ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நினைவின் சாரல்கள்



முழுமையான நிலா ஒளியில்
ஒளிர்கிறேன்
சிறகடித்துப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளாய்

ஆறு மணல் காடென
சுற்றித் திரிந்த கால்கள்
நிறுத்தம் தேடி ஓய்கையில்
பார்க்கும் இடமெல்லாம்
சுண்ணாம்புக் கற்கூடுகளாய்
மனங்கள் திரிந்து கருகிக் கிடக்கின்றன

ரெண்டு எலி வெட்டின்
தாய்மையின் உருவகமான ரப்பர் மரக்காடுகளும்
குரங்குகளும் பாம்புகளும் சீயான்களும்
உயர்ந்து வளர்ந்த 'லௌடா' கொட்டை மரங்களும்
மழை ஓசை எழுப்பும்
பக்கத்து வெட்டுக்காரர்களின் ஒலிகளும்
காலைமழையால் வீட்டில் இருக்கும் அம்மாவை
'பாப்பாத்தி கெர்ஜா' என அழைக்கும்
'கப்பாளாவின்' பழைய 'யமஹா' மோட்டார் சத்தமும்

மேட்டுப் பகுதியில் பால்வாளியோடு
உருண்டு விழுந்த வலிகளும்
செம்மண் ரோட்டில்
பிரேக் இல்லாத சைக்கிளில்
தம்பியோடு பள்ளத்தில் விழுந்த தளும்புகளும்

ஒட்டுப்பால் வாடையும்
கட்டிப்பால் வாடையுமாக
உயிர் உள்ள வரை
நினைவின் சருகுகளாக
வாழ்ந்து விட்டுப் போகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக