிய ஆய்வுக் களங்கள் மிகவும் குறைந்து இருக்கின்ற நம் நாட்டில் இதுபோன்ற ஆய்வுகள்தான் நம் படைப்பை மற்றவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதாக அமையும். உலக இலக்கிய அரங்கில் நமக்கான அடையாளங்களாக அடுத்தடுத்த கட்டங்களில் முன்னகரவும் இதுபோன்ற ஆய்வுகள் உதவும் என ஆணித்தரமாக நம்புகிறேன்.


படைப்பாளன் தன் உணர்ச்சி மேலிட்டால் உருவமைக்கும் சொற்களுக்குப் பொருள் தேடுவது என்பது மிகவும் எளிதல்ல. சிலருக்கு அது எளிதில் சென்றடையும். பலருக்கு பல வாசிப்புகளின் மூலம் சென்றடையலாம். சிலருக்கு விளக்கம் கொடுத்த பிறகு சென்றடையலாம். ஓரிருவருக்கு கடைசிவரை புரிந்துகொள்ள முடியாததாகவே போகலாம். எது எப்படி இருப்பினும் படைப்பாளனின் அந்தக் கணநேர உணர்ச்சிப் பிழம்புகள் வெவ்வேறு புரிதல்களை வாசிப்பவனுக்கக் கொடுத்துச் செல்வது நவீன படைப்பாக்கத்தின் ஓர் உச்சக் கூறாகும்.


இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கும்? இதுவரை விடை தெரியாத ஒரு கேள்வி இது. இக்கேள்விக்கு விடை காண பல ஞானிகளும் சித்தர்களும் தீவிரமாக முயன்றிருக்கிறார்கள். புத்தரும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடி ஞானம் பெற்றார். வாழ்க்கை நெறிக்கான பல விசயங்களைப் போதனையாகச் சொல்லிச் சென்றார். மறுபிறப்பு என்பது கர்மவினைகளுக்கு ஏற்ப விளையும் என்பதும் பலரின் நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. எது எப்படி இருப்பினும், இறப்புக்குப் பிறகு என்ன? என்பது இந்த நிமிடம்வரை புரியாத புதிர்தான். ஆனால் அந்தப் புதிருக்கு ஒரு கவிமனம் விடை காணத்துடித்துத் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு தானும் பறக்க ஆரம்பித்துவிட்டது ஒரு விடுதலை உணர்வேந்தலுடன்.


சிறகுகள் முளைக்கப் பறந்து கொண்டிருக்கிறேன்/இதமாக வருடிப்போகும் காற்று/மேகக் கூட்டத்தில் குளிர்/நட்சத்திரக் கூட்டத்தில் நான்/வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன்/ரொம்ப கிட்டத்தில் நிலவின் ஒளி/நான் பறந்துகொண்டிருக்கிறேன்/


இவ்வரிகளே இக்கவிதையின் உச்சங்கள். காட்சிப் படிமக்கூறுகள் இறப்பிற்குப் பின்னும் முன்னகர்ந்து விரிகின்றன. இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு வாழாத வாழ்க்கைக்குள் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன இவ்வரிகள்.


பறக்கும்போது ஏற்படும் அந்த உணர்வை இதமாக வருடிப்போகும் காற்றோடு ஒப்புமைப்படுத்திச் சொல்லியிருப்பதும் மேகக் கூட்டத்தில் குளிர் என்பது மழையை மடியில் வைத்து அலைந்துகொண்டிருக்கும் மேகங்களுக்கு இடையில் நாம் பறக்கும்போது ஏற்படும் சில்லென்ற உணர்வையும் நட்சத்திரக் கூட்டத்தில் நான் வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன் என்பது ஆத்மா இப்பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து விடுவதைக் குறியீடாகக் காட்டுவதாக நான் புரிந்துகொள்கிறேன். இறப்பிற்குப் பின் இருக்கும் அந்த இருண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு விடயமாகவே இக்கவிதையைப் பார்க்கிறேன்.


பறக்கப் பறக்க/ இறகுகள் உதிர/ பறந்துகொண்டே கீழே பார்த்தேன்/


பறக்கப் பறக்க இறகுகள் உதிர்வது எதை உணத்துகிறது என என்னை நானே கேட்டுக்கொண்டேன். இறுதிவரை பறக்க இயலாத ஒன்றாகவும் தன் இலக்கை நோக்கி அடைய முடியாத ஒரு மயக்க நிலையாகவும் இவ்வரிகள் தோன்றம் அளிக்கின்றன. இறகுகள் எல்லாம் உதிர்ந்துபோனால் அதன் பிறகு எங்கணம் பறப்பது? அதையம் மீறி பறப்பதுதான் கவிஞனின் கற்பனா சக்தி. இங்கேதான் கவிதையும் வாழ்கிறது. நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படாத அல்லது நிறைவேற்ற இயலாமல் போனவற்றிலிருந்து விடுபடுவதின் குறியீடாகவே இவ்வரிகள் புலப்படுகின்றன.


ஒரு சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கவிதையின் ஆரம்பம் தொட்டு மிக இயல்பாகப் படம்பிடித்துக் கொண்டு போகும் கவிஞனின் கவிமனம், மெல்ல மெல்ல தனக்கான இலக்கை, தன் அனுபவம் சார்ந்த வாழ்வியலோடும் அது சார்ந்த நெருடலுடன், தான் சொல்ல வந்ததை நோக்கி மிக நேர்த்தியாக நகர்ந்திருப்பது இக்கவிதையின் சிறப்பாகும். எளிய சொல்லாடல்களும் காணோம்’, ரொம்ப கிட்டத்தில் போன்ற பேச்சு வழக்குச் சொற்களும் கவிஞன் வாசகனைத் தன் வசப்படுத்தவும் நெருக்கமாக உரையாடவும் மேற்கொண்ட ஓர் உத்தியாகவே அமைந்திருக்கிறது எனலாம்.


நிறைவாக, எனது தனிப்பட்ட கருத்து இது.
எனது கார்/என்னைக் காணோம்


இவ்வரிகள் இல்லாமல் இருந்திருந்தால் இக்கவிதை இன்னும் சிறந்திருக்கும் என்றே தோன்றுகிறது.



-    தொடரும்  - ( நன்றி மக்கள் ஓசை - 19 - 02 - 2017)

(
(

2 கருத்துகள்: