புதன், 21 செப்டம்பர், 2016

மனத்தோடு மழைச்சாரல் மும்மொழிக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டில் எனது நூல் பார்வை


மனத்தோடு மழைச்சாரல் – எம்.சேகர்

மனத்தோடு மழைச்சாரல் – நம்    
மனத்தோடு உறவாடும்
கவிமனத்தோடு உறவாடும்

தெளிவாகச் சொல்லியதை – நம்
செவியோடு சேர்த்திடும்
மனச்செவியோடு சேர்த்திடும்

உறவாக நின்றவை – நம்
உயிர்மூச்சில் கலந்திடும்
உயிர்மூச்சில் நிறைந்திடும்

கவியென்று சொல்லிவந்ததை – நம்
கவிதைகளாக நூலாக்கித்
தொகுத்து வந்தோம்

மழைச்சாரலின் மனத்தோடு – நம்
கவிமனத்தோடு உறவாடுவோம்

அனைவருக்கும் வணக்கம்.
கவிமனத்துக்கு எப்போதும் துணையாக வருவது கவிதையைத்தவிர வேறெதுவுமில்லை. எவ்விதமான மனச்சலனத்துக்கும் மாற்றாக பலரின் வாழ்க்கையில் மருந்தாகக் கவிதைதான் இருக்கிறது. எழுதப்பட்டாலும் அல்லது எழுதப்படாதிருந்தாலும் மனித மனத்துக்குள் கவிதை உருவான வண்ணமே இருக்கிறது. ஆகவே நிகழ்வுகளை அர்த்தமுள்ளவைகளாகவும் அர்த்தமற்றவைகளாகவும் கவிதை அடையாளம் காட்டுகிறது.


இக்கவிதையானது மொழியின் எந்தப் பரிமாணத்திலும் ஒன்றிப்போவதாயும் இருக்கிறது. எப்போதும் நமக்கானதாய் , சகமனிதனுக்கானதாய் , சமூகத்தின் சகலவிதமான சங்கடங்களின் வலி நிறைந்ததாய் - காக்கைக்கும் குருவிக்கும், வாடிய பயிருக்கும் கவனம் தருவதாய் இருக்கிறது கவிதை.
பாரதிக்குப் பின், தமிழ்க்கவிதை ஒரு புதிய பாதையில் பயணித்தது.
சுவை புதிது
பொருள் பொதிது வளம் புதிது
சொற் புதிது சோதிமிக்க நவகவிதை
என்றார் பாரதி.


கற்றோராலும் சான்றோராலும் மட்டும் தாலாட்டும் மொழியாக இருந்த தமிழைச் சாதாரண மக்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தவரும் இவரே.
நம்மைச் சுற்றியுள்ள சூழலிருந்து நம்மை வேறுபடுத்திக் கொள்ள முடியாது. அச்சூழலிருந்து உருவாகுவதுதான் இலக்கியம். இலக்கியம் என்பது வெறும் கற்பனை மட்டும் அல்ல. இலக்கியத்தினுள் நாம் நம்மைக் காண்கிறோம். நம் வாழ்க்கையைப் பார்க்கிறோம். இலக்கியம் இல்லாமல் மனிதனும் இல்லை.


எத்தகைய அதிநவீன விரைவு ரயில் வசதி இருந்தாலும்கூட, மக்கள் அதில் பயணம் செய்யவில்லையென்றால் அத்தகைய நவீனம்கூட யாருக்கும் பயனற்றதாகிவிடும். கவிதையும் அப்படித்தான். எத்தளத்தில் இயங்கினாலும் அது வாசகனைச் சென்றடையவேண்டும். இல்லையென்றால் அவ்வித படைப்பினால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை.


கவிதை என்பது வெறும் எதுகை மோனை மட்டும் கொண்டதல்ல. மரபை அடிப்படையாகக்கொண்டு எழுதுபவை யாவும் கவிதையும் அல்ல. அதில் கவித்துவம் இருக்கவேண்டும். கவித்துவத்தின் ஒரு கூறுதான் கவிதை. கவித்திறன் என்பது படைப்புத் திறனைக் குறிக்கும்.


எந்த ஒரு கலைப்படைப்பும் உணர்வுகளின் கடத்துதல்தான். குளிர்காற்று வீசுகிறது என்றல் அந்தக் குளிரின் தாக்கத்தைப் படிப்பவன் உணரவேண்டும். நெருப்பு சுடுகிறது என்று எழுதினால் அதே உணர்வும் வலியும் வாசிக்கிறவர்களும் உணரத்தக்கதாக இருத்தல் வேண்டும்.கவிதை என்பது மனம் சார்ந்தது.
நடப்புச் சார்ந்த விஷயங்களில் மனம் லயித்துப்போய், அந்த உணர்வுகளின் தாக்கத்தால் மனத்திலே செதுக்கிய சொல்லோவியங்கள் எழுத்துகளாக உருப்பெறும்போது, பல வடிவங்களில் வந்து விழுகின்றன. மேலும் கவிதை என்பது வடிவம், வகைகள், வரையறை, கூறுகள், உத்திகள் போன்ற புறங்களைச் சாராமல் முழுக்க முழுக்க தன் அக அடக்கத்தில் இருப்பதாகும்.
புனைவில் ஈடுபாட்டையும் விளைவையும் தாக்கத்தையும் உண்டாக்கும் மொழிக்கட்டமைப்பாக எழுநடை (style) விளங்குகிறது. உரைநடையின் தனித்துவமும் கவிதையின் தனித்துவமும் எழுநடையால் உயிர்ப்பூட்டப் படுகின்றன. புனைவின் பொருளையும் அதனை மொழியாக உருக்கொடுத்தலையும் உள்ளடக்கிய முழுப் பொருளாக எழுநடை அமைகிறது. மேலும் சொல்வழியான புலக்காட்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது எழுநடை.


எ.கா. 1. தென்னை மரம் நிற்கிறது

              2. தென்னை மரம் தலைவிரிக்கோலமாக நிற்கிறது

இதில் முதல் வாக்கியம், மரத்துக்குரிய பொதுவான எண்ணக்கருவை மட்டும்தான் கொடுக்கிறது. இரண்டாவது வாக்கியம், முதல் வாக்கியத்தின் பொருளையும் தாண்டி விரிந்து செல்கிறது.


இதன் அடிப்படையில் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் பல கவிதைபுனைவு தளத்தில் புதிய உத்திகளையும் புதிய பரிமாணங்களையும் எதிர்காலத்தில் மலேசியக் கவிதையுலகிற்கு அறிமுகப்படுத்தும் என்ற நம்பிக்கையை நம் மனத்தில் விதைத்துவிட்டுச் செல்கின்றன. இவர்களில் பலர் புதியவர்கள். இளையர்கள். இனி தொடரும் இயக்கத்தில் பல பரிசோதனை முயற்சிகள் இவர்களால் சாத்தியமாகக்கூடும். நவீன படைப்பாளர்களாக நாளை இவர்களாலும் நம் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லமுடியும்.


இத்தொகுப்பின் முதன்மை நோக்கமானது, மழைச்சாரல் புலனத்தில் பதிவிடும் படைப்புகளை ஆவணப்படுத்துதலே ஆகும். ஆயிரம் கவிதைகள் எழுதியும் ஒரு நூல்கூட வெளியிடமுடியாமல் இருக்கும் நம் நாட்டுச் சூழலில், இதுபோன்ற தொகுப்புகள் ஓரளவிற்காகவும் நம் படைப்புகளை ஆவணப்படுத்தும் என்ற நம்பிக்கையின் சிறுமுயற்சியே இந்த, மனத்தோடு மழைச்சாரல் என்ற கவிதை நூல்.


இத்தொகுப்பின் தனிச்சிறப்பானது, இந்நூல் மும்மொழியில் வந்திருப்பது. மலேசிய இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக இந்த நூல் நம் கவிதைகளை மலாய் மொழியிலும் ஆங்கில மொழியிலும் வாசிக்கும் வாய்ப்பைத் தந்திருப்பது பெருமைப்படக்கூடிய ஒரு விடயமாகும். இந்நூல் பரவலாக அனைத்துத் தரப்பினராலும் வாசிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. மேலும் இந்தக் கவிதைத் தொகுப்பின் படைப்பாளர்களே அனைத்து செலவுகளையுமே பகிர்ந்துகொண்டு இந்நூலை வெற்றியடையச் செய்திருப்பதானது மலேசியச் சூழலில் புதியதும் புதிமையானதும்கூட. இந்த ஒற்றுமையுணர்வும் இலக்கிய உணர்வும் என்றும் நீடித்து நிலைக்க என்றும் வாழ்த்துவோம். உறுதிணையாக நிற்போம்.


இத்தொகுப்பில், சில கவிதைகளாகவும் சில காட்சிப் படிமங்களாகவும் சில நிகழ்ச்சிப் பதிவுகளாகவும் சில சொற்றொடர்களாகவும் தத்தம் சுயபரிமாணத்தோடு நிற்கின்றன. ஆனாலும் அனைத்தும் மனத்தோடு உறவாடும் என்பதும் மறுப்பதற்கில்லை.


கவிதைகளைப் படித்து
கவிதைகளோடு உறவாடுங்கள்
கவிதைகள் உங்கள் வசப்படும்


அன்புடன் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக