வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கவிதைகள்

மனச்சாரலில் துளிர்த்தெழுந்த குருதிச் சருகுகளில்
கொத்துக் கொத்தாய்
உயிரின் வண்ணங்கள் கரும்சிவப்பாய் 

சாலையோரத்தில் அடிபட்டுக்கிடக்கும்
ஒற்றைக் காகத்தைக் கொத்தியிழுக்கும்
ஒற்றைச் சிறகுடன் மற்றொரு காகம்

வீதியோரத்தில் விழுந்து கிடக்கும்
ஒரு மனிதனைக் கண்டும் காணாமல் போகும்
மனிதம்

மனிதநேயத்தைக் கைவிளக்குக் கொண்டு
தேடும் மதம்

உயிர்த்த குருதிப்புனல்
ஆராதிக்க மனிதமில்லாமல்
தன்னை இறுக்கிக்கொண்டு

சுவாசத்தை மரித்துக்கொண்டது

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நினைவோடையில் நெளிந்த பூக்கள்
காலத்தின் வெப்பத்தனல்களில்
கருகிச் சாம்பலாகிக்கிடக்கின்றன

சாம்பலாகிவிட்ட ஞாபகத்துகள்கள்
காற்றின் தாலாட்டில் நினைவுச்சிறகுகளை
பீய்த்துப் போடுகின்றன

இரவின் வாசம் புதையுண்ட
ஒரு காலைப்பொழுதின்
ஒரு புல் நுனி பனிபோல
எங்கோ ஒரு மூலையில்
ஏதோ ஒரு ஞாபகம்
ஒட்டிக்கொண்டுதானிருக்கும்
ஒவ்வொருவரின் மனத்திலும்
சல்லடையில் தெளித்த மாவுகளாக

@@@@@@@@@@@@@@@@@@@@

அகன்ற கனவின் நிலப்பரப்புகளில்
வானம் கறுத்திருக்கும் அந்திம காலப்பொழுதுகளின்
வெண்பனிச் சாளரங்களின் நீள்பாதையின்
இறுதி கணங்களின் சந்திப்பு

பழைய மனங்களின்
புதிய பரிணாம உணர்வின் உந்துதல்
காலத்தைப் பதிப்பித்து
கனவுக்குள் இழைந்தோடி கரைந்தோடி
உனக்கான என்னை மறக்கடிக்கப் பார்க்கிறது
மறந்துபோன உன் ஆசைகளை நியாயப்படுத்தியபடியே

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



கவிதை

அழகு

தனிமையின் இரவில் காலம் தவித்திருக்க
தெரியாத உறவின் வார்ப்புகள் விழித்திருக்க
திசையறியா பறவையாய்த் திரிந்திருக்க
தேரோடும் மனத்தோடு ஒரு மனம் பறந்திருக்க
சொல்வேந்தர் பட்டறையில் எழுத்துகளைத் தீட்டியிருக்க
சொற்களைத் தேடித்தேடி இங்கு அலைந்திருக்க
சொன்னதைச் சொன்னபடி இங்கு தந்திருக்க
சொல்லாமல் போன செய்திகள் ஆயிரம் இங்கிருக்க
வேற்று தேசம் தரும் மாயையில் மூழ்கியிருக்க
வேறேதும் பதியாமல் பதித்த சுவடுகளிலேயே பதிந்திருக்க
வேறென்ன சொல்லலாம் என நானிருக்க
வெறெதுவும் சொல்லாதே என படைத்தவன் பார்த்திருக்க
இலக்கியம் இங்கே தனிமையில் அழுதிருக்க
இரவுகள் இங்கே அடுத்த தலைமுறைக்காகக் காத்திருக்க
இலக்கியம் பண்ண கூட்டம் துடித்திருக்க
இரவுகள் இலக்கியத்தைக் காண பசித்திருக்க
எல்லாமே எல்லாமே அழகாம் இங்கே

எல்லாமே மனம் பார்க்கும் பார்வையிலே

கவிதைகள்

குடை கிழிந்துகொண்டிருக்கிறது

தேவதாசிகள் கூடும்      
அந்தத் தெருவில்
உன் நினைவுகளைச்
சுமந்துகொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்

உன் வார்த்தைகளை
என் மனதுக்குக் குடையாக்கி
நடந்து கொண்டிருக்கிறேன்
தேவதாசி ஒருத்தியின்
கொஞ்சலிலும் கெஞ்சலிலும்
பெரும்காற்று வீசுகிறது

நான்
உனக்கு உண்மையாக இருக்கவே
விருப்பப்படுகிறேன்
ராமனும் கிருஷ்ணனும்
என்னைப்பார்த்து சிரிக்கின்றனர்

என் இதயத்தில்
உன் முகம்
அமிழ்ந்த தடம்
வெற்றிடமாய்
காற்றில் மிதக்கிறது

குடை கிழிந்துகொண்டிருக்கிறது.



தொலைந்து போனவர்கள்

சமூகப் பூச்சுகளின்
சாயம் வெளுக்கும் பொழுது
சுயசிந்தனைகளை விழுங்கிய
சமூக விழுமியங்களின் கடப்பாடுகள்
சத்தம் போட்டு ஒப்பாரி வைக்கின்றன

மனத்துக்குள் தினிக்கப்பட்ட
மதம் என்ற வேர்
மனிதத்தை ஒடுக்கிவிட்டு
மனிதவிருட்சத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும்
கோட்பாடுகளையும் தத்துங்களையும் மட்டும்
ஓதிக்கொண்டிருக்கிறது சாத்தான்களின் வேதங்களாக

ஜகத்தின் முகம் கிழித்தெறியப்பட்டு
வந்த இந்த வன்முறையின் சுவாசம்
வன்மங்களின் கூடாரமாய்க் கூப்பாடுப் போட்டு
நிலவைத் தன் பக்கமாய்ச் சாட்சிக்கு
நிறுத்தி அஹிம்சையைப் பேசுகிறது


முகுந்தன் முகமட்டாக வாழ்வதும்
முனியாண்டி ஏண்டியாக வாழ்வதும்
சோமு சேம் ஆக வாழ்வதும்
எல்லாம் அவரவர் விருப்பம்
எல்லாம் சரிதான் என் தோழனே
மனிதனாய் இப்புவியில்
நாம் ஜனிப்பது எப்போது...........





கவிதைகள்

நான் நானாக இருப்பதில்லை

எதுக்காகவோ
யாருக்காகவோ
சில சமயங்களில் சமரசங்கள்
வாழ்க்கையின் அத்தியாவசியத்
தேவையாய் போய்விடுகின்றன

சமரசம்
எதிலும் சமரசம்

நான் நானாக இருப்பதில்லை
மற்றவர்களாய் மாறுகிறேன்
மற்றவர்களுக்காக

கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம்
என் சுயத்தை நான் இழக்கிறேன்
என் முகத்தில்
என் முகம் தெரியவில்லை
வேற்று முகங்கள்தான் சிரிக்கின்றன

என் சந்தோஷம்
என் துக்கம்
மற்றும் எனக்குள்ளும்
நான் நானாக இல்லை
வேறு யாரோவாக நான் பிரதிபலிக்கிறேன்

பிறந்தவுடன் சொன்னார்கள்
நான் அம்மா மாதிரி என்று
வளர்ந்தவுடன் என் அத்தை சொன்னாள்
அவள் அண்ணன் மாதிரி நானென்று

இன்றோ
என் மகனைப் பார்த்து
என் மனைவி சொல்கிறாள்
அப்பா மாதிரியே பிள்ளன்னு

யாரின் முகத்தையோ குணத்தையோ
யார் மேலேயோ தினித்து தினித்து
தனி மனித அடையாளம்
இங்கு திவாலாகிவிட்டது



நினைவின் சாரல்கள்

முழுமையான நிலா ஒளியில்
ஒளிர்கிறேன்
சிறகடித்துப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளாய்

ஆறு மணல் காடென
சுற்றித் திரிந்த கால்கள்
நிறுத்தம் தேடி ஓய்கையில்
பார்க்கும் இடமெல்லாம்
சுண்ணாம்புக் கற்கூடுகளாய்
மனங்கள் திரிந்து கருகிக் கிடக்கின்றன

ரெண்டு எலி வெட்டின்
தாய்மையின் உருவகமான ரப்பர் மரக்காடுகளும்
குரங்குகளும் பாம்புகளும் சீயான்களும்
உயர்ந்து வளர்ந்த 'லௌடா' கொட்டை மரங்களும்
மழை ஓசை எழுப்பும்
பக்கத்து வெட்டுக்காரர்களின் ஒலிகளும்
காலைமழையால் வீட்டில் இருக்கும் அம்மாவை
'பாப்பாத்தி கெர்ஜா' என அழைக்கும்
'கப்பாளாவின்' பழைய 'யமஹா' மோட்டார் சத்தமும்

மேட்டுப் பகுதியில் பால்வாளியோடு
உருண்டு விழுந்த வலிகளும்
செம்மண் ரோட்டில்
பிரேக் இல்லாத சைக்கிளில்
தம்பியோடு பள்ளத்தில் விழுந்த தளும்புகளும்

ஒட்டுப்பால் வாடையும்
கட்டிப்பால் வாடையுமாக
உயிர் உள்ள வரை
நினைவின் சருகுகளாக
வாழ்ந்து விட்டுப் போகட்டும்



கவிதைகள்

வே‌ஷங்கள்

புணர்ந்து புணர்ந்து தீர்க்கப்பட்டவர்களின்
எச்சில் வலிகளைச் சுமக்கும் பல்லாக்குத்தூக்கிகள்
பெண்களின் கால் இடுக்குகளில் கற்பைப் புதைத்துவிட்டு

அலையும் மனத்தின் அகன்ற பாதையில்
இயற்கையின் முப்பரிமாணக்கூடலில்
வார்த்தைகளைக் குலைத்து
சொல்லடுக்குகளை வெறுமனே சமைத்து

படையல் வைக்கின்றனர் பெண்தெய்வங்களுக்கு


ஆன்மாவின் பயணம்

நீள் அறியா இரவின் நுனியொன்றில்
குருதிச்சாயங்களைச் சுவாசித்து நைந்துபோனேன்
புராதணக்கோயில்களில் மார்புகாட்டும் பெண்தெய்வங்கள்
ஐயோ அசிங்கம் அசிங்கம்
ஐந்து வயதில் வெட்கப்பட்டு
அம்மாவின் சேலை நுனியில்
முகம் புதைந்தேன்
பல சேலைகள் துகிலுரியப்பட்ட
ஓர் இரவின் கடைசி கணமொன்றில்
என் சாவு நிச்சயிக்கப்பட்டுவிட்டது
குளியலறையில் நிர்வாணமாக தன் உடலை ரசிக்கும்
ஓர் ஆணின் கற்பிதங்களில்
மடித்துவைக்கப்பட்ட உணர்ச்சிகளோடு
காற்றின் தேய்ந்த சுவடுகளில் ஒட்டிக்கொண்டேன்



கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்.......!

மீட்டெடுக்க முடியாத வாழ்க்கையை
கனவுக்குள்
ஆழமாகப் புதைத்து வைத்தேன்

ஒவ்வொரு கனவுகளாக
மூழ்கி எடுத்து
மீட்டெடுத்தாய் என்னை முழுவதுமாய்

ஆழ்மனக் கனவுகளைத் தீண்டினாய்
நம்பிக்கை முத்தெடுத்தாய்
என்னாலும் முடியும் என்றாய்
என் கனவுகளின் சிறகுகளைச் சுட்டினாய்
எனைச் சிறகடிக்க வைத்தாய்

எனக்குள் நுழைந்து
கனவுக்குள் புகுந்தாய்
அன்பின் உரிமத்துடன்
எல்லா கனவுகளையும்
உனதாக்கிக் கொண்டாய்

என் இருண்மையில் கனவுகளை
நான் கண்டிருக்கமாட்டேன்
அவை நிஜங்கள் ஆகாமல் போயிருக்கலாம்
அவை யதார்த்தங்களாக இல்லாமல் இருந்திருக்கலாம்

கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்
..