வியாழன், 17 ஜனவரி, 2013

புதிய கதைக்களத்தில் அதிபதி

புதிய கதைக்களத்தில் அதிபதி

( சிங்கப்பூர் மேடை நாடகம்)


 இதுவரை சிங்கப்பூர் மேடை நாடக வரலாற்றில் யாரும் எடுத்துக் கொள்ளாத கதைக்களத்தில், உணர்ச்சிகளின் ஊர்வலமாக வலம் வரவிருக்கிறது அதிபதி.

யார் அந்த அதிபதி?

எதற்கு அதிபதி?

 நகைச்சுவை கலந்த வசனங்களுடனும் ஆடல் பாடல்களுடனும் வாழ்வின் விழுமியங்களை முன்னிலைப்படுத்தி நடிக்கப்படும் ஒரு மேடை நாடகம். அறிவியல் அணுகுமுறையில் நம் மனத்தோடு உறவாடி சிந்தனைகளைச் சீர்படுத்த வருகிறது. நான் பேசுவதைவிட இந்நாடகக்குழுவில் சம்பந்தப்பட்டவர்கள், இரவும் பகலும் பாராமல் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களின் கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

 திரு. கோபு (ரவீந்திரன் நாடகக் குழுவின் நிர்வாக உரிமையாளர்)

 15 வருடத்திற்கு முன்பு குறிப்பிட்ட பார்வையாளர்களின் முன் மேடையேற்றப்பட்ட நகைச்சுவை நாடகம் இப்போது மெருகேற்றப்பட்டு எல்லாரிடமும் போய்ச் சேரவேண்டும் மற்றும் உலக தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அதிகப் பொருட்செலவில் மீண்டும் மேடையேறுகிறது. இதற்காக மிகவும் உழைத்திருக்கிறார் இந்நாடகத்தின் இயக்குநர் இரா. புகழேந்தி. தமிழ் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திட நல்ல அணுகுமுறை மிகவும் அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். சிங்கப்பூரில் உள்ள இயக்கங்களோடு இயக்குநரின் சிறப்பான அணுகுமுறை எங்களுக்கும் மற்ற நாடகக் குழுக்களுக்கும் சிறந்ததொரு தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது.

அனைத்து மாணவர்களும் இந்நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் $5000.00 வெள்ளி மதிப்புள்ள நுழைவுச்சீட்டுகளைச் சிண்டாவிடம் கொடுத்திருக்கிறோம். மேலும் மாணவர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் நாடகத்தைக் காண சிண்டாவின் மூலமாகவும் பள்ளிகளின் மூலமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய சீமேய் தொழிற்நுட்பக்கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் இந்நாடகம் ஐந்து காட்சிகளாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு காட்சியையும் ஆயிரம் பேர் பார்க்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்டோரியா அரங்கில் கலைஞர் சங்கம் ஒரு காட்சிக்கு ஆயிரம் பேரைக் கூட்டியது. அதனை அடுத்து இந்த அதிபதிக்குத்தான் ஐயாயிரம் பேர் பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாடக வரலாற்றில் இது ஒரு மாபெரும் சாதனையாகும். நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒரு சாதனையாகும்.

 ரவீந்திரன் நாடகக்குழுவில் உள்ள நாங்களும் புகழேந்தியின் குழுவில் உள்ளவர்களும் இணைந்து செயல்பட்டு இந்நாடகத்தை வெற்றிபெறச் செய்துள்ளோம். அறிவியல் நோக்கில் கதாபாத்திரங்களை உருவாக்கி, வடிவமைத்து, ஒலி, ஒளி அமைப்போடும் பெங்களூரில் வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரங்களுடன் வரும் அதிபதியைப் பார்க்கும் போது எங்களுக்கு முழுமையான மனத் திருப்தியாக இருக்கிறது.

இரா. புகழேந்தி (அதிபதி இயக்குநர்)

 தமிழ் மொழி சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால் இதுவரையில் எக்ஸ்பிளனேட்டில் இன்னும் ஒரு தமிழ் நாடகம் கூட படைக்க நம்மால் இயலவில்லை. உலகத்தரத்திற்கு ஒரு தமிழ் நாடகம், சிங்கப்பூர் மக்களுக்காகக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு தமிழ் நாடகமும் இல்லை எனலாம். பெரும்பாலும் இந்தக் கோழி முட்டை கதை போலத்தான். நல்ல நாடகம் போட்டா ஆட்கள் வரமாட்டாங்க. அப்படியே வந்தாலும் கூத்தும் கும்மாளத்திற்கும்தான் வருவாங்கணு நிறைய பேர் கூறுகிறார்கள். இந்த ஒரு வாதத்தை முறியடிக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஆரம்பித்தோம். ஐயாயிரம் பேரை ஒரு நாடகத்திற்கு வரவழைத்தல் என உழைத்தோம். அதன் பயன்தான் சீமேய் தொழிற்நுட்பக்கல்லூரியின் இந்தியர் நடனக் குழுவும், ரவீந்திரன் நாடகக்குழுவும் எங்களோடு கை கோர்த்து இந்த அதிபதியை உங்கள் முன் அரங்கேற்றுகிறது.

 பதினைந்து வருடங்களுக்கு முன் வெற்றிப்பெற்ற ஒரு மேடை நாடகம், சிங்கை வானொலியில் ரே. சோமசுந்தரம் அவர்களால் மறுவாழ்வு பெற்ற ஒரு நாடகம், மீண்டும் உங்கள் முன் புதிய பரிமாணத்துடன் படைக்கப்படவிருக்கிறது. உலகத்தோடு ஒட்ட ஒழுகப் பல கற்றும் கல்லார் அறிவிலாதார் என்பதுபோல இக்கால இளையர்களுக்குத் தேவையான கருத்தை அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்லப்படும்போது கருத்துகள் போய்ச்சேரும். நம் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றப்படும். நம் மொழியின் பயன்பாடும் மேன்மையடையும்.

கதைச்சுருக்கம் இதுதான். மூளையில் ஒரு நாற்காலி. எந்த உணர்ச்சி அங்கே உட்காருகிறதோ அதுதான் அதிபதி. எந்த உணர்ச்சி உட்கார்ந்தால் நாம் வாழ்க்கையின் வெற்றி பெறலாம். இளைஞராகவும் வாலிபராகவும் முதியவராகவும் பெற்றோர்களாகவும் என்பதை எல்லா உணர்ச்சிகளும் பேசுகின்றன; ஆடுகின்றன; பாடுகின்றன நகைச்சுவையாக.

சென்ற தடவை ஒரு குழுவால் மட்டும் நடிக்கப்பட்ட இந்நாடகம் இம்முறை இரண்டு குழுக்களால் நடிக்கப்படுகிறது. ஆண் DNA (மரபணு)  எனவும், பெண் DNA எனவும் இரண்டு கதாபாத்திரங்களோடு உணர்ச்சிகளின் பாய்ச்சல் புது வடிவமாகி, புதுமையாக, புதிய பரிமாணத்தோடு, புதிய பிம்பத்தை, ஒரு பிரமிப்பை தோற்றுவிக்கிறது.

உலகத் தரத்தில் நடிகர்களை எங்கே தேடுவது? இங்குள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து 300 மணி நேரப் பயிற்சி கொடுத்து, சுவா சூ காங் பார்க்கில் சீனர்கள் மத்தியில் வசனம் பேசி, டேபள் ரீடிங் செய்து, கிடைத்த வைரங்களைப் பட்டைத் தீட்டியிருக்கிறோம். நடிப்பு, ஆடல், பாடல் என ரசிக்க வைக்கும் இந்நடிகர்கள் பாராட்டுக்குரியவர்கள். சிங்கப்பூரின் நாடகக் கலையை அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்று சாதனைப் படைக்கக்கூடியவர்கள்.

 சிங்கப்பூர் குடும்பச்சூழலில் பெற்றோர்களும் பிள்ளைகளும் உட்கார்ந்து பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் எதை எதையோ நோக்கி ஒடிக்கொண்டிருக்கின்றனர். நகைச்சுவைத் தன்மையுடன் கூடிய இந்நாடகத்தைப் பெற்றோர்களும் பிள்ளைகளும் சேர்ந்து பார்க்கும்போது அவர்கள் சேர்ந்து சிரிப்பார்கள், வீட்டிற்குச் சென்ற பிறகும்கூட இந்நாடகத்தைப் பற்றிப் பேசி சிரிப்பார்கள். இதனால் அவர்களுக்குள்ளே ஒரு இணக்கப் போக்கும் குடும்ப உறவில் நெருக்கமும் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இதையெல்லாம் மனத்தில் வைத்துதான் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இந்நாடகத்தைப் பார்க்க வாய்ப்புகளையும் வழங்கியுள்ளோம்.

பேசும் கதாபாத்திரங்கள்

 எஸ். விக்னேஸ்வரன் (ஆண் DNA - மரபணு)

மனிதர்களுக்குப் பல உணர்ச்சிகள் இருக்கின்றன. DNA பணி என்னவென்றால் எந்த உணர்ச்சி மனிதனை ஆதிக்கம் செலுத்தினால் அம்மனிதன் வாழ்வில் வெற்றியடைய முடியும் என ஆராய்ந்து அந்த உணர்ச்சியைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்தக் கதாபாத்திரம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அனைத்து உணர்ச்சிகளுக்கு ஏற்பவும் நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 சிரிப்பு மனத்துக்கு மருந்து என்பார்கள். நாங்களும் நகைச்சுவையோடு நல்ல கருத்துகளை மாணவர்களுக்குப் பொதுவாக அனைவருக்கும் முன் வைக்கிறோம். நகைச்சுவையோடு ஒரு கருத்தைச் சொல்லும்போது அது பார்ப்பவர்களின் மனத்தில் ஆழமாகப் பதியும் என நாங்கள் நம்புகிறோம்.

அருணா (பெண் DNA - மரபணு)

 DNA என்பது எந்த உணர்ச்சிகளுக்கும் கட்டுப்படாதது. நடுநிலையானது. அது ஒவ்வொரு உணர்ச்சிகளையும் உணர்ந்து பார்த்து மனிதனுக்குத் தேவையான உணர்ச்சியைத் தேர்ந்தெடுத்து மூளையின் சிம்மாசனத்தில் அதிபதியாக அமர வைக்கிறது. ஒவ்வோரு உணர்ச்சிகளின் தாக்கங்களின் போதும் மாறுபட்டு நடிப்பது மிகவும் சவாலாக இருக்கிறது.

 நாம் எப்போதும் ஏதாவது ஒரு உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருப்போம். இந்நாடகத்தில் சில சமயங்களில் DNA எந்த உணர்ச்சிகளையும் காட்டது வெறுமனே நிற்க வேண்டும். எந்த உணர்ச்சிகளாலும் தாக்கப்படாமல் நடிப்பது என்பதுதான் மிகவும் சவாலாக இருக்கிறது.

 வீட்டில் பிள்ளைகளுடன் பேசுவதற்குக்கூட பெற்றோர்களுக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை. எங்கே பிள்ளைகளுடன் இவர்கள் சேர்ந்து சிரிப்பது? இந்த நாடகத்தைப் பார்க்கும் போது சில விஷயங்கள் அவர்களுக்கும் புரியும். கண்ணுக்கம் சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் நல்லதொரு விருந்து இந்நாடகம்.

 விக்னேஸ் கே. பாலன் (சோகம்)

சோகத்தைப் பிரதிபலிப்பது மிகவும் கடினமானது. அதுவும் சோகத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்துவது என்பது எனக்கும் சவாலாகத்தான் இருக்கிறது. இந்தச் சோகம் என்பது காதல் சோகம் அல்ல. தேர்வுத் தோல்வியின் சோகமும் அல்ல. வாழ்க்கையே மூழ்கிவிட்ட ஒரு சோகம். அதன் பிரதிபலிப்பு. ஆரம்பத்தில் வசனங்களில் கவனம் செலுத்தினேன். பின் உணர்ச்சிகளுக்கேற்ப பாவங்களை எப்படி வெளிக்கொணர்வது என இயக்குநர் கற்றுத்தர என்னை நான் அதற்கேற்பத்தயார் படுத்திக் கொண்டுள்ளேன்.

தவநேசன் (சோகம்)

சோகத்தைவிட நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து என் கதாபாத்திரத்தை மெருகேற்றியுள்ளேன். என் முதல் மேடை நாடகம் இது. முதல் நாடகத்திலேயே ஆயிரம் பேர் முன்னிலையில் நடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அதற்காக நிறைய திரைப்படக் காட்சிகளைப் பார்த்து உடல் பாவனை போன்றவற்றை என் மனத்தில் நிறுத்தி நடித்துள்ளேன். சோகம் மனித வாழ்விற்குத் தேவை என வாதிடுவது எனது வேலை. அதை இயக்கநரின் வழிக்காட்டுதலோடு சிறப்பாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.

 ஜெட் செந்தில் ஜீவராஜ் (கோபம்)

ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப கோபம் வேறுபடும். கோபம் வரக்கூடாது என நாம் கட்டுப்பாடாக இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட கோபங்களை எனக்குள்ளே தேடித்தேடி அதை வெவ்வேறு பரிமாணங்களில் காட்ட முயன்றுள்ளேன். இயக்குநரின் வழிகாட்டுதலில் நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டுள்ளேன். கோபத்தையும் நகைச்சுவையாகக் காட்ட வேண்டும் என்பது மிகவும் சிரமமான ஒரு பணியாகும். நமது கல்வியமைச்சின் Holistic Character Development என்பதற்கேற்ப சொல்லப்பட்டிருக்கும் இந்நாடகத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

 நவீன்நேசன் (அன்பு)

ஒரு மாபெரும் தயாரிப்பில் என் முதல் அனுபவம். ஆரம்பத்தில் வேறுபல கதாபாத்திரங்களில் முயற்சித்த நான் இறுதியில் அன்பே சிவம் என சரணாகதியாகிவிட்டேன். அன்புதான் உலகை நல்வழிப்படுத்தும். அறிவியல் அணுகுமுறையில் உணர்ச்சிகள் உங்களோடு உரையாட வருகின்றன. நகைச்சுவையை அதிகமாகக் வெளிக்காட்ட முடியாத ஒரு நிலை என் கதாபாத்திரத்திற்கு உண்டு.

 டனராம் (பயம்)

எனக்குள் இருக்கும் பயத்தை நினைத்துக் கொண்டு, அதை வெளிக்கொணர இயக்குநர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். மற்ற உணர்ச்சிகளோடு நடிப்பது, நடனமாடுவது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கிறது. இந்நாடகத்தில் நடித்த பிறகுதான் என்னையே நான் முழுமையாக அறிந்து கொண்டேன். இந்நாடகத்தைப் பார்க்கும் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பு ஏற்படும் என்று நிச்சயமாகக் கூறுவேன்.

பிருந்தா (காமம்)

 காமம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒன்று. ஆனால் யாரும் அதைப்பற்றி அதிகமாகப் பேசுவதில்ல. இதை உணர்ச்சிப்பூர்வமாக நடிப்பில் காட்டுவதென்பது சிரமமான ஒன்றுதான். இயக்குநரின் ஆலோசனைகளும் வழிகாட்டதலும், பெற்றோரின் ஆதரவும் எனக்குச் சிறந்த ஒரு ஊக்குவிப்பாக இருக்கிறது. மற்ற உணர்ச்சிகளைப் போல் இதுவும் மனிதனுக்குத் தேவையான ஒன்றுதான். ஆனால் அந்தத் தேவை எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ளல் வேண்டும். காமம் நகைச்சுவையோடு கலந்து அன்பைக் காட்டும். அதை யாராலும் எளிதில் வெறுக்க முடியாது.

புவனேஸ் (பேராசை)

 ஆசை மனிதனை ஆட்டிப்படைக்கும் ஒன்று. ஆசையில்லாத மனிதனே இல்லை எனலாம். ஆனால் மனிதர்கள் பெரும்பாலான தங்களின் ஆசைகளை யாரிடமும் சொல்வதில்லை. இந்தக் கதாபாத்திரம் மனிதனின் மனசுக்குள் இருப்பதை வெளிப்படுத்தும். நிறையப் பயிற்சிகள். விலையுயர்ந்த கடைகளுக்கெல்லாம் சென்று, அங்கு பொருட்கள் வாங்க வருபவர்களின் உடல் பாவனைகளைக் கவனித்து அதை என் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியுள்ளேன். அனைத்துக்கும் ஆசைபடு. ஆனால் அது பேராசையாக இருக்கக்கூடாது என்பதை இந்நாடகம் ஒரு விஞ்ஞானப் பார்வையோடு நமக்குக் காட்டுகிறது.


 பதினைந்து வருடங்களுக்கு முன் நடிக்கப்பட்ட ஒரு நாடகம் இன்றும் நமக்குப் பொருந்துகிறது. நாளையும் பொருந்தும். மனித விழுமியங்கள் என்றும் எங்கும் எப்போதும் ஒன்றுதான். மாற்றங்கள் மனிதனிடம்தான். விழுமியங்களில் அல்ல.

- சந்திப்பும் செய்திகளும் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக