ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

அருகாமை அனைத்தையும் வெறுமையாக்கும்




வானம் தொட்டுவிடும்
தூரம்தான்
அதற்காக
வானத்தைத்
தொட நினைக்காதே

அருகாமை
அனைத்தையும்
வெறுமையாக்கும்
தளத்தில்
இயங்கிக்கொண்டிருக்கிறது
நிலவைப் போல

ஒளிந்து நின்ற காதல்





தொடத் தொட
தூரமாய் விலகுகிறது
காதல் இங்கு


மனம்
அழகாக
நிலவாய் மிளிர்கின்றது

வரிகள்
உனக்குச் சொந்தமானதுதான்
என் வரிகளில்
நீயே சிரிக்கின்றாய்
நீயே அழுகின்றாய்

இதயம்
அழகாக ஒளிர்கிறது
காதல்
ஒளிக்காற்றை
வீசுகிறது
மனவெளியில்
தூரமாய்
ஒளிந்து நின்று

சொல்லைச் தேடும் நன்றி


நன்றி சொல்ல 
ஒரு 
சொல் இல்லை

தனக்காக
ஒரு 
சொல்லைத் தேடுகிறது
நன்றி

பேசப்படுபவன்



வாழ்க்கை
ஒரு
காற்பந்துத் திடல்
கோல் போட்டவன்
மட்டுமே
இங்கே
பேசப்படுகிறான்

தப்பாய் அச்செடுக்கப்பட்டவர்கள்


நாங்கள்
உணர்ச்சிக்கொல்லிகள்
ஒவ்வொரு நாளும்
தூக்கிலிட்டுக் கொள்கிறோம்
நாங்களாகவே

குயவன் கையால்
தப்பாய் அச்செடுக்கப்பட்டவர்கள்

நாங்களும்
உங்களைப்போன்றவர்கள்தான்
எங்களையும் கொஞ்சம்
வாசியுங்கள்

வெளிவாசிப்புகள்
புறத்தை மட்டுமே
உங்களுக்கு
அடையாளம் காட்டும்

மனவாசிப்புகள்
அகத்தைத் திறந்து
எங்களின் துயரங்களை
உங்களிடம்
கைகுலுக்கி
அறிமுகம் செய்து
அடையாளம் காட்டும்

நரகம் என்பார்களே
அது வானில் இல்லை
இங்கே
நாங்கள் படும்
துயர்தான் அது

மனத்தளும்பல்கள்
ஒவ்வொரு விடியலிலும்
விழிகளை
பனிநீரால் தாலாட்டி
சூடாக்கி விடுகின்றன

வெப்பம்
குளியல் செய்கிறது
உடல் முழுக்க

ஆணாகவும் இல்லை
பெண்ணாகவும் இல்லை

ஆண் என்றால்
ஆண்
பெண் என்றால்
பெண்

இது
எங்களுக்கு மட்டுமே
சாத்தியப்படும்
ஏனெனில்
நாங்கள்
கடவுளின்
நேரடிக்குழந்தைகள்

காமத்தோடு பார்க்காதீர்கள்
மனத்தோடு பாருங்கள்
அருவருப்பாய் பார்க்காதீர்கள்
அரக்கப் பார்வைகள்
எங்களை
எரிக்கின்றன
அன்பாய் பார்க்காவிட்டாலும்
பரவாயில்லை
பார்க்காதவாறு
இருந்து விடுங்கள்

நாங்கள்
கொஞ்சம் நிம்மதியாக
இருந்து விட்டுப்போகிறோம்.

புதன், 22 பிப்ரவரி, 2012

பெய்யும் மழையில் நனையும் மனம்





நீரின் அடியாழத்தின்
குளிர்ச்சியாய்
இங்கே
ஆழ்மனதில் மூடிக்கிடக்கிறது
நம் காதல்

நீண்டு வளரும்
அடுக்குமாடி வீடுகளின்
நிழல்கள்
நம் காதலைச்சொல்லும்

நீரில் மிதக்கும்
ஆம்பல் இலைகளின் மேலே
நினைவின் கண்ணாடிகளின்
நீர்க் குமிழ்களும்
நம் காதலைப்பேசும்

தெருவோரத்து நிழல்மர
பூக்களின் வாசங்களிலும்
வண்ணத்துப் பூச்சிகளாய்
வட்டமடிக்கும்
நம் காதல்

சூரியன் உறைந்துபோன
காலங்களில்
நிலவின் ஒளிர்க்காற்று
வீசும் வேளைகளில்

ஆசைகள்
மனம் முழுக்க
தளும்பிக்கொண்டிருக்க

வெட்கத்தை உடுத்திய
உன் பார்வைகள்
எனக்குப் பிடித்திருக்கிறது

இதோ
உனது இந்த அருகாமை
எனக்குப் பிடித்திருக்கிறது

துள்ளிக் குதிக்கும்
நீர்த் திவலைகளாய்
மனம்
பெய்யும் மழையில்
நனைந்துக்கொண்டிருக்கிறது.

குடை கிழிந்துகொண்டிருக்கிறது


Umbrella left behind...


தேவதாசிகள் கூடும்    
அந்தத் தெருவில்
உன் நினைவுகளைச்
சுமந்துகொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்

உன் வார்த்தைகளை
என் மனதுக்குக் குடையாக்கி
நடந்து கொண்டிருக்கிறேன்

தேவதாசி ஒருத்தியின்
கொஞ்சலிலும் கெஞ்சலிலும்
பெரும்காற்று வீசுகிறது

நான்
உனக்கு உண்மையாக இருக்கவே
விருப்பப்படுகிறேன்
ராமனும் கிருஷ்ணனும்
என்னைப்பார்த்து சிரிக்கின்றனர்

என் இதயத்தில்
உன் முகம்
அமிழ்ந்த தடம்
வெற்றிடமாய்
காற்றில் மிதக்கிறது

குடை கிழிந்துகொண்டிருக்கிறது.

சனி, 18 பிப்ரவரி, 2012

மணிமேகலையின் அழுகைகள் மட்டும்


Mother Nature Crying



நினைவுகளின் அழுகைகளில்
ஒரு காவியம்
இங்கே பிரசவிக்கப்படுகிறது

உண்மையின் அழுகைகளில்
ஒரு காப்பியம்
இங்கே புனையப்படுகிறது

கண்ணீரின் அழுகைகளில்
ஓர் இதயம்
இங்கே கதாபாத்திரமாக்கப்படுகிறது

பூக்களின் அழுகைகளில்
ஒரு பனிக்குவியம்
இங்கே பூத்துக்குலுங்குகிறது

தென்றலின் அழுகைகளில்
ஒரு புகைமூட்டம்
இங்கே தகர்த்தெறியப்படுகிறது

கடலின் அழுகைகளில்
ஓர் அலைக்கூட்டம்
இங்கே சுனாமியாக்கப்படுகிறது

பாஞ்சாலியின் அழுகைகளில்
ஒரு நம்பிக்கை
இங்கே வளர்க்கப்படுகிறது

கண்ணகியின் அழுகைகளில்
ஒரு பெண்மை
இங்கே புனிதமாக்கப்படுகிறது

மாதவியின் அழுகைகளில்
ஒரு மரபு
இங்கே புதைக்கப்படுகிறது

மணிமேகலையின் அழுகைகள் மட்டும்
இங்கே இன்னமும்
ஏனோ தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.....


செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

காதலே காதலுடன் காதலுக்காக.......






I LOVE U

இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
மீண்டும் உன்னிடமிருந்து
இந்த ஐ லவ் யூ
என் செல்போனில் நளினம் புரிந்தது

மறந்தே விட்டேன்
நம் காதலை
ஞாபகப்படுத்தியதற்கு
என் நன்றிகள்

இந்த காதலர் தினத்தில்
உன்னிடம் இதைச் சொல்லியே ஆகவேண்டும்
இந்த வாழ்க்கையில்
எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நீ

உன்னைச் சந்தித்த
அந்த முதல் நாள் டிசம்பர் 5
இன்றும் நினைவில்
கலர் கலராய் நிழலாடுகிறது

அது
ஓர் உயரிய உணர்வு
உனக்கான எனக்கான
ஓர் உயரிய மனஉணர்வு

காதல்
அது
ஒரு நுண்ணிய அழகு
அனைத்தையும் அழகாகக் காட்டும்
இதயத்தைச் சிறகடித்துப் பறக்க வைக்கும்
இந்த உலகையே நமது காலடியில் வைக்கும்

உன் பெயரை
மேகத்தில் எழுதினேன்
காற்று அதை எங்கோ ஒளித்துவைத்தது
உன் பெயரை
மணலில் எழுதினேன்
கடலலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன
உன் பெயரை
நெஞ்சுக்குள் எழுதினேன்
இன்றுவரை என்னுடனே இருக்கிறது

உன் விழிகள்
என்னைப் பார்க்கும்போதெல்லாம்
நினைவில் வை
என் காதலை

அன்பே ஐ லவ் யூ!

காதலே காதலுடன் காதலுக்காக................................




திங்கள், 13 பிப்ரவரி, 2012

நான் நானாக இருப்பதில்லை




எதுக்காகவோ
யாருக்காகவோ
சில சமயங்களில் சமரசங்கள்
வாழ்க்கையின் அத்தியாவசியத்
தேவையாய் போய்விடுகின்றன

எங்கும் சமரசம்
எதிலும் சமரசம்

நான் நானாக இருப்பதில்லை
மற்றவர்களாய் மாறுகிறேன்
மற்றவர்களுக்காக

கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம்
என் சுயத்தை நான் இழக்கிறேன்
என் முகத்தில்
என் முகம் தெரியவில்லை
வேற்று முகங்கள்தான் சிரிக்கின்றன

என் சந்தோஷம்
என் துக்கம்
மற்றும் எனக்குள்ளும்
நான் நானாக இல்லை
வேறு யாரோவாக நான் பிரதிபலிக்கிறேன்

பிறந்தவுடன் சொன்னார்கள்
நான் அம்மா மாதிரி என்று
வளர்ந்தவுடன் என் அத்தை சொன்னாள்
அவள் அண்ணன் மாதிரி நான் என்று

இன்றோ
என் மகனைப் பார்த்து
என் மனைவி சொல்கிறாள்
அப்பா மாதிரியே பிள்ளன்னு

யாரின் முகத்தையோ குணத்தையோ
யார் மேலேயோ தினித்து தினித்து
தனி மனித அடையாளம்
இங்கு திவாலாகிவிட்டது.






வாய்விட்டு அழவும்
இங்கு
வசதிகள் தேவையாய் இருக்கின்றன

நெஞ்சத்தைக் கிள்ளும்
எனது கவிதை வரிகளில்
கொஞ்சம்
அழுதுவிட்டுப்போங்கள்
இல்லை
வாடகைக்காவது
சோகங்களைக் கொடுத்துவிட்டுப்போங்கள்

இங்கு மனங்கள் அழவேண்டும்

ஒரு கவிதை
மரணத்துடன் போராடித் தோற்றுக்கொண்டிருக்கிறது









உன்னை உடைத்துவிடும்
எண்ணம் எனக்கில்லை

ஒடிந்து விழும்
தனிக்கிளையின்
பூமிபந்து சுவாசமாய்
நான்


ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

காதல் இன்னும் முழுப்பெறவில்லை......



உன் வார்த்தை
மின்னலாய்
உயிரைத் தொட்டது
சில்லென்று

முச்சந்திகள் இல்லை
இருட்டான இடம் இல்லை
கடற்கரை இல்லை
சினிமா இல்லை

காதல் முழுப்பெறவில்லை

உன் அன்பு
மழையின் நனையல்களில்
முத்து முத்தாய் கவித்துளிகள்
சிதறி விழுகின்றன
சின்னச் சின்னதாய்
ஈரமனத்தில்

இயற்கை
கடலலைகளைச் சபித்தாலும்
உன் அன்பு
கடலலைகளைக் காக்கும்

நீ மகாராணி
உன் மகுடத்தின் வெண்முத்தாய் நான்

நீ நிலா
அந்த நிலவின் ஒளிக்கீற்றாய் நான்

நீ நீலவானம்
உன் இதயத்தில் தவழும் வெண்மேகமாய் நான்

மிகப்பெரிய மாமலை நீ
கீழே விரியும்
பச்சைநிற பள்ளத்தாக்காய்
படற்கிறேன் உனது காலடியில் நான்

நான் தூய்மையான நதியாகி
மகாசமுத்திரமான உன்னிடம்
இளைப்பாற ஓடோடி வருகிறேன்

நான் கீழே விழும்பொழுதெல்லாம்
என் இதயத்தை
உன் கைகளால் தாங்கிக்கொள்கிறாய்

இரவு முழுவதும் உன் கனவு
பொழுது புலர்ந்தும் உன் நினைவு

காதல் இன்னும் முழுப்பெறவில்லை.


என் காதலை
உன் பாதத்தில் வைத்து
இதயத்தில் கோயில் கட்டினேன்
உனக்காக

அங்கேயும் காவலுக்கு
உன் அப்பா

புதன், 1 பிப்ரவரி, 2012

காதல் வலிகள்




என் அறையில் நான் மட்டும் தனியே
பாடல் கேட்டேன்
நீயும் நானும் ரசித்து ரசித்து கேட்ட
அந்தப் பாடல்
நினைவுகளை அறைகிறது
நம் முதல் சந்திப்பு
அதிர்ந்து கீழே விழுகிறது

நானும் நீயும் சேர்ந்து எடுத்துக்கொண்ட
அந்த முதல் படம்
கலர் மங்கிப்போய்
என் முன்னால்......
விழிச் சாரல்களில் நனைகிறது

எத்தனை சந்தோஷம் அன்று

உன்னோடு பேசியது பாடியது நடனமாடியது
உன்னோடு சண்டை போட்டது
என் விரல்களைப் பிடித்து
உன் இதயத்தோடு வைத்துக்கொண்டது
குடையிருந்தும்
என்னோடு மழையில் நனைந்தே நடந்தது

எல்லாம் தொலைந்துபோனது

பழகிய ஐந்து ஆண்டுகள் நேற்றைப்போல்
பழசாகிப் போனது
ஆம் போனது போனதுதான்
நம் காதலைப்போல்

போனது காதல்தான்
இதயம் அல்ல

உன் சொல்
உன் வார்த்தை
மறக்கக்கூடியவையா அவை

விழிகளில் ஒரு கவிதை
காத்திருக்கிறது
உன் வாசிப்பிற்காக...

இதழ்களில் ஒரு ஈரம்
தவிக்குது
உன் தொடுதல்களுக்காக....

காதலில் ஒரு பார்வை
ஏங்குது
உன் புன்னகைக்காக...

முழுமையாக நம்பினேன்
காதல் வலித்ததுதான் மிச்சம்.











உன் புன்னகை
உனக்காக
நிறையவே பேசுகிறது
என்னிடம்