செவ்வாய், 12 ஏப்ரல், 2016

பால் மரக்காட்டில் நான் - எம்.சேகர்

பால் மரக்காட்டில் நான்

பெட்டாலிங் உயர்நிலைப்பள்ளியில் படிவம் இரண்டில் படித்துக்கொண்டிருந்தபோது எனது பக்கத்து வீட்டு நண்பர் குணா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். பால் மரக்காட்டினிலே எனத் தலைப்பிட்டு அட்டைப்படம்கூட   இரண்டொரு பச்சை வண்ண இரப்பர் மரங்களாகச் சித்திரம் வரையப்பட்டிருந்தது என நினைக்கிறேன். இப்படித்தான் அகிலன் எனக்கு அறிமுகமானார்.

நான் சார்ந்த தோட்டப்பாட்டாளிச் சமூகத்தின் வலியையும் ஏக்கத்தையும் என்னுள் உறையவிட்ட கதைக்கருவோடு கதாமாந்தர்கள் யாவரும் நாம் வாழும் வாழ்க்கையில் உயிருள்ளவர்களாகவும் அகம் மற்றும் புறவய உணர்வுகளை வெளிப்படுத்துபவர்களாகவும் படைக்கப் பட்டிருந்தது என்னை வெகுவாகப் பாதித்தது.

கதையின் முழுநிலை மாந்தரான பாலனின் தீவிரமும் புரட்சி எண்ணங்களும் சமூக நோக்கோடு வரும் அவனின் போராட்ட செயல்பாடுகளும் என் சமூகத்துக்கு நானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை என் மனத்தில் வேரூன்றவைத்தது.

நான் வாழ்ந்த, அறிந்த தோட்டப்புற வாழ்வியல் அவலங்களைவிட இன்னும் அதிகமான இழப்புகளும் அவமானங்களும் பாமரத்தனமான மெத்தனப் போக்கும் மற்றத் தோட்டப்புற மக்களின் வாழ்க்கையில் மலிந்துகிடப்பதை உணரவைத்த நாவல் இந்த பால் மரக்காட்டினிலே என்றால் அது மிகையாகாது.

தோட்டத் துண்டாடலால் வீடிழந்து, சொந்தங்களை இழந்து, ஒதுங்க ஓர் இடம்கூட இல்லாமல் வீதியோரங்களில் அகதிகளாகப் பிள்ளைக்குட்டிகளுடன் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் நிற்கும் என் இனத்திற்கு வாழ்வே சவாலாகிப்போனச் சூழலில் இந்த் வாழ்வின் அர்த்தம் தேடும் மனித உணர்வுகளை இந்த நாவலில் மிகவும் இயல்பாகப் பதிவு செய்திருப்பார் திரு.அகிலன் அவர்கள்.

மலேசியாவில் தங்கியிருந்த ஒரு மாதக் காலத்தில் அவர் கண்ட காட்சிகள், கேள்விப்பட்ட விடயங்கள் போன்றவற்றை வைத்துக்கொண்டு இந்த மலையகத் தமிழனின் கதையை அவரால் சொல்லமுடிகிறதென்றால், இங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் நம்மால் இதைவிட இன்னும் சிறப்பான ஆழுமையுடன் ஆழமாகவும் உணர்வார்த்தமாகவும் எழுதமுடியும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. இதன் அடிப்படையிலேயே என் ஆரம்பகால எழுத்துகள் புது வாழ்வு, கந்தசாமி வேலை தேடுகிறார், ஒரு பாதை சில பள்ளங்கள், ஸ்கூல் பஸ் போன்ற கதைகள் முற்போக்குச் சிந்தனையுடன் என்னுள் உருவெடுத்தன.

இதைத்தவிர, பால் மரக் காட்டினிலே நாவலில் வரும் பாலன் மற்றும் அவன் மாமன் மகள் கண்ணம்மா இருவருக்கும் உள்ள அந்தக் காதல் நாவலை வாசிக்கும் போதே நம் அகஉணர்வுகளைச் சுகமாகத் தாலாட்டும் தன்மை வாய்ந்தவையாகும். (பின்னாளில் நானும் என் அத்தை மகளையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்)

ஒரு குறிப்பிட காலத்திற்குள் அகிலனின் அனைத்துச் சிறுகதைகளையும் நாவல்களகயும் வாசித்துவிட்ட  நிலையில் எனது எழுத்திலும் அந்தக் காதலின் மேன்மையை அனுபவிக்க ஆரம்பித்தேன். சமூக உணர்வோடு கூடிய பத்துக்கும் மேற்பட்ட காதல் கதைகளைத் தொடர்களாக எழுதியுள்ளேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது மனத்துக்கு நினைவாக இருக்கிறது.

எனது ஓவிய நண்பரான சந்திரனுடன் அந்நாட்களில் கோலாலம்பூர் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும்போது பல தடவை, நம் நாட்டிலும் ஓர் அகிலன், ஒரு மு.வ.,ஒரு ஜெயகாந்தன் உருவாகவேண்டும் என்பார். எழுதுறதை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுறாதீங்க என்பார். நான் அப்படி உருவாகியிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இடை இடையே சில தோய்வுகள் இருந்தாலும் இன்றும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த வகையில் என் எழுத்துலகப் பிரவேசத்தில் அகிலனும் பால் மரக்காட்டினிலே நாவலும் ஒரு முக்கியப் பங்காற்றியிருப்பதோடு, அந்த நாவலின் பாலனும் கண்ணம்மாவும் இன்றும் என் கதைகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

(காலம் மாறினும் தேகம் அழியினும் கதையின் கவிதையில் கலந்தே வாழ்வோம்) -


நாவலைப் படித்து சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று என் உணர்வுகளப் பகிர்ந்துள்ளேன். யாரோ என்னுடமிருந்து இரவல் வாங்கிச்சென்ற இந்த நாவல் இன்றுவரை என்னிடம் வந்து சேரவில்லை.

மழை - எம்.சேகர்

மழை


வானக்கவிஞனொருவன்
ஈர மைகளால்
உலகைத் திருத்தி எழுத வருகிறான்

சிதறிக்கிடக்கும் கருமேகக்கூட்டுக்குள்
மனிதநேயத்தைத் தொலைத்துவிட்டு
கவிதைகளைத் தோண்டுகிறான்

சிதறிவிழும் சொற்கள்
மழைத்துளிகளாய்


எம்.சேகர்

தூரத்துக் கானல் - எம்.சேகர்

தூரத்துக் கானல்

வண்ணம் உகழ்ந்த வானத்தைப்போல
ஒப்பனைகளற்ற வாழ்க்கையின்புனைவுகள்
இருளின் வெளிச்சத்தில் உழப்படும்
நித்திரையின் சதைத்துணுக்குகளாகி
ஒவ்வொரு விநாடியும்
உயிர்ப்பித்து அழுகின்றன

பகற்சூழலின் உணர்ச்சிகளில்
உருகிய வாசனைகள்
உடல் முழுக்க ஊர்ந்து
பூத்தாமரையாய் மேலெழும்பி விழுகின்றன

நீர்மனத்துக்குள்
செதிலுரித்துச் செல்லும்
நீண்ட காம்புகளாய் உன் நினைவு

முத்தத்தில் மூழ்கித்த உதடுகள்
வெப்பப் பசையினால்
நீர்த்துப் பூத்தன

நினைவுகளை விழுங்கமுடியாமல் அழுகிறது மனசு
வெப்ப மண்டலங்களில்
ஈரப் பதத்தைத் தேடும் காற்றாய்


என்றோ நிர்வாணமான என்னாசைகள்
உள்ளத்தை மொழிபெயர்த்துக் காட்டுகிறது
உணர்ச்சிகளை மழித்துவிட்டு

தூரத்தில் கானலாய் ஒரு காதல்
காத்துக் கொண்டிருக்கிறது


- எம்.சேகர்

தனி மனிதம் - எம்.சேகர்

தனி மனிதம்


ஆயிரம் பாடங்கள்
வாழ்க்கையின் அனுபவங்களாக
என் முன்னேயும் பின்னேயும்
என்னை வழிகாட்டி 
அழைத்துச் செல்லினும்

மீண்டும் மீண்டும்
குழிக்குள் வீழ்ந்தும்
மீண்டெழுந்தும்

புதிய புதிய அனுபவங்கள்
வெவ்வேறு பரிமாணங்களில்
வெவ்வேறு மனிதர்களால்
மீண்டும் மீண்டும்
நட்பின் நம்பிக்கையை
உரசிப் பார்த்தும்
உறவுகளின் அர்த்தங்களுக்கு
புதியதொரு கற்பிதங்களைக்
கொடுத்தும்

என் சார்ந்த அனைத்தையும்
முழுசாகப் பெயர்த்தெடுத்து
வேறொரு புது சுவாசங்களில்
கடத்திவிட்டு
மீண்டும் என்னை
எதுவுமேயில்லாதவனாகத் 
தொலைத்தெடுக்க

வாழ்க்கையின் பாடங்கள்
இன்றோ நாளையோ
முடிவதாய் இல்லை

என்னைச் சுற்றி விழும்
நிழலைக்கூட சந்தேகிக்கும்
நிலையில்தான்
வாழ்க்கை 
இன்னமும் என்னைச் சுற்றிவருகிறது

தனியொருவன் நல்லவனாக
இருப்பதில்
ஒன்றுமேயில்லை இங்கு


- எம்.சேகர் 

புதன், 6 ஏப்ரல், 2016

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படைக்கப்பட்ட கட்டுரை




இன்றைய மலேசியச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும்


– எம்.சேகர்

(14 டிசம்பர் 2015, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை)

மக்களின் மனப்போக்கில் இயைந்து வளர்வதே இலக்கியமாகும். வாழ்கின்ற மக்களின் மனப்போக்கும் சொல்லும் செயலும் நடையுடைகளும் காலத்திற்கேற்ப மாற்றம் அடைந்து வருவதைக் காண்கிறோம். இந்த மாறுதலுக்கேற்ப இலக்கிய அமைப்பும் மாறிக்கொண்டுதான் வருகிறது. இத்தகைய மாற்றம்தான் வளர்ச்சியாகும். மாற்றம் இல்லையேல் வளர்ச்சியில்லை. மாற்றமும் வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்தவையாகும். எனவே, இன்று வளர்ந்துவரும் சிறுகதை இலக்கிய வளர்ச்சியை யாரும் அலட்சியப்படுத்தமுடியாது. அதற்கேற்ப மலேசியச் சிறுகதைகளும் தன்னை மெல்ல மெல்ல உருமாற்றிக்கொண்டு வருகின்றன என்பதையும் இங்கு யாரும் மறுப்பதற்கில்லை.

அன்றைய மலாயாவிற்குத் தென்னிந்தியத் தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாகக் கொண்டு வரப்பட்டுத் தோட்டப்புறங்களிலும் சாலை மற்றும் இரயில் பாதை நிர்மாணிப்புகளிலும் வேலைக்கமர்த்தப்பட்டனர். அந்தத் தலைமுறையின் வாரிசுகளான இரண்டாம் மூன்றாம் நான்காம் தலைமுறையினரின் தமிழாக்கங்கள்தான் இன்று மலேசியாவின் வாழ்வியலைச் சித்தரிக்கும் புனைவிலக்கியங்களாக அடையாளம் காட்டப்படுகின்றன.

பெரும்பாலான ஆய்வாளர்கள் மலேசிய இலக்கியத்தின் தர அடைவுகளைத் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுப் பேசுவர். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகால வளர்ச்சியைத் தொட்டுள்ள மலேசியாவின் படைப்புகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய ஆளுமையைக்கொண்ட தமிழ்நாட்டுப் படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் பேசுவதும் என்பது சரியானதுதானா என்ற வினாவையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். அண்மையில் வெளிவந்த மலேசியச் சிறுகதைகளைப் பார்க்கும் முன் அதன் வரலாற்றைச் சுருக்கமாகப் பின்னோக்கிப் பார்ப்போம்.

மலேசிய இலக்கியச் சூழல் – வரலாற்றுப் பின்னணி

மலேசியாவின் தொடக்கக்கால இலக்கியச் சூழலை ஆய்வாளர்கள் சிங்கப்பூருடனான வரலாற்றுப் பதிவோடு இணைத்தே பதிவு செய்துள்ளனர். டாக்டர் அ. வீரமணி அவர்கள், மலாயா – சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் வரலாற்றினை மூன்று காலக்கட்டமாக ஆய்வு செய்துள்ளார்.

அ)  1947 க்கு முன்னுள்ள காலம்

ஆ) இரண்டாவது உலகப்போர் முடிவுற்றதிலிருந்து மலாயா சுதந்திரம் எய்திய ஆண்டு வரையுள்ள காலம் (1947 – 1957)

இ) 1957 லிருந்து 1968 வரையுள்ள காலம்

எனப் பிரித்து, இந்த மூன்று காலக்கட்டங்களும் வரலாற்று அடிப்படையில் எழுந்த காலப்பிரிவேயின்றி, சிறுகதையினுள் நிகழ்ந்த மாற்றங்களைக்கொண்டு வரையறுக்கப்பட்ட தீர்வான முடிவல்ல என்கிறார். இதற்கு அவர் தரும் விளக்கம் மலாயா சிங்கப்பூர்த் தமிழிலக்கிய வளர்ச்சி பெரிதும் அரசியல் மாற்றங்களாலேயே நிகழ்கின்றன என்கிறார்.

சிறுகதைகளின் இயல்பு

மலேசியத் தமிழ் சிறுகதைகளின் இயல்பையும் அளவையும் தமிழ்ப் பத்திரிக்கைகளே நிர்ணயம் செய்துள்ளன என்றால் அது மிகையாகாது. மேலும் அவ்வப்போது வெளிவரும் சிறுகதைத் தொகுப்புகளும் சிறுகதைகளின் வளர்ச்சிக்கும் வள உயர்விற்கும் ஆதாரமாக விளங்குகின்றன எனவும் கூறலாம்.

மலேசியச் சிறுகதைகள், பல நிலைகளிலிருந்து பலவித கதைக் கருக்களைக் கொண்டு எழுதப்படாதவை என ஒரு கருத்து முன்பு நிலவி வந்தது. விக்நேசன் என்பவர் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மேற்கில் சிறுகதை என்று கருதப்படும் கலைவடிவம் மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் அறவே இல்லை எனவும் ஐரோப்பிய அமெரிக்கப் படைப்புகளில் காணப்படும் நுட்பமும் இவற்றில் இல்லை. என்கிறார்.  முருகு சுப்பிரமணியம், ‘பல சிறுகதைகள் நீதி புகட்டுவனவாகவே அமைந்துள்ளன. நம் எழுத்தாளர்கள் அவர்களுடைய எழுத்து மூலம் வாழ்க்கையைத் திருத்தியமைக்க முயல்கின்றனர். இம்முயற்சியானது பல நல்ல சிறுகதைகளை வெறும் நீதிக் கட்டுரைகளாகவே மாற்றிவிடுகிறது. என்று குறிப்பிடுகிறார். டாக்டர் அ. வீரமணியும், ‘பெரும்பாலான சிறுகதைகள் இலக்கியம் என்று கருதப்பட இயலாதவை.’ என்றும் கூறியுள்ளார்.

1960 களில் எழுதியவர்களுக்கும் 1970 களில் எழுதியவர்களின் எழுத்து நடைக்கும் அதிகம் வித்தியாசமில்லை. ஆனால் 1980 க்குப் பிறகும் 1990 களிலும் வந்த எழுத்தில் அபாரமான மாற்றங்களைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அதன்பிறகு எழுத வந்தவர்கள் கருத்தாழமிக்க பண்பாட்டு விழுமியங்கள், குடும்பச் சீர்மை, சமூகச் சீர்கேட்டைச் சாடும் கதைகள் எனக் கதை எழுதும் நிலையை மாற்றி, இலக்கியக் கோட்பாடுகளுக்கு உள்சென்று கதையை எப்படி எழுதுவது எனச் சிந்திக்கத் தொடங்கினார்கள். இன்றைய நவீன ஊடகங்களின் வருகை எழுதிக்கொண்டிருந்தவர்களின் மற்றும் புதிய தலைமுறை எழுத்தாளர்களின்  வாசிப்புத் தளத்தை மேலும் விரிவடையச் செய்தது. இணையம் மூலமாகப் பல இலக்கிய முன்னெடுப்புகளும் கலந்துரையாடல்களும் திறனாய்வுகளும் நடத்தப்படுகின்றன. உலகம் கைவிரல்களுக்குத் தொடும் தூரத்தில் வந்துவிடவே இன்று அனைத்துமே சாத்தியமாகிவிட்ட ஒரு சூழ்நிலையில் புத்திலக்கிய சிந்தனையில் மலேசியாவிலும்  கதைகள் படைக்கப்படுகின்றன என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.

இன்றைய சிறுகதைப் படைப்புலகம் கோட்பாடுகளுக்குள் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல், மரபின் அனைத்து அடையாளங்களையும் புறந்தள்ளித் தனக்கானதொரு வடிவத்தைச் சுயமாகக் கொண்டு செயல்படும் தன்மைக்கு வந்துவிட்டது எனலாம். இன்றைய நிலையில் கோட்பாடுகளை மட்டுமே உள்வாங்கிக்கொண்டு எழுதுவதைவிட, மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு எழுதும் எழுத்துகளே மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன. வாழும் நாட்டின் அரசியலமைப்புக்கும் சட்டத்திட்டங்களுக்கும் உட்பட்டு, அந்நாட்டுச் சூழலுக்கேற்பப் புனைகதைகளைப் படைப்பதே சிறப்பாகும் எனக் கூறுபவரும் இங்கு உண்டு.

அடுத்து, அண்மையில் வெளிவந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வருடாந்திர வெளியீடுகளான 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015 சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து சில கதைகளையும் தனி வெளியீடுகளாக வந்த, ‘அவள் பார்க்கிறாள் மற்றும் தீர்த்தக் கரையும் திரைகடலோடிகளும் என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளிலிருக்கும் சில கதைகளையும் எடுத்துக்கொண்டு, மலேசியச் சிறுகதை இலக்கியம் இப்பொழுது எதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

என்னைக் கொன்றே விட்டார்கள் – கோ. புண்ணியவான் (என்னைக் கொன்றே விட்டார்கள் – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு 2015)

மனைவியை இழந்த ஒரு கணவனைப் பற்றிய கதை, மகனின் போக்கில் சொல்லப்பட்டுள்ளது. ஆணாதிக்கத்தைப் பற்றியும் பெண்ணுரிமைகளைப் பற்றியும் கேள்விகளை முன்னெடுக்காமல் சொல்லப்படும் கதை, ஒத்த சிந்தனையுள்ள வாசகனின் குற்றவுணர்ச்சிகளையும் எழுப்பிவிடக்கூடிய தன்மை வாய்ந்தது. இனி வரும் காலங்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மேலும் செப்பனிட்டுக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் கதையாகவும் இருக்கிறது.
திருமணம் என்ற பந்தத்தில் ஆணுடன் இணையும் ஒரு பெண், குடும்பத் தலைமை மற்றும்  பொருளாதாரச் சக்தியாக விளங்கும் ஆணின் அதிகார மனநிலையில் எப்படியெல்லாம் அவமானத்தின் விளிம்பின் எல்லைக்கே நகர்த்தப்படுகிறாள் என்பதைப் பதிவு செய்யும் கதை, தன்னால் கொடுமைப்படுத்தப்பட்ட மனைவி மற்றும் உறவுக்காரப் பெண் செல்வி இருவரின் மரணத்திற்குப் பின் அந்த ஆண் மனத்தின் சலனங்கள், அவனை மனப்பிறழ்வுக்கு இட்டுச் செல்லும் காட்சிகள் எனக் கதை ஓர் அனுபவமொழியாகவும் சிறந்து விளங்குகிறது. ஆண் மையச் சமூகம் சில கருத்தாக்கங்களைப் பெண்களின் மீது தினித்துக்கொண்டிருப்பது இன்றளவும் தொடரும் அவலம் என்பதைக் கதை மறைமுகமாகச் சாடுகிறது.

இக்கதையின் இன்னுமொரு தனிச்சிறப்பு என்னவெனில் கதை நெடுகிலும் ஏராளமான உவமைகள் மிகவும் நயம்பட பயன்படுத்தப்பட்டிருப்பதேயாகும்.

வினை – மு. பக்ருதீன் (என்னைக் கொன்றே விட்டார்கள் – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு 2015)

தேடிப்போன ஆள் வீட்டில் இல்லாததால் அவனுக்காகக் காத்திருக்கும் அந்தச் சிறிய கணங்களுக்குள் காலணிய விடுதலைக்குப் பிந்திய கால நிகழ்வுகளை நம் கண்முன்னே கட்டவிழ்க்கும் கதை. ஆங்கிலோ-இந்திய கலப்பினத்தவரின் மனோபாவத்தை விவரித்த விதம், இன்றைய மலேசிய நாட்டின் சிறுபான்மைத் தமிழருக்கு ஓர் எச்சரிக்கைக் குறியீடாகவும் காணமுடிகிறது. எங்கோ அடையாளம் இழந்து, கரைந்து கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்விக்கணை நம்மை நோக்கியும் பாய்ந்து வருவதை இக்காலச் சூழல் நமக்கு நன்கு எடுத்துரைக்கிறது எனலாம்.

கதையின் அந்த இறுதி வாக்கியத்தைத் தவிர்த்துக் கதையை அதன் போக்கில்விட்டு படைப்பாளன் உள்ளே நுழையாமல் இருந்திருந்தால் கதை நவீனத் தன்மையுடன் மேலும் சிறப்புப் பெற்றிருக்கும்.

விடுதலையாதல் – ரெ. கார்த்திகேசு (பந்துவான் – 2012 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)

ஒரு குடும்பச் சிக்கலின் மூலம் சமூகச் சிக்கலை எடுத்தியம்பும் கதை. இயந்திரத்தனமான பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அவரவர்க்கு அவர்களின் தேவையே முதன்மையாகப்படும் சூழலில் பணத்தை விட்டெறிந்து நாங்களும் இருக்கிறோம், எங்களுக்கும் அக்கறையுண்டு எனக் காட்டிக்கொள்ளும் மனப்பக்குவத்தை நோக்கி நம் மனித விழுமியங்கள் கரைந்துகொண்டிருப்பதை இக்கதை இயல்பாகச் சொல்லிச் செல்கிறது. பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக உழைக்கும் பெற்றோர்களிடத்தில் வாழ்வின் உயர்நிலைக்கு வந்த பிள்ளைகள் முழுமனத்தோடு அக்கறை செலுத்தாதத் தன்மையையும் தம் குடும்பம் தம் வீடு என்ற ஒரு வட்டத்திற்குள் அவர்கள் முடங்கிப்போவதையும் சொல்லும் கதையில் மகள் வனிதாவின் கதாபாத்திரம் ஆறுதலானது. ஆனால், இதற்காக அவள் இழந்தது அதிகம். அப்பாவிற்கு உடல் மிகவும் மோசமாகிவிட்டது என்பதை அறிந்து வெளியூரிலிருந்து வருவதும் பின் எதுவும் நிகழாததால் அவர்களிடையே ஏற்படும் அந்தச் சலிப்பையும் மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது இக்கதை. ஆனால், எதற்காகக் காத்திருந்தார்களோ அது நிகழும்போது படிப்பவரின் விழித்திரைகளிலும் நீர் தெப்பமிடுகிறது. உணர்வுகளின் அடிப்படையில் பின்னப்பட்டக் கதை என்பதால் வாசகர்களின் மனத்தில் ஒரு வித நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் போக்கு இக்கதையின் நடையிலே தொனிக்கிறது.

நான் செத்தான் – ஏ. தேவராஜன் (பந்துவான் – 2012 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)

நாற்பது வயதுக்குமேல் பெரும்பாலான மனிதர்களுக்கு ஏற்படும் மனப் போராட்டத்தை மிகவும் நுட்பமாகக் குறியீடுகளின்மூலம் விவரித்துச் செல்கிறது கதை. சிறுகதை அமைப்பியல் முறையிலும் மாறுபட்டு விளங்கும் கதை. கதைச் சொல்லும் விதத்தில் அழகியலும் மொழிவளமும் மேலோங்கி நிற்கும் ஒருவிதத் தனித்துவத்தையும் காண முடிகிறது. உணர்வின் கடத்தலை மிகவும் யதார்த்தமாக வாசகனிடம் கொண்டு சேர்க்கும் கதை. கதையைப் படிப்பவனும் தன் வாழ்க்கையோடு இக்கதையின் சாரத்தைத் தொட்டுப் பார்க்க வைக்கும் தன்மையிலான ஒரு படைப்பு. இதுநாள்வரை தான் வாழ்ந்த பிழையான வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களை எண்ணி மனம் வருந்தி, அந்த வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நிஜமான வாழ்க்கைக்குள் சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் கதாபாத்திரம் மிக இயல்பானதொரு பாத்திரப்படைப்பு. நுட்பமான கதை மொழியாலும் செறிவூட்டும் சொல்லாடல்களுமாய்க் கதையை நகர்த்திச் செல்ல இவர் பயன்படுத்தும் படிமங்கள் மிகவும் வித்தியாசமானவை.

இலக்கணப் பிறழ்வைக் கொண்ட, ‘நான் செத்தான் என்ற தலைப்பே வித்தியாசமானது. நான் என்ற தனிமனிதன், நான் என்ற அகந்தை இவைகளுக்கு, தான் வாழப்போகும் காலத்தில் இனி இடமில்லை என்பதைக் குறிப்பதற்காகவே இத்தலைப்பு இடப்பட்டிருக்கலாம்.

அப்பா – உதயகுமாரி கிருஷ்ணன் (எழுதாத ஒப்பந்தம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு 2011)

மகளின் நினைவோட உத்தியுடன் எழுதப்பட்ட கதை. அனைவரும் நேசிக்கும் அப்பாவைப் பற்றிய கதையென்பதாலும் உணர்வுளின் அடிப்படையிலான கதையென்பதாலும் இக்கதை காலம், இடம், நாடு ஆகியவற்றைக் கடந்து, வாசகர்களின் மனத்தை நெரித்து, நெருங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் கதையாக விளங்குகிறது. கதாசிரியர் தன் அப்பாவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வாசகர் மனங்கள் தங்கள் அப்பாவை நினைவுகூர்வது என்பது இக்கதையைப் படிக்கும்போது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அப்பாவின் பிரிவு என்ற வலி கதை முழுக்க வியாபித்து நம்மையும் அந்த வலியோடு கதையினூடே பயணிக்கவைக்கிறது. ஆழ்மன எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையும் இயல்பான நடையும் எளிமையான மொழிப்பயன்பாடும் இக்கதையை வளப்படுத்தியுள்ளன.

என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் – வே. இராஜேஸ்வரி (எழுதாத ஒப்பந்தம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு 2011)

இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா ஒரு நல்ல வேலையில் சேர்ந்து ஒரு தரை வீடாவது வாங்கியிருக்கலாம் எனக் கதைநெடுக வாசகனுடன் பேசிக்கொண்டே போகும் கதாநாயகன். அவனின் மனவோட்டங்கள் அருமையான உரையாடல்கள் போலவே வாசகனைத் தொடர்ந்து செல்கின்றன.

மலேசியாவின் நகர்ப்புறத்து மலிவுவிலை அடுக்குமாடி வீடுகளின் அவலங்களையும்  சாதாரண தொழில் செய்துகொண்டு பேருந்தை நம்பி வேலைக்குப் போகும் மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் பிடித்துக்காட்டும் இடங்களும் மெல்லியதானதொரு நகைச்சுவையுணர்வும் கதைக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன. ஓர் அழுத்தமான கதைக்கரு மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் ஆரம்பமும் முடிவும் முரணாக அமையப்பெற்ற கதை. மனித வாழ்வின் அவலங்களும் அனுபவங்களும்தான் சொற்களாக வாக்கியங்களாக இக்கதையை வடிவமாக்கியுள்ளது.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என கண்ணதாசனின் வரிகள் கதையைப் படித்து முடிக்கும்போது வாசகனின் நினைவலைகளைத் தாலாட்டியும் செல்லலாம்.

மதகுகளின் முதுகில் உறங்கும் மீன்கள் – கோ. முனியாண்டி (சில நேரங்களில் சில ஏவாள்கள், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு 2010)

தோட்டப்புற வழக்கில் முழுமையாகப் படைக்கப்பட்ட கதை வட்டார வண்ணம் (Local Colours) மிகும்படி மிகுந்த உணர்வோடு எழுதப்பட்டுள்ளது. அன்றைய தோட்டப்புற வாழ்வியலை இன்றைய நகர்ப்புற இளையருக்கு அறிமுகப்படுத்தும் தன்மையிலானதொரு கதை. இரண்டாம் உலகப் போர்க்காலச் சூழலையும் ஜப்பானியர்கள் மலாயாவில் நுழையும் வரலாற்றுக் காலக்கட்டத்தையும் தோட்டங்களில் பரவிவரும் பெரியாரியத்தையும் தோட்டப்புறத்தில் இயங்கும் இளையர் குழு பற்றியும் கதையினூடே காணமுடிகிறது. அன்றைய தோட்டப்புற வாழ்க்கையின் மொத்தப் பிரதியாகக் கதை நிமிர்ந்து நிற்கிறது. இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பதற்கொப்ப அமையப்பெற்ற சிறுகதை, அழகியல் வர்ணனையால் வாசகனைக் கைப்பிடித்துத் தோட்டத்துக்குள்ளே அழைத்துச் செல்கிறது. சில பின்நவீனத் துணுக்குகளின் சாயல் கதையெங்கும் பரவிக் கிடக்கிறது. தோட்டப்புற இளையர்களின் தோட்டப்புற மரபுவழி வாழ்க்கையிலிருந்து சிந்திக்கத் தூண்டும் சிந்தனையைப் பின் நவீனத்துவக் கூறுகளுள் ஒன்றான கட்டுடைத்தல் (Deconstruction) என்ற சித்தாந்தத்தோடு பொருத்திப் பார்க்கலாம்.

மழைத்தூறல்கள் – எம். கருணாகரன் (அவள் பார்க்கிறாள், சிறுகதைத் தொகுப்பு 2012)

சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம், உள்ளப் போராட்டமாக இருக்கலாம் என்கிறார் க.நா.சுப்ரமணியன். இக்கூற்றையொட்டியே இக்கதையும் ஒரு நிகழ்வைத் தளமாகக் கொண்டு பயணிக்கிறது. மலேசிய நாட்டின் உச்சகட்ட முன்னேற்றங்களினால் தமிழர்கள் வாழும் இடங்கள் காவு வாங்கப்பட்டக் காலக்கட்டத்தில் ஒரு தோட்டத்து மக்களின் எழுச்சியையும், தலைமைத்துவ வர்க்கத்தால் மிதிபட்டுப்போகும் அவர்களின் நம்பிக்கைகளையும் மிக யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளது கதை.

இக்கதையை வாசிக்கின்ற பொழுதே கதை நடைபெறும் காலக்கட்டமும், இடமும், சூழலும், நூற்றாண்டுக் கால உழைப்பிற்குப்பின் உழைத்த மண்ணில் குடியிருக்க ஒரு வீடு மட்டும் கேட்கும் ஒட்டு மொத்த சமூகத்தின் இயலாமையும் நம் முன்னே விரிகின்றன. ஒரு மாபெரும் நம்பிக்கையைத் தனது காலில் போட்டு மிதித்துவிட்டுப் போகும் பதவிப்பித்தர்களின் போக்கினால் வீதியில் உறங்கிய தமிழ்க்குடும்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல ஆயிரங்கள். அகிலனின் பால் மரக்காட்டினிலே நாவலில் நாம் சந்தித்த அவலங்களிலிருந்து இன்றளவும் நாம் மீளவில்லை என்பதையே மழைத்தூறல்கள் நமக்குள்ளேயும் விதைக்கின்றன.

ஒரு தார்மீகமான மன எழுச்சி, நடனம் என்ற கதாபாத்திரத்தின்மூலம் கையாளப்பட்டு பின் பிரபஞ்ச ரீதியான ஓர் உண்மை அந்த கதாபாத்திரத்தின்மூலமாகவே இறுதியில் உணர்த்தப்படுவது கதையின் சிறப்பாகும்.

அலமாரி – கே. பாலமுருகன் (இலையுதிர் காலம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு 2009)

ஒரு நல்ல சிறுகதைக்கு எதுவும் பொருள் ஆகலாம். மிகவும் எளிய பொருளை உள்ளடக்கமாகக்கொண்டு சிறந்த கதையை உருவாக்கலாம். இவ்வகையில் குறிப்பிடத்தக்க கதை இந்த அலமாரி. அன்றாட வாழ்க்கையின் ஒரு சாதாரண நிகழ்வுடன் தொடங்கும் கதை. பக்கத்து வீட்டு மாரியாயி பாட்டியின் பழைய அலமாரியைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை படைப்பாளனின் வித்தியாசமான கதை சொல்லும் முறையினாலும் பல முடிச்சவிழ்ப்புகளாலும் காட்சிகளின் கோர்வையாக விரிகின்றன.

கதையின் முடிவு வாசகனின் சொந்த கற்பனைக்கே விடப்பட்டுள்ளது. கதையைப் படித்து முடித்தும்கூட பல மணி நேரங்களுக்கு வாசகனைச் சிந்திக்கத்தூண்டும் கதை. நவீனக் கதைகளின் முழுவடிவம் இந்த அலமாரி. திரு. ரெ. கார்த்திகேசு கூறுவதுபோல் எளிமையான கதை நிகழ்வுகளுக்குள் வாசகனை இழுத்து, அந்த எளிமையின் மர்மங்களைப் படிப்படியாகப் பெருக்கி, முடித்த பின்பும் மனத்தில் பல கேள்விகளை எழுப்பும் கனமான முடிவையும் அளித்து மிகச் சிறப்பாக இந்தக் கதையைத் தவழவிட்டுள்ளார் கதாசிரியர் என்றால் அது மிகையாகாது.

நபிலாவின் டைரி – வாணி ஜெயம் (இலையுதிர் காலம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு 2009)

ஜூலை இருபத்தெட்டில் தொடங்கும் நபிலாவின் நாட்குறிப்பு, ஆகஸ்டு முப்பதில் நிறைவடைகிறது. சிறுகதைக்கான அமைப்பியல் முறையில் சற்றே வித்தியாசமாகப் படைக்கப்பட்ட கதை. பொதுவாகப் பணிப்பெண் தொடர்பான கதைகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்தான் முன்னே நிற்கும். ஆனால், இக்கதை இதில் முரண்பட்டு விலகி நிற்கிறது. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும், நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள் என்பதுபோல இக்கதையில் நபிலாவுக்கு வாய்த்த எஜமானர்களும் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில் நபிலாவும் மிகவும் நல்லவள். மற்றவர்களுக்காக மெழுகாகத் தன்னை உருக்கிக்கொள்ளும் மனம் படைத்தவள்.

நபிலாவின் மூலமாக இங்குள்ள சில பெண்களின் போக்கைச் சீண்டிப் பார்க்கும் தன்மையுடைய கதை. இங்கு அனைத்து வாய்ப்புகள் இருந்தும் அதை முழுமையாக நாம் பயன்படுத்திக்கொண்டோமா என்ற சிந்தனையைத் தூவிச் செல்கிறது இக்கதை.

சமிக்ஞை விளக்குகள் – பொன். சசிதரன் (தீர்த்தக்கரையும் திரைகடலோடிகளும், சிறுகதைத் தொகுப்பு 2013)

சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் நிகழ்வுகள் அழகிய நாடகக் காட்சிகளை நினைவுபடுத்தும். அப்பாடல்களில் நேரடியான நீதி போதனைகள் இடம்பெறாது. இருப்பினும் வாழ்வின் அடிப்படை உணர்வுகளை அப்பாடல்கள் மிக அற்புதமாக வெளிப்படுத்தும். அதுபோல, வாசகனின் விழிகளுக்கு எழுத்தைத் தவிர வேறெதையும் காட்டாமல், மூடுபனி பாலுமகேந்திராவின் கேமராவைப்போல் தான் வாழும் சமூகத்து வாழ்க்கையின் பகுதிகளினூடே தெறிக்கும் உக்கிரத்தைப் படம் பிடித்துக் காட்டுவதென்பது எளிதான காரியமல்ல. இதில் இச்சிறுகதை வெற்றிப்பெற்றிருக்கிறது.

எந்தவித வெளிப்பூச்சுகளும் இல்லாத, பின்னிப் பின்னிச் சொல்லப்படாத செய்திகள், வர்ணனைகள், அதிகப்படியான கற்பனைகள் எதுவுமில்லாமல் மிகவும் எளிமையாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குறும்படத்திற்குரிய திரைக்கதை அமைப்போடு இக்கதைப் படைக்கப்பட்டிருப்பது வாசகனுக்குப் புதியதோர் அனுபவத்தைக் கொடுக்கும்.
வேறு ஒருவனுடன் ஓடிப்போன தன் தங்கையின் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கத் துடிக்கும் மரிக்கொழுந்து என்ற ஒரு பெண்ணின் போராட்டங்களையும் அவள் சந்திக்கும் இடர்களையும் கனமான மனத்துடன் சுமந்து செல்கிறது கதை.

எந்த நல்ல சிறுகதைக்கும் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்படும் உத்தியும் நடையழகும் கதை சொல்லும் செய்நேர்த்தியும் அத்தியாவசியம். அதைவிட முக்கியம் அந்தந்தக் காலகட்டத்துக்கேற்ப எழுதப்படும் திறன் பொதிந்த கதைகளே வெற்றி பெறுகின்றன. ஒவ்வொரு படைப்பாளிக்கும் இலக்கியம்வழி பயணம் செய்யும்போது, அகமும் புறமும் நோக்கிய கற்பனை ரூபம் நிஜ ரூபமாக வாக்கியப் படிமங்களில் வடிவம் பெறும்போதுதான் படைப்பாளனின் மீட்சி செப்புப்பட்டயமாய் மின்னுகிறது. என்கிறார் சிங்கப்பூரின் பன்முக எழுத்தாளரும் ஆய்வுக்கட்டுரையாளருமான திருமதி கமலாதேவி அரவிந்தன். அவரின் கூற்றுக்கேற்ப மேற்கூறப்பட்ட சிறுகதைகள் இன்றைய மலேசியச் சிறுகதைகளின் புதியதோர் அடையாளமாகவும் மலேசியச் சிறுகதைகளை நவீனப் படைப்பாக்கத்தின் அடுத்த கட்ட நகர்விற்கு நகர்த்திச் செல்பவனாகவும் விளங்கக்கூடியவையாகும் என நம்பலாம்.

இறுதியாக, எடுப்பு தொடுப்பு முடிப்பு எனும் கதை சொல்லும் பாணி முற்றிலும் விலக்கப்பட்டு, முடிவு என்ற வரையறை இல்லாத திறந்த வெளியில் கேள்விக்குறியோடு நிற்கும் புதியதொரு நடையை இன்றைய மலேசியச் சிறுகதைப் படைப்பாளர்கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட பல கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. மலேசியாவின் பல்லின மக்கள் வாழும் வாழ்க்கைச் சூழலில் தனித்துவமான கதையுரைப்பு இயலில் (narratology) கதை சொல்லல் எனப் பல படிமங்களிலும் பல பரிமாணங்களிலும் மலேசியச் சிறுகதைப் படைப்பாளர்கள் இன்று முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்குப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

மலேசியப் படைப்பிலக்கியத்திற்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியச் செயல்பாடுகள் கடந்த இருபது ஆண்டுகளில் அதுவும் திரு. இராஜேந்திரனின் தலைமையில் சிறுகதை மற்றும் புதுக்கவிதை வளர்ச்சியில் அதிமுக்கியப் பங்காற்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஒவ்வோர் ஆண்டும் சங்கம் பதிப்பித்து வரும் சிறுகதைத் தொகுப்புகளில் ஏற்கனவே எழுதிவரும் எழுத்தாளர்களோடு பல புதிய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளும் வருவது மலேசியச் சிறுகதை உலகில் நல்லதொரு திருப்பமாகும். காகிதத்தில் அச்சேறி காற்றாய்ப் பறந்துவிடக்கூடிய இலக்கியச் செல்வங்களைத் தொகுத்து நல்லதொரு புத்தகமாக நம் கைகளில் தவழவிட்டு, நம் இலக்கியத்தோடு மலேசியத் தமிழனின் வரலாற்றையும் ஆவணப்படுத்தும் இச்செயல் அபாரமானதும் பாராட்டத்தக்கதுமாகும். 


 (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படைக்கப்பட்ட கட்டுரை)


கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்

1  இலையுதிர் காலம், சிறுகதைத் தொகுப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,  2009.
2   சில நேரங்களில் சில ஏவாள்கள், சிறுகதைத் தொகுப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 2010.
3   எழுதாத ஒப்பந்தம், சிறுகதைத் தொகுப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 2011.
4    பந்துவான், சிறுகதைத் தொகுப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 2012.
5    என்னைக் கொன்றே விட்டார்கள், சிறுகதைத் தொகுப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 2015.
6    அவள் பார்க்கிறாள், எம். கருணாகரன், சிறுகதைத் தொகுப்பு, 2012.
    7 தீர்த்தக் கரையும் திரைகடலோடிகளும், பொன். சசிதரன், சிறுகதைத் தொகுப்பு, 2013
8  மலாயா – சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும், டாக்டர் ஆ. வீரமணி, 1996.
9  சிங்கப்பூர்த் தமிழ் – இலக்கியம், பன்முகப்பார்வை, முனைவர் இரா.வேல்முருகன், 2008.
1 10 புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி – ஒரு மீள்பார்வை, கட்டுரை, கமலாதேவி அரவிந்தன், 2011.