வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கவிதைகள்

மனச்சாரலில் துளிர்த்தெழுந்த குருதிச் சருகுகளில்
கொத்துக் கொத்தாய்
உயிரின் வண்ணங்கள் கரும்சிவப்பாய் 

சாலையோரத்தில் அடிபட்டுக்கிடக்கும்
ஒற்றைக் காகத்தைக் கொத்தியிழுக்கும்
ஒற்றைச் சிறகுடன் மற்றொரு காகம்

வீதியோரத்தில் விழுந்து கிடக்கும்
ஒரு மனிதனைக் கண்டும் காணாமல் போகும்
மனிதம்

மனிதநேயத்தைக் கைவிளக்குக் கொண்டு
தேடும் மதம்

உயிர்த்த குருதிப்புனல்
ஆராதிக்க மனிதமில்லாமல்
தன்னை இறுக்கிக்கொண்டு

சுவாசத்தை மரித்துக்கொண்டது

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நினைவோடையில் நெளிந்த பூக்கள்
காலத்தின் வெப்பத்தனல்களில்
கருகிச் சாம்பலாகிக்கிடக்கின்றன

சாம்பலாகிவிட்ட ஞாபகத்துகள்கள்
காற்றின் தாலாட்டில் நினைவுச்சிறகுகளை
பீய்த்துப் போடுகின்றன

இரவின் வாசம் புதையுண்ட
ஒரு காலைப்பொழுதின்
ஒரு புல் நுனி பனிபோல
எங்கோ ஒரு மூலையில்
ஏதோ ஒரு ஞாபகம்
ஒட்டிக்கொண்டுதானிருக்கும்
ஒவ்வொருவரின் மனத்திலும்
சல்லடையில் தெளித்த மாவுகளாக

@@@@@@@@@@@@@@@@@@@@

அகன்ற கனவின் நிலப்பரப்புகளில்
வானம் கறுத்திருக்கும் அந்திம காலப்பொழுதுகளின்
வெண்பனிச் சாளரங்களின் நீள்பாதையின்
இறுதி கணங்களின் சந்திப்பு

பழைய மனங்களின்
புதிய பரிணாம உணர்வின் உந்துதல்
காலத்தைப் பதிப்பித்து
கனவுக்குள் இழைந்தோடி கரைந்தோடி
உனக்கான என்னை மறக்கடிக்கப் பார்க்கிறது
மறந்துபோன உன் ஆசைகளை நியாயப்படுத்தியபடியே

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக