சனி, 17 செப்டம்பர், 2016

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள் – ஒரு பார்வை

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள் – ஒரு பார்வை


நாம் வாழும் நாடு, சமூகம், சூழல், மனித மனங்கள் என ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பாக ஒரு படைப்பு என்பது அமைவது சிறப்பானதாகும். நாம் அறிந்திடாத பல வரலாற்றுச் செய்திகளைச் சங்க பாடல்கள் வரலாற்றுச் சான்றுகளாகச் சுட்டுகிறதோ அதுபோலவே இன்றைய இலக்கியப் படைப்பாக்கங்களும் சமகால வாழ்க்கையின் பதிவுகளாக அமைதல் சிறப்பாக இருக்கும். சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக்கொண்டோ அல்லது சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சமூகச் சிக்கலை அடிப்படையாகக்கொண்டோ அல்லது தனியொரு மனிதனின் எண்ணத் தெறிப்புகளை அடிப்படையாகக்கொண்டோ புனையப்படுகிறது.


அறிஞர் ரோக்கோ ஃபியூமெண்டொ பெரும்பாலான சிறுகதைகள் நிகழ்ச்சி, சூழல், கதாபாத்திரப் படைப்பு, கருப்பொருள் என இந்த நான்கு வகைகளுக்குள் அடங்கிவிடுகின்றன என்கிறார்.
மக்கள் ஓசையின் கடிகாரக்கதைகள் தொடர்வரிசையில் இடம்பெறும் கதைகளும் மேலே கூறியுள்ள நான்கு வகைகளில் ஏதோ ஒரு வகையில் அடங்கிவிடுகின்றன என்றே கூறவேண்டும்

.
நடுத்தெருவில் ஒரு தமிழ்க் குடும்பம் மா. இராமையா
24 ஜூலை 2016


கதையின் தலைப்பு என்பது கதையில் வாசலாக அமைவது. அந்த வாசலின் வழியாகத்தான் வாசகன் கதைக்குள்ளே நுழைய முற்படுவான். எனவேதான் ஒரு கதையின் தலைப்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மூத்த எழுத்தாளர், இலக்கியக்குரிசில் மா. இராமையாவின் இந்தப் புனைவிற்குள் நாம் உட்புகுவதற்கு இந்தத் தலைப்பே ஒரு தடையாகவும் இருக்கிறது. தலைப்பே இதுதான் கதை எனச் சொல்லிவிடுவதால், கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை ஊகிக்கக்கூடத் தேவையில்லாமல் செய்துவிடுகிறது.
இதுபோன்ற தலைப்புகள் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வேண்டுமானால் பிரசித்துப் பெற்றிருக்கலாம். ஆனால் இன்றைய சிறுகதைகளானது அதன் படைப்பாக்கத்தில் அபரிதமான வளர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு சிறந்து விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது. அவை நவீன கதைகள், பின்நவீனத்துவக் கதைகள் என வாசகனுக்கு வெவ்வேறு தளங்களில் வாசிப்பனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.


கதைக்கரு தோட்டப் பாட்டாளிகளின் இயலாமையையும் இல்லாமையையும் முன்னிருத்தி நகருகின்றது. அகிலன் தனது, பால்மரக் காட்டினிலே நாவலில் பதிவு செய்திருந்த தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் இன்றளவும் நம் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதைச் சுட்டுகிறது. தோட்டப் பாட்டாளிகள் முதலாளிகளாலும் மேம்பாட்டு நிறுவனங்களாலும் ஏமாற்றப்படுவதையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நம்மினத்தவர்களே, தலைவர்கள் எனச் சொல்லிக்கொண்டு இந்த அப்பாவி தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமாய்க் கிடைக்கவேண்டியவற்றைத் தங்களின் சேமிப்புகளில் நிரப்பிக்கொள்வதைத்தான் இன்றும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்ட தலைவர்களை இக்கதை அடையாளம் காட்டிச் செல்கிறது.


மா. இராமையாவின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாய் இக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. கண்ணாயிரம், அஞ்சலை, கந்தசாமி, மணியரசு, முனியம்மாள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நிஜவாழ்வின் அச்சுப்பிரதிகளாக வந்துபோகின்றன. ஒரு படைப்பாளனால் உருவாக்கப்படும் கற்பனைக் கதாபாத்திரங்கள் வாசிப்பவனின் பொது அனுபவத்தோடு உறவாடுகின்றன. வாழும் மனிதனின் சூழலையும் பிரச்சனைகளையும் தங்கள்மேல் ஏற்றிக்கொண்டு சவாரி செய்கின்றன. மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பின், கொடிகட்டி வாழ்ந்த செட்டியார்கள் நாட்டை விட்டுச் சென்றதற்கும் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, அனைத்துச் சொத்துகளும் பொதுவுடைமையாக்கப்பட்ட போது, பர்மாவில் அனைத்தையும் இழந்த தமிழர்களையும் ஒப்புவமையாகப் கதாபாத்திரங்களின் உரையாடலின் வழி சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. சில வரலாற்றுச் செய்திகளை இதுபோன்ற கதைகளில் தருவதன்மூலம் அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டிய பல விடயங்களை நம்மால் முன்வைக்க முடிகிறது. இதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.


சென்ற தலைமுறை தோட்டத்திலேயே அமுங்கிபோய் விட்டதையும் அங்கிருந்து வெளியே வந்தாலும் ஏதாவது ஒரு புறம்போக்கு நிலத்திலும் அதன் வாழ்க்கையை நிறைவு செய்யும் வேளையில், அவர்களின் பிள்ளைகளோ தோட்டத்து வாழ்க்கையே வேண்டாம் என நகரத்தை நோக்கி ஓடுவதையும் மணியரசு மூலமாக உணர்த்தியுள்ளார் கதாசிரியர். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என உழைக்கும் இளைய வர்க்கத்தின் குரலாகப் படைக்கப்பட்டிருக்கிறது அவனின் பாத்திரப் படைப்பு.
தமிழ் சமூகம், இனி அரசாங்கத்தையும் சமூகத் தலைவர்களையும் நம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை மிகவும் சூட்சமமாகக் கதையுனூடே பதிவு செய்திருக்கிறார் கதாசிரியர் மா. இராமையா அவர்கள்.

கண்களை விற்றால் ஓவியம் – முனீஸ்வரன்
31 ஜூலை 2016


கணவன் மனைவி உறவில் ஏற்படும் சிக்கல்களும் அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளும் இக்கதையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு என்பது ஒரு தாயின் எதிர்பார்ப்பாகவோ ஒரு தந்தையின் எதிர்பார்ப்பாகவோ ஒரு கணவனின் எதிர்பார்ப்பாகவோ ஒரு மனைவியின் எதிர்பார்ப்பாகவோ, இப்படி ஏதாவது ஒரு வகையில் எதிர்பார்ப்பு என்பது மனிதனின் உளவியலோடு இயைந்திருந்து அவனையறியாமலேயே அவனை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறது.


இக்கதையில் வரும் மாமணிக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதுபோல அவன் மனைவி வடிவுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இருவருக்கும் இருக்கும் எதிர்பார்ப்புகள் முரணாக வந்து நிற்கையில் அவர்களுக்கான வாழ்க்கை அங்கே தொலைந்துபோகிறது.


இன்றைய சூழலில் நமது தமிழ்க் குடும்பங்களில் பரவலாக நடக்கும் ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டு கதாசிரியர் கதை சொல்லியிருக்கிறார். வீட்டுக்கு வீடு ஒரு கோயில் எனப் போகும் அளவுக்கு பூசையும் அதற்கான காரணகாரியங்களும் இன்றைய நமது சமூக வாழ்க்கைத் தட்டின் பெரும்பகுதியை நிறைத்துக்கொண்டிருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.


பக்தி என்ற மாயைக்குள் மயங்கிக்கிடக்கும் சமூகத்தின் ஒரு பகுதியினரின் பிரதிநிதியாக இந்த வடிவுக்கரசியின் கதாபாத்திரம் உருவாக்கம் பெற்றுள்ளது. அவளைப் பொருத்தவரையில் அவள் செய்யும் அனைத்து பூசைகளும் குடும்ப நலனுக்காக மட்டுமே என நினைக்கிறாள். கணவன் நீடூழி வாழவேண்டும், தான் என்றும் சுமங்கலியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு குருஜியின் வழிபாட்டுதலின் வழி பூசை, யாகம் என ஈடுபட்டு, ஒரு மனைவியாகத் தான் செய்யவேண்டிய முதன்மைக் கடமைகளை மறந்துபோகிறாள். இறுதிவரையில் அதை உணராமல் தாய் வீட்டோடு வந்து, வாழாவெட்டி என்ற பெயரெடுத்தாலும் தான் சுதந்திரமாக இருப்பதே முக்கியம் என்றே வாழ்கிறாள். இக்கால பெண்களின் சிலரின் மனநிலைகளை அப்படியே இப்பாத்திரத்தின் மூலம் கதையாக்கியுள்ளார் கதாசிரியர் முனீஸ்வரன்.


மாமணியின் மூலம் ஒரு கணவனின் சாதாரண எதிர்பார்ப்புகள்கூட நிறைவேறாத சூழலைப் பதிவு செய்துள்ளது இச்சிறுகதை. மனைவி என்பவள் இருந்தும் இல்லாத வாழ்க்கை அவனுக்கு.  இக்கதையின் வழி கதாசிரியர் இந்த நவநாகரிக கால சமூகத்தில் பல ஆண்களின் நிலையை மிகவும் இயல்பாகச் சுட்டிச் சென்றுள்ளார்.


தனிமையின் வாழ்க்கையின் உச்சமாக மாமணி, அஃறிணை கதாபாத்திரங்களுடன் உரையாடுவது போன்ற காட்சி அமைப்புகள் அவனின் வெறுமையை உணர்த்தும் வணணம் மிகவும் யதார்த்தமாகக் கையாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. சுவர்க்காரம், தொலைபேசி என அந்தப் பாணியிலேயே வந்துசெல்லும் பணிப்பெண் கதாபாத்திரமும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.


பல நல்ல தமிழ்ச் சொற்களும் சொல்லாடல்களும் கதைக்குப் பலமாக நிற்கின்றன. பொதுவாக, ஷோஃபா என்று பரவலாக எழுதப்படுவதை, மெது இருக்கை என எழுத்தாளர் பயன்படுத்தியிருப்பது வரவேற்கக்கூடியதாகும். மேலும், காஃபி ஆறிக்கொண்டிருந்தது. மாமணி சூடேறிக்கொண்டிருந்தான் போன்ற சொல்லாடல்களும் கதையின் பல பகுதிகளில் வந்து செல்கிறது.


சமூகச் சிந்தனையுடன் புனையப்பட்ட ஒரு படைப்பாகவே இக்கதையை நான் பார்க்கிறேன். சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் இதுபோன்ற வாழ்வியல் சிக்கல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது படைப்பாளனின் தார்மீகக் கடமையாகும். அவன் சார்ந்த சமூகத்துக்கு படைப்பாளனின் எழுத்தால் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.


எழுத்தாளர் முனீஸ்வரன் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் சிறந்து சிறப்படைய என் அன்பான நல்வாழ்த்து.

வலைக்குள் மனிதர்கள் - பாவை, பினாங்கு
7 ஆகஸ்ட் 2016


முத்துவேலு என்ற முதியவரின் பார்வையில் கதையை நகர்த்தியிருக்கிறார் கதைச்சொல்லி பாவை அவர்கள். முதிய வயதினருக்கு ஏற்படும் வாழ்வியல் சிக்கல்களையும் மனவியல் சிக்கல்களையும் அடிக்கடி கதாசிரியரே உள்வந்து சொல்வது கதையின் வாசிப்புக்கு இடைஞ்சலாக இருப்பது தவிர்க்கு இயலாததாக இருக்கிறது. தான் சொல்ல வந்த செய்திகளைக் கதாபாத்திரங்களின் உரையாடல்களின் மூலம் வெளிக்கொணர்ந்திருந்தால் இக்கதையானது இன்னும் ஆழமாக வாசகர் மனங்களில் இடம்பெற்றிருக்கும்.


சுய விருப்பத்தின்பேரில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முத்துவேலுவிற்கு நல்லதொரு துணையாய் அந்த இல்லதிற்கு வந்து சேருகிறர் ராசு. ஆரம்பத்தில், தன்னை இந்த இல்லத்தில் விட்டுச் சென்ற மகன்களையும் பேரப்பிள்ளைகளையும் நினைத்து கலங்கும் அவர், முத்துவேலுவின் அன்பாலும் பேச்சாலும் மனமகிழ்ச்சியோடு அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்போது, திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். ராசுவின் பிரிவு முத்துவேலை வாட்ட, மனமாற்றம் வேண்டி தன் மகன் குமரேசனின் வீட்டிற்கு வருகிறார். அங்கு குடும்பம் இருந்தும் தனியாளாக அவர். மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் என அனைவரும் இருந்தும் தனித்த வாழ்க்கை மட்டுமே அவருக்குச் சொந்தமானது.


மின் தொடர்புச் சாதனங்கள், மனிதர்களின் வாழ்க்கையை எந்த அளவிற்கு ஆக்ரமித்துக்கொண்டிருக்கின்றன என்பதையும் வலைக்குள் மனிதர்கள் எப்படியெல்லாம் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும் கதாசிரியரால் விரிவாக கதை முழுக்கு சொல்லப்பட்டிருப்பது இக்கதையை ஒரு பிரசாரக் கதையாகவே அடையாளம் காட்டுகிறது.


முதல் பாதி முதியவர்களின் மன உணர்வுகளும் அவர்களின் ஏக்கங்களும் சொல்லப்பட, பிற்பாதியில் மின் ஊடகங்களால் மனிதர்கள் அவர்களையறியாமலேயே இயந்திரங்களாக மாறி வருகின்றனர் என்பதையும் சொல்கிறது. இரண்டு கதைக் கருக்களை ஒரு சிறுகதைக்குள் வைத்து பயணித்திருப்பதால் கதையின் உணர்வலைகளை வேறொரு திசை நோக்கித் திருப்பப்பட்டடுள்ளதாக நான் கருதுகிறேன். முத்துவேலுவின் மன உணர்வுகளுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்து அவரின் உணர்வலைகளின் மூலமாகவே முழுகதையையும் நகர்த்தியிருந்தால் இக்கதை இன்னும் சிறந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. இன்றைய கதை சொல்லும் போக்கும் விதமும் பாங்கும் முற்றிலும் மாறுபட்ட உருவாக்கத் தாக்கங்களுடன் வாசகனின் வாசிப்புத் திறனுக்கும் சிந்தனைத் திறனுக்கும் மிகவும் சவாலாக இருக்கின்றன.


கதை, தான் சொல்ல வந்த செய்தியை முழுமையாகச் சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறது. எடுத்துக்கொண்ட கதையின் பொருளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு படைப்பாக்கத்தில் கவனம் குறைந்த ஒரு கதையாகவே இக்கதை எனக்குப்படுகிறது. ஆனாலும் சமூகத்துக்குத் தேவையான வாழ்வியல் விழுமியங்களை இக்கதைத் தொட்டுப் பேசி உறவாடியிருப்பது பாராட்டுக்குரியது. மூத்த எழுத்தாளரின் படைப்பு இன்றைய காலத்துச் சிக்கல்களையும் வாழ்வியல் முரண்களையும் முன்வைத்துப் படைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். 


கூழாங்கற்கள் – பொன்.சசிதரன்
14 ஆகஸ்ட் 2016


நல்ல கதைச்சொல்லிகள் குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில் மிகவும் நேர்த்தியாகச் சிறந்தொரு கதைச்சொல்லியாக, இந்தக் கூழாங்கற்கள் மூலமும்  தன் தடத்தைப் பதித்துள்ளார் எழுத்தாளர், கவிஞர் பொன்.சசிதரன்.


சமூக விழுமியங்கள், மரபு, பண்பாடு என அனைத்தையும் தாண்டி நிற்கும் கதை. ஆனால் அழகிய மெல்லிய கோடுகளால் எதையும் கொச்சைப் படுத்திப் பேசாத யதார்த்தமாகக் கதையை நகர்த்திச் சென்ற விதம் மிகவும் பாராட்டுக்குரியது. மலேசியச் சூழலில் பலபேர் வாழ்ந்து வரும் வாழ்கையைப் பதிவு செய்வதில் இக்கதை வெற்றிப்பெற்றிருக்கிறது. காலமும் சூழலும் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுகிறது. இங்கு எல்லாருக்கும் அவரவர் ஆசைப்பட்ட வாழ்க்கை அமைவதில்லை. அப்படி அமைந்தாலும் நிலைப்பதுமில்லை. நிலையாமை ஒன்றே நிலையாகிப்போன உலகம் இது. இங்கு இப்படித்தான் நடக்கும் என்றோ நடக்காது என்றோ எவராலும் கூற இயலாத சூழலே  முதன்மையாக இருக்கிறது.


ஜானுவின் வாழ்வில் முதலில் வருபவன் பாலா. அவனை முழுமையாக நம்பி வீட்டை விட்டு வெளியேறி, அவனோடு வாழ்ந்து குழந்தையைச் சுமக்கிறாள். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் பாலா சிறை செல்ல, அதன்பிறகு அந்த உறவு தொலைந்துபோக, குழந்தையோடு தனித்துவிடப்படும் ஜானுவிற்கு ஆதரவாக வருகிறான் ஸ்ரீராம். ஸ்ரீராம் மணமானவன். மனைவியிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தனித்திருந்த அவனின் வெறுமைக்கு ஜானு ஆதரவாக இருந்தாள். தன் தவறுகளைச் சரிசெய்துகொண்டு மனைவியோடு மட்டும் வாழ அவன் முடிவெடுக்கிறான்.


உனக்காகக் கட்டிலில் நான் இடம் கொடுத்தாலும் சேர்ந்து குடும்பம் நடத்த இயலாது.’ எனப் பிரிந்து செல்கிறான்.


அவனின் இயல்பான நட்பு ஜானுவிற்கு வேண்டும் என இருந்தும் அவனின் இத்தகையப் பேச்சு அவளைப் புண்படுத்தியதால் அமைதியாக இருந்து விடுகிறாள். ஆணாதிக்கமெல்லாம் இக்காலச் சூழலில் இல்லை எனச் சிலர் பிடிவாதமாக வாதிட்டாலும் மறுத்தாலும் ஸ்ரீராம் போன்றவர்களின் செயல்களை நாம் என்னவென்பது? அல்லது நாகரிக வாழ்வின் உச்சம் எனச் சொல்லிக்கொண்டு, உடல் தேவைக்காக ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகச் செயல்படுவது என்பதும் இன்றைய உலகில் மிகவும் சர்வசாதாரணமாகிவிட்ட ஒன்றாக நம் வாழ்வியலிலிருந்து நம் மரபும் பண்பாடும் தொலைந்துகொண்டிருக்கிறது என்பதை இக்கதை மிக இயல்பாகச் சுட்டியுள்ளது.


பாலா பின்னாளில் மதம் மாறி வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் என்ற செய்தியானது இந்நாட்டுச் சூழலில் ஒரு மதத்தின் பரப்புதலும் அதன் சார்ந்த வெளிப்பாடுகளுமே ஆகும். சிறைச்சாலைகளிலும் மருத்துவமனைகளிலும் நம்மவர்கள் மிக எளிதில் மதமாற்றத்துக்கு உட்படுவதையும் பல்லின மக்களின் மொழி, மதம், பண்பாடு ஆகியவற்றுக்கு பாதுகாப்பளித்திருக்கும் இந்நாட்டு அரசியல் சாசனத்தில் நமக்காக உரிமைகளும் சலுகைகளும் பலவித முரணான செயல்பாடுகளால் முன்னெடுக்கப்படாமல் போவதை இக்கதை ஒரு வரியில் சொல்லிச் செல்கிறது.

நித்யா என்ற சிறுமியின் எதிர்காலம் என்ன? என்ற கேள்வி இக்கதையின் இறுதியில் நமக்குள் வியாபித்திருக்குப் பட்சத்தில், இங்கு குறியீடாகக் காட்சிப் படுத்தப்பட்டிருப்பது இந்நாட்டில் நமது அடுத்த தலைமுறையின் எதிர்காலம்தான். இந்தத் தலைமுறைப் பெண்களின் குறியீடாக ஜானுவையும் ஜெயாவையும் அடுத்த தலைமுறையின் குறியீடாக நித்யாவையும் மிகவும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் கதாசிரியர். மேலும், எங்குச் சென்றாலும் எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும் தங்களுக்கான நியாயங்களுடன் வாழ்க்கையையும் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளின் குறியீடாக இக்கதையில் பாலாவும் ஸ்ரீராமும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.


தற்காலச் சூழலில் ஒரு சிலரின் வாழ்வையும் அதற்கான காரணகாரியங்களையும் இக்கதை மிக எளிய நடையிலும் சொல்லாடல்களிலும் காட்சிப்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையாகாது. நல்வாழ்த்து பொன்.சசிதரன்.

நிறைவாக, புனைவிலக்கியத்தின் வாயிலாகப் பலவகையான வாழ்வியல் கூறுகளும் வரலாறும் இனம், மதம் மற்றும் மொழி அடையாளங்களும் நம்பிக்கைகளும் அரசியல், சமூக மாற்றங்களும் மரபும் பண்பாடும் சார்ந்த உருமாற்றங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிவுசெய்யப்படுகின்றன என எழுத்தாளர் எஸ். ரா. அவர்கள் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றுக்கு இசைவாகவே ஏதாவது ஒரு வகையில் இந்த நான்கு கதைகளும் பொருந்தியிருக்கின்றன என்றே கூறவேண்டும்.


இத்தகைய நல்லதொரு முயற்சியை முன்னெடுத்து, எழுத்தாளர்களின் கதைகளைக் கேட்டுப் பிரசுரித்துப் பரிசுகளும் கொடுக்கும் மக்கள் ஓசைக்கும் அதன் ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு. இராஜேந்திரன் அவர்களுக்கும் என்றும் நன்றியுடன்.....

அன்புடன்

எம்.சேகர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக