ஞாயிறு, 28 ஜூலை, 2013

சிறுகதை - மனவீதிகளும் தெருக்கொடிகளும்

மனவீதிகளும் தெருக்கொடிகளும்

 – எம். சேகர்

ஏய் வந்ததும் வராததும் எங்கேடி போன?”
அம்மா கேள்வியால் என்னை அறைந்தாள். பார்வையை மட்டும் பதிலாய் வீசிவிட்டு என் அறைக்குள் நுழைந்தேன். பின்னாடியே அம்மாவின் நிழல் என்னைத் துரத்தியது.
ஏண்டி கேக்குறன்ல....திமிரா...
அவள் குரலும் என்னைத் திட்டியது.
அம்மா என்னம்மா பிரச்சனை உனக்கு? வந்ததும் வராததுமா?”
ஏண்டி நான் உனக்கு பிரச்சன பண்றனா? சொல்லுவடி சொல்லுவ..ஏன் பேசமாட்ட.. அவ இப்படிப் பேச சொல்லிக் கொடுத்தாளா?”
அம்மா
என்னடி
போம்மா.... அடுப்புல ஏதாவது வேல இருந்தா போய் செய்மா.....வீட்டுக்கு வந்தா நிம்மதியாகவா இருக்க முடியுது? வீட்டுக்கு வந்தா ஏன் வந்தேனு நினைக்க வைக்காதம்மா..
ஏண்டி  நா என்னா கேட்டுட்டேனு இப்படிப் பேசுற? வந்த.. பொட்டிய வச்ச... வீட்ல உள்ளவங்கக்கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசாம...வந்தோன போயிட்டியா அந்த மூதேவியப் பார்க்க...
எனக்கு அம்மாவின் மேல் எரிச்சல் எரிச்சலாக வந்தது. இன்னும் மாறாமல் இருக்காளே..அம்மா..எப்படிப் பட்ட சக்தியான ஒரு சொல். ஒரு தவம். அம்மா. மத்தவங்க அம்மாவெல்லாம் எப்படிஎப்படி இருக்காங்க. என்னோட அம்மா மட்டும்... ஏன் இப்படி? இல்ல எல்லா அம்மாக்களும் இப்படித்தான் சுயநல மனப்பான்மையோட இருப்பாங்களா? தான் தன் குடும்பம் என்பது மட்டும்தான் இவர்களின் உலகமா இருக்குமா?
பாரு..எங்கேடி போயிட்டு வந்தா?”
அம்மாவைத்தான் பாட்டி கேட்கிறாள். அம்மாவின் அம்மா. அம்மாவின் பேரு பார்வதி. பாட்டி பாருன்னுதான் கூப்பிடுவா. அம்மா இப்படியெல்லாம் இருக்குறதுக்கு இந்தப் பாட்டியும் ஒரு காரணம்தான்.  அவள் சொந்தமாக இருந்திருந்தால் சரசுக்கு இந்த நிலமை வந்திருக்காது. அப்பாவின் தங்கச்சி மகள்தான் இந்த சரசுவதி. அப்பா அம்மா ஒரு கார் விபத்தில் இறந்து போக வேறுவழியே இல்லாத ஒரு சூழலில் அப்பா அவளைத் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார். அத்தோடு அவர் கடமை முடிந்துபோனது. அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சரசு மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். என் அறையில்தான் அவளுக்கு இடம். ஆனால் பாய்விரித்துக் கீழேதான் படுப்பாள். இது என் அம்மாவின் கட்டளை. இல்லை பாட்டி கொடுத்த சாவி.

சரசு நன்றாகப் படிப்பாள். என்னைவிடச் சிறப்பான மார்க்குகளை வாங்குவாள். ஆறாம் வகுப்போடு அவள் படிப்பை நிப்பாட்டி விட்டாள் அம்மா. ஆனால் சரசுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்பாவிடம் சொல்லிக் கெஞ்சினாள்; அழுதாள். அம்மாவை மீறி எதுவும் செய்ய இயலாத அப்பா அமைதியாகிப்போனார்.
‘‘அந்த முண்டச்சிருக்கிக்கு படிப்பு ஒரு கேடா’’
பாட்டி அம்மாவுக்கு ஒத்து ஊதினாள்.
‘‘சரசு படிக்கட்டும்மா’’
என்றேன்.
வெலக்கமாறு பிஞ்சிடும்
என்றாள்.
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண்ணெயும் வைப்பது போல் அம்மா எங்களையும் அவளையும் வளர்த்தாள். பாவம். அந்தச் சின்ன வயசிலும் அத்தனை வீட்டுவேலைகளையும் ஒண்டியாகவே செய்வாள். எங்களுக்குப் படிப்பது மட்டும்தான் வேலை. அவளோ படிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தாள். சம்பளம் வாங்காத ஒரு மேட்டாக எங்கள் வீட்டில் இருந்தாள். அவளுக்கு உதவியாக வீட்டுவேலைகளைச் செய்தால் கூட அம்மா என்னைத் திட்டுவாள். ஒரு முறை அப்படித்தான். அம்மாவும் பாட்டியும் மாமா வீட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தச் சமயத்தில் சரசு வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவள் முகத்தில் ஒரு வித சோர்வும் வலியும் ஒன்று சேரத் தெரிந்தது.
‘’இன்னைக்குத்தான் பீரியட் முதல் நாளு ரொம்ப வலிக்குது; முடியல’’
என்றாள்.
ஒரு உதவியாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் அவளைக் கொஞ்ச நேரம் படுக்கச் சொல்லிவிட்டு துணிகளை நான் துவைத்துக் கொண்டிருந்தபோது அம்மா வந்ததை நான் கவனிக்கவில்லை. நேராக அடுப்பங்கரைக்குச் சென்று, நெருப்பு மூட்டி ஒரு கம்பியை அதில் போட்டு காய வைத்து  முதுகுப்புறத்தைக் காட்டி படுத்திருந்த அவள் தொடையில் சூடுவைத்தாள் அம்மா.
ஐயோ அம்மா
அந்த அலறல்; இன்றும் நினைத்தாலும் என் உள்ளம் நடுங்கும். அலறி அடித்துக் கொண்டு குளியலறையிலிருந்து வந்தேன். சூடு பளபளக்கும் கம்பியோடு ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள் அம்மா. ஓடிப்போய் அவள் கையிலிருந்த கம்பியைப் பிடுங்கி வீசினேன். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அம்மா கோபத்தில் என்னை ஓங்கி அறைந்தாள். பின் சரசுவின் பக்கம் திரும்பி,
‘’ஏண்டி நாயே, வீட்ல ஆளு இல்லனா இப்படித்தான் எம்பிள்ளைகள வேல செய்ய சொல்லிட்டு நீ படுத்துக்கிட்டு இருப்பியா’’
என அவளை அறைந்தாள்; அடித்தாள்; உதைத்தாள். சூடு பட்ட ரணம் ஒரு புறம். அம்மாவின் பலம் ஒரு புறம் என சுருண்டு விழுந்தாள் சரசு.
‘’அடியே பாரு உனக்கு புத்திகித்தி கெட்டுப்போச்சா ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிடப்போவுது அவ இல்லன்னா எல்லா வேலையும் உன் தலையிலத்தான்டி விடியும் ஞாபகம் வச்சிக்க’’
பாட்டி அம்மாவைத் பிடித்துத் தள்ளிக் கொண்டு போனாள். சரசு வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். நான் சரசுவின் தொடையைப் பார்த்தேன். நன்றாக சிவந்து கொப்பளித்திருந்தது. என்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை. விறுவிறுவென்று பாத்ரூமிற்குச் சென்று கோல்கெட் கொண்டு வந்து தடவி விட்டேன். அவள் முகம் வீங்கியிருந்தது. என்னால்தான் இவ்வளவும் என நினைத்தபோது எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அந்தக் கார் விபத்தில் இவளும், அவள் அப்பா அம்மாவோடு செத்திருக்கக்கூடாதா என்ற எண்ணமும் எனக்குள் தவிர்க்க முடியாமல் மின்னலாய்த் தோன்றி மறைந்தது.

தொலைக்காட்சி சீரியல் நாயகிகளுக்காக கண்ணீர் முட்டிக்கொள்ள பரிதாபப்படும் இந்த அம்மாவும் பாட்டியும், நிஜ வாழ்க்கையில் ஏன் இப்படி வில்லிகளாக இருக்கிறார்கள்? நிழலை ஆதரிக்கும் இவர்கள் ஏன் நிஜத்தை வெறுக்கின்றனர்? நடிப்பைக் கண்டு அழுபவர்கள், அந்தக் கதாபாத்திரத்திற்காக வக்காலத்து வாங்கும் வக்கீல்களாக நியாயங்களை அடுக்கிக் கொண்டு போகும் இவர்கள் யதார்த்த வாழ்வின் நிஜங்களை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை. எல்லாம் முரணாகவே எனக்குப் பட்டது. பழைய படம் ஒன்றில்,
‘’எல்லாம் நாடகமேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
 உருவம் தெரிவதுபோல அவர் உள்ளம் தெரிவது இல்லை’’
என ஜெமினி கணேசன் பாடியது எத்தனை உண்மை!

சாப்பிடும்போதுகூட எங்களின் சோற்றுக்குள் அவித்த முட்டையை ஒளித்து வைத்து கொடுக்கும் அம்மா, அவள் தட்டில் வெறும் சாதத்தை மட்டும் வைத்து தணணீர் ஊற்றிச் சாப்பிடச் செய்வாள். அவளுக்கும் தெரியும் எங்கள் தட்டுகளில் முட்டை இருப்பது. அத்தை எனக்கு முட்டை என அவள் கேட்க, உன்னோட அப்பா அம்மா எங்கிட்ட சம்பாரிச்சா கொடுத்துட்டு போயிருக்காங்க, தினமும் முட்டை போட்டு சாப்பாடு கொடுக்க எனத் திட்டித் தீர்த்துவிடுவாள்.  இன்றும் நினைத்தாலும் என் நெஞ்தில் ஒரு மூலையில் இனம்புரியாத ஒரு வலி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அம்மாவுக்குத் தெரியாமல் அவளுக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் ஏனோ செய்யவில்லை. மறைத்தே சாப்பிட்டுப் பழகிப்போனோம். எனக்கும் அம்மாவுக்கும் என்ன வித்தியாசம்? அவளுக்கு நடந்த பல கொடுமைகளுக்கு நானும் உடந்தையாகிப்போனேன். இவ்வளவு நடந்தும் அப்பா அம்மாவை எதுவும் கேட்க மாட்டார்.  இப்படியே காலம் உருண்டோடியது. அவள் எங்களைவிட சிவப்பாகவும் அழகாகவும் வளர்ந்தாள். இது ஒன்று போதாதா? அம்மாவுக்கும் பாட்டிக்கும்.

பாட்டியின் ஆலோசனைப்படி சரசுவிடம் ஒரு வார்த்தைக் கூடக் கேட்காமல் யாரோ ஒரு தூரத்து உறவுக்காரப் பையனுக்கு அவளை அவசர அவசரமாகக் கல்யாணம் செய்து வைத்து அனுப்பி வைத்தாள் அம்மா. எனக்கும் ஒரு வகையில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

தாமான் ஜூரோங்கில் உள்ள கன் சிங் சாலையில்தான் அத்தை மாமாவோடு சரசு வசித்து வந்தாள். நான் அப்பாவோடு ஒரு முறைதான் அவள் வீட்டிற்குப் போயிருக்கிறேன். அதன்பிறகு அப்பாவின் சாவிற்குத்தான் அவள் எங்கள் வீட்டிற்கு வந்தாள். அப்போதுகூட அம்மா அவளை ஒரு எதிரியாகவே பார்த்து செயல்பட்டாள். அவளால்தான் அப்பாவுக்கு இப்படி ஆகிவிட்டது என்று ஒப்பாரி வைத்தாள். சரசுவிற்கு எதிரான அம்மாவின் செயல்பாடுகளே அப்பாவின் இதயத்தைப் பலவீனமாக்கிவிட்டது. அம்மாவிடம் பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டவர் அவருக்குள்ளேயே அழுது அழுது மௌனமாகித் தன்னைத் தொலைத்துக்கொண்டார்.

தூரத்து உறவுக்காரப் பெண்மணி, மருமகள் செய்ய வேண்டிய சடங்கு எனச் சொல்லி, சரசிடம் கொஞ்சம் நெல்லைக் கொடுத்து சட்டியில் வருக்கச் சொன்னாள். சரசு அதை வருத்துக் கொண்டிருக்கும் போது, பார்த்துவிட்ட அம்மா எழுந்து போய் அந்தச் சட்டியை எத்தி விட்டு, தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தாள். அழுதுகொண்டே போனவள் அதன்பிறகு நடந்த அப்பாவின் கருமாதிக்குக்கூட முதல் படையலோடு போய்விட்டாள். அவள் அங்கு இருப்பதை அம்மாவும் விரும்பவில்லை. நானும் தேசியப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டுத் தேர்வு நேரம் என்பதால் இதுபோன்ற விஷயங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்து விட்டேன். அதோடு அவளைப்பற்றியச் செய்திகள் இல்லாமல் தொலைந்துபோனாள். 

முதுகலை பட்டப்படிப்புக்காக நன்யாங் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துவிட்டு கண்டீனுக்குச் செல்லும் வழியில் குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்தபோது சரசு மாதிரி இருக்க அருகில் சென்று பார்த்தேன். அவளேதான். முன்பு இருந்ததைவிட இன்னும் இளைத்திருந்தாள். முகமெல்லாம் கொஞ்சம் கருத்திருந்தது. ஏழ்மையின் சுமை அவளின் உடம்பு முழுவதும் ஒட்டிக் கிடந்தது. என்னைப் பார்த்தவுடனேயே,
அத்தை எப்படியிருக்காங்க?’
என்றுதான் கேட்டாள். என்னைக்கூடக் கேட்காமல் அம்மாவை அவள் கேட்டது எனக்கு வியப்பாக இருந்தது. அவளைக் கட்டிக்கொள்ள எனக்கு ஆவலாய் இருந்தது. ஆனால் ஏனோ என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. ஒப்புக்காக ஒன்றிரண்டு வார்த்தைகளைப் பேசிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன். கூட இருந்த தோழிகள் கேட்டபோதுகூட தெரிந்தவள் என்று மட்டுமே சொன்னேன்.

அன்று இரவு வீட்டுக்கு வந்த பிறகு என்னையே நான் நொந்துகொண்டேன். அவளைக் கட்டியணைத்து என் அன்பை, நான் அவள்மேல் கொண்டிருந்த பாசத்தைத் தெரிவித்திருக்கலாம். உனக்கு நானிருக்கிறேன் என்று உணர்த்தியிருக்கலாம். அல்லது சொல்லாமல் சொல்லியிருக்கலாம். அவளாவது சந்தோஷப்பட்டிருப்பாள். சமூக மதிப்பீடுகள் என்னைத் தடுத்து நிறுத்திவிட்டதா? எனக்காக வாழாமல் சமூக மதிப்பீடுகளுக்காக வாழும் கூட்டத்தோடு நானும் இணைந்துவிட்டேனா? இல்லை அவமானம் என்ற மாயைக்குள் நான் மூழ்கிப்போனேனா? அன்பை வெளிக்கொணர்வதில் என்ன கௌரவம் பார்க்க வேண்டியிருக்கிறது. குப்பை அள்ளும் பெண். அதுதான் காரணமா? அதைவிட மேலாக எனக்குத் தெரிந்தவள். சிறுவயது முதல் என்னுடனேயே வாழ்ந்து வந்தவள். என் குடும்பத்தின் சுயநல வேட்கையில் தன் படிப்பைத் தொரடமுடியாமல் போனவள். ஒருவேளை உணவைக்கூட நன்றாக சாப்பிடமுடியாமல் போனவள். அவளைப் பார்த்தவுடன் நான் என்ன செய்திருக்கவேண்டும்? நான் படித்த படிப்பு என்ன படிப்பு? இனியும் படிக்கப் போகும் முதுகலைப் படிப்பும் எதற்காக? மனிதநேயத்தை அடகு வைத்த படிப்பு இனியும் எனக்குத் தேவையா? அதற்கு நான் தகுதியானவள்தானா? அண்மையில் பிரதமர் சொன்னதும் என் நினைவில் வந்தது. மாணவர்களைத் தேர்வுக்காகத் தயார்படுத்தாதீர்கள். வாழ்க்கைக்காகத் தயார் படுத்துங்கள் என்ற வாசகம்.

மறுநாள் மீண்டும் என்.டி.யூ. விற்குச் சென்றேன். அதே கண்டீன் பக்கம் காத்திருந்தேன். தூரத்திலேயே என்னைப் பார்த்துவிட்டவள் சற்றுத் தயங்கி நின்றாள். நேற்று நான் நடந்துகொண்ட விதம் அவளை ஏதாவது ஒரு வகையில் பாதித்திருக்கலாம்.  நானே அவளருகில் சென்றேன். அவளைக் கட்டியணைத்தேன். அவள் விழிகளின் ஈரம் என் கைகளில் பட்டுத்தெரித்தது.
கண்டீனில் உள்ள  உணவுக்கடையில் இரண்டு தே தாரேக் ஆர்டர் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்கையில் அவளைப்பற்றிச் சொன்னாள். இல்லை இல்லை அழுதாள். அவள் கணவன் கேலாங்கில் நடைபெற்ற  குண்டர் கும்பல்களுக்கிடையேலான சண்டையில் கொலைக்குற்றம் சாற்றப்பட்டு சாங்கி சிறைச்சாலையில் இருக்கிறானாம். வயதான அத்தையையும் மாமாவையும் அவள்தான் பார்த்துக்கொள்கிறாளாம். இந்தத் துப்புறவு தொழிலில் மாதம் அறுநூறு டாலர் கிடைக்குமாம். அதை வைத்து சமாளித்துக் கொள்கிறாளாம். அன்று அவளுக்காகக் காத்திருந்து அவளுடனேயே அவள் வீட்டிற்குச் சென்றேன். வறுமையின் நிழல் சாயம்போன அந்த வீட்டில் படர்ந்திருந்தது. ஹாலில் சின்ன தொலைக்காட்சிப் பெட்டியும் இரண்டு பழைய ஷோபா நாற்காலிகளும்தான் இருந்தன. சரசின் அத்தை குடிப்பதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன் என்றபோது வேண்டாம், இப்போதுதான் குடிச்சிட்டு வந்தோம் எனக்கூறி சிறிது நேரம் பேசிவிட்டு வந்துவிட்டேன். அன்றிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவள் வீட்டிற்குச் சென்று என்னால் முடிந்ததைச் செய்து வந்தேன். அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குச் சென்று வந்தவுடன் அவர்களுக்காக வாங்கி வந்தவற்றைக் கொடுக்கச் சென்றதுக்காக அம்மா இன்று எகிறிக் குதித்துக் கொண்டிருக்கிறாள். வழக்கமான அம்மா. வழமையான பழக்கம். பழகிப்போய்விட்டதால் அமைதியாக இருந்துவிட்டேன். அமைதியும்கூட ஒரு வகையில் ஒருவித புறக்கணிப்பாக எனக்குப்பட்டது. அது ஒருவகை ஒத்துழையாமையாகக் கூட இருக்கலாம். அமைதியும் மௌனமும் எதிரிகளை நம் வசப்படுத்தக்கூடிய ஒரு மாபெரும் சக்தியாகவும் உருவெடுக்கலாம்.

அன்று வழக்கம்போல் எழுந்தபோது அம்மா பாத்ரூம் கழுவிக்கொண்டிருந்தாள். திடீரென்று ஓர் அலறல். ஓடிப்போய்ப் பார்த்த போது அம்மா கீழே கிடந்தாள். அம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு வந்து அவசரப்பிரிவில் சேர்க்கப் பட்டாள். இடதுபுறமாகப் பக்கவாட்டில் எல்லாம் செயலிழந்துவிட்டதாக டாக்டர் சொன்னபோது திகைத்துப்போனேன். மேலும் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கக்கூடிய அபாயத்தில் இருப்பதாகவும் உடனடியாக ஒரு மாற்று சிறுநீரகத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டிய சூழல் இருப்பதாகவும் சொன்னபோது நான் செய்வதறியாது நின்றேன். அருகில் இருந்த அம்மாவின் உறவுகளும் கூடப்பிறந்தவர்களும் பெற்ற பிள்ளைகளும் ஏன் நானும் அமைதியாக நின்ற போது, சரசு சொன்னாள்.
அக்கா என்னோட சிறுநீரகம் பொருத்தமா இருந்தா நான் கொடுக்கிறேன்’.


____________________________முற்றும்____________________________
தமிழ் முரசு - 21072013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக