செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

நாட்டுப்புறவியலில் தாலாட்டு


நாட்டுப்புறவியலில் தாலாட்டு


முன்னுரை 

                மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன.  நாட்டுப்புற வழக்குகள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியலாகும். மண்ணின் மைந்தர் தம் மனக்கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளளையும், பழமையான எண்ணங்களையும், வெளிப்படையாகக் காட்டும் கண்ணாடி. ஒரு நாட்டின் வாழ்வையும், வரலாற்றையும், குறையையும், நிறையையும் தெள்ளத்தெளிவாக காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்கள். 

      நாட்டுப்புறவியலை நாட்டுப்புற இலக்கியம், கலை என இரு பிரிவுகளில் அடக்குகின்றனர். எழதப்பெற்ற இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றால்  நாட்டுப்புற இலக்கியம் சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடி எனலாம். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புறப்பாடலின் பொருளாகின்றன.
      மக்களின் வாழ்க்கை தாலாட்டுப் பாடலில் தொடங்கி விளையாட்டு, காதல் பாடல்களில் வளர்ந்து, திருமணப் பாடலில் நிறைவெய்தி, ஒப்பாரிப் பாடலில் முடிவடைகிறது. இன்ப துன்பங்களைப்பற்றி மக்களே பாடுவதால் இதனை மக்கள் இலக்கியம் என்றும் கூறுவர்.


தாலாட்டு
      தாய் உலகுக்குத் தந்த முதன்மையான இலக்கியப் பரிசுதான் தாலாட்டு. இது வாழ்வின் தொடக்கவுரை.

      நெருப்பைச் சந்திக்காத தங்கமோ
       உளியைச் சந்திக்காத சிற்பமோ
       யுத்தத்தைச் சந்திக்காத தேசமோ
       பிரசவத்தைச் சந்திக்காத பெண்ணோ.....
       முழுமையடைவதில்லை எனவே,

முழுமை அடைந்த அந்தத் தாய்மை கொடுத்த கொடைதான் தாலாட்டு. தாய் ஆழங்காண முடியாத அன்புக்கடல். அக்கடலில் விளைந்த வலம்புரி முத்தே தாலாட்டு[1]  என்கிறார் டாக்டர் ஆறு. அழகப்பன். தாயின் அன்பையும் சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும் என்கிறார் நா. வனமாமலை. எனவே தான், தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசு என்று தமிழண்ணல் தன் காதல் வாழ்வு என்னும் நூலில் தாலாட்டுக்கு மகுடம் சூட்டுகிறார். தாலாட்டில் தாய்மையின் தவிப்பும் பூரிப்பும் எதிர்பார்ப்புகளும் வைகறையின் வசந்தங்களும் இறைவனின் இனிய நாமங்களும் வரலாற்றுப் பெட்டகங்களும் நிறைந்திருப்பதைக் காணலாம் என்கிறார் டாக்டர் சு. சக்திவேல்.
      ஆணும் பெண்ணும் இணைந்ததுதான் குடும்பம் எனும் ஓவியம். ஓவியத்திற்கு மெருகூட்டுவது நிறங்களாகும். நிறமாக வருவதே குழந்தைச் செல்வம். பெண்மையின் சிறப்பே தாய்மைதான். தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே தாலாட்டு மலர்கின்றது. தாயின் நாவசையில் தாலாட்டு என்னும் நல்முத்து பிறக்கின்றது. இருவரிடம் பூக்கும் காதலைவிட, உடன்பிறந்தார் வாழ்க்கையைவிட, ஏன் உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது, வலிமைமிக்கது, உணர்ச்சிமயமானது. பெண்மைக்குத் தாய்மை கிடைத்துப் பூரித்துப்போகும் வாழ்வின் உயிர் நிகழ்ச்சியே பிள்ளைப்பேறாகும். பல படைத்துப் பலரோடு உண்ணக்கூடிய செல்வமிக்கவர் ஆனாலும், மயக்கத்தைத் தரும் மக்கள் இல்லாத வாழ்நாள் வீணாகும் என்கிறான் பாண்டிய மன்னன்.
     
தாலாட்டு – சொல்லாராய்ச்சி

      தாலாட்டு என்ற சொல்லைத் தால் + ஆட்டு எனப் பிரிக்கலாம். தால் என்றால் நாக்கு என்றும், நாவை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு எனும் பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுவர் [2].
      தால் என்பதற்குத் தொட்டில் என்றும் பொருளுண்டு. தொட்டிலை ஆட்டிப் பாடும் தொட்டில் பாட்டு, தாலாட்டு என்று பெயர் பெற்றிருக்க வேண்டும்[3] . தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ அல்லது தொட்டிலிலோ வைத்து ஆட்டியபடித் தாலாட்டுவதே வழக்கம் என்கிறார் பாலசுந்தரம்[4]. இதன்படி பார்த்தால், தாய் தன் குழந்தையைத் தொட்டிலில் மட்டும் வைத்து உறங்கவைக்கவில்லை. மடியிலோ, தோளிலோ, கைகளிலோ வைத்தும் உறங்க வைக்கிறாள் என்றும் அறிய முடிகிறது.

                தாலாட்டு எனும் சொல் அவ்வாழ் மக்களின் சூழலுக்கேற்ப ராராட்டு, தாராட்டு, தாலேலோ, ஓராட்டு, ரோராட்டு, தொட்டில் பாட்டு, ஓலாட்டு, திருத்தாலாட்டு எனப் பல்வேறு பெயர்களால் இன்றைய உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும்  வழங்கி வருகின்றது.

      சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஏழை எளியவரென்று பாராமல், தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டி தாலாட்டுகின்றனர். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மனவெழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள், பிற்காலக் கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றிப் பிள்ளைத்தமிழாவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும் யாப்பிலக்கணக் கட்டுக் கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர்.
‘’ மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி
  ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில், என பெரியாழ்வாரும்,
‘’ சாலி வயிற்றமிழ் வேளு ரடிகேள் தாலோ தாலேலோ
  சங்கத் தமிழின் தலைமைப் புலவர் தாலோ தாலேலோ’’, என்று குமரகுருபரரும் பாடுகின்றனர்.
 
தாலாட்டு – தன்மை           
     தாலாட்டுப் பாடல்கள் தாய்மையின் பாடல்களாகும். அந்தந்தப் பகுதி மண்ணுடன் வளர்ந்து வளம் பெற்றவை. எழுத்தறிவில்லாத கிராமப்புறத்து மக்களிடையே தொன்றுதொட்டு வழங்கி வரும் அப்பாடல்களை இயற்றியவர் யார்? அவை தோன்றின காலம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. எழுத்து வடிவத்திலும் யாரும் எழுதிவைக்கவில்லை.

‘’ஏட்டிலே எழுதவில்லை
 எழுதி நான் படிக்கவில்லை
 வாயில் வந்தபடி
 வகையுடனே நான் படிப்பேன்’’,

என்னும் நாட்டுப் பாடலே மேற்கூறிய இத்தன்மையை விளக்குவதாகும்.

      தாய்மையின் மனக்கதவை சமூகத்திற்குத் திறந்து காட்டுபவை தாலாட்டுப் பாடல்கள். மனத்தின் உணர்வு உந்துதல்கள் பிள்ளைக்கனியின் அமுதமாக பாடப்படுகின்றன. சமூக அமைப்பிற்குக்  குடும்ப வாழ்வே பின்னனி. பிறப்பு முதல் இறப்பு வரை சமூகம் பரிமாறிக் கொள்ளும் ஒட்டு மொத்த தொகுப்பிற்கும், தனி மனித செயலுக்கும் மனப்பதிவே முதன்மை வகிக்கிறது.

      மனிதன் பார்ப்பவை, கேட்பவை அனைத்தும் மூளையில் பதியமிடுகின்றன. எத்தகைய பதிவாக இருப்பினும், பதிவு மனித உடற கூற்றின் இயற்கை, வெளியீடுகள் மனிதப் பண்பின் வேறுபாடுகளால் வருகின்ற விளைவே ஆகும். குழந்தைப் பருவத்தில் பதிவுகள் எளிதாகப் பதியும் தன்மை வாய்ந்தவை. அதுவும் பாதி உறக்கத்தில் இருக்கும்போது கேட்கும் கருத்துகள் ஆழமாகப் பதியும் சக்தி வாய்ந்தவை. தாலாட்டில் இசை உறக்கத்திற்கு உதவுவது போல் பிஞ்சு மனத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது என்பதால் தாலாட்டுப் பாடப்படுகிறது.

‘’ ஊர் வாழ தேசம் வாழ
  இனம் சுற்றம் எல்லோரும் வாழ
  குருவிற்கும் சிவனுக்கும்
  நல்லபிள்ளையாய் இருந்து வாழ்க’’

இப்பாடலில், ஊரும் தேசமும் வாழவேண்டும். சுற்றமும், உறவினமும் வாழ, குருவையும் தெய்வத்தையும் வணங்க வேண்டும். சமூகத்தில் குழந்தை வளர்ந்த பிறகு தவறுகளைச் செய்யக்கூடாது. எல்லோரும் வாழ வழி செய்ய வேண்டும் என்ற உயர்நோக்கத்திற்காகவே தாலாட்டுப் பாடல்கள் மனப்பதிவுகளாகப் பாடப்படுகின்றன. சமூகத்தில் பெண்ணே முதன்மைப் பங்காக இருக்கின்ற காரணத்தினால், பெண்களால் சமூக நிலையையும், அவர் தம் மனப்போக்கையும் தாலாட்டுப் பாடல்களில் நயமாக உணரமுடிகிறது.
 
      தாலாட்டு இடம்விட்டு இடம் பாய்வது, பறப்பது, பரவுவது. தன்மொழி வழங்கும் எல்லைகளில் எல்லாம் உலா வந்து, அந்தந்த மண்ணின் தன்மைகளை உள்வாங்கி மறுபதிப்பாக உருவாகும் தன்மையைக் கொண்டது.

‘’ ஆராரோ ஆராரோ
  இந்தப் பாலும் அடுப்பிலே
  பாலகனும் தொட்டியிலே
  இந்தப் பாலகனைப் பெத்தெடுத்த
  பாண்டியனாம் கட்டிலிலே...’’,

இது தமிழகத் தாலாட்டு.

இதே பாடல், மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்பு மாலாயாவாக இருந்தபோது ஜப்பானின் ஆட்சியில் இலட்சக்கணக்கான தமிழர்கள் சயாமிற்கு (தாய்லாந்து) வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்ட காலத்தில்,
     


‘’ ஆராரோ ஆராரோ
  இந்தப் பாலும் அடுப்பிலே
  பாலகனும் தொட்டியிலே
  இந்தப் பாலகனைப் பெத்தெடுத்த
  பாண்டியனாம் சயாம் காட்டிலிலே...’’, [5]


என அம்மண்ணின் சூழலுக்கு ஏற்ப பாடப்பட்டுள்ளதைக் காணலாம்.

      இதயத்தை நெகிழ வைக்கும் தாலாட்டு வகை காலத்தை வென்றது. அழும் குழந்தையும், அதைத் தூங்க வைக்க இசைபாடும் ஓர் அன்புக் குரலும் இருக்கும் வரையில் அழியாத்தன்மைக் கொண்டது தாலாட்டாகும். இத்தகைய தாலாட்டுப் பாடல்களில் தாய்மை உணர்ச்சியின் ஆழம், குழந்தைப் பற்றிய வருங்காலப் பார்வை, குறிக்கோளுடைய உயர்ந்த சிந்தனை ஆகியவற்றைக் காண முடிகிறது என்றும் சிலர் கூறுவர். இப்பாடல்களில் பசுமையான நினைவுகளும், பாச உணர்வுகளும் பளிச்சிடும். கற்பனைச் சுவையும் காவிய அழகும் பட்டாம்பூச்சியாய் வட்டமிடும்.
      
‘’ நடையழகில் ஜெயங்கொண்டானையும், இனிமையில் இளங்கோவையும், கற்பனையில் கம்பனையும், சொல்லாட்சியில் மணிவாசகரையும், நாகரிக விளக்கத்தில் சங்கப்புலவர்களையும் ஒப்புவமையாகப் பெற்றுப் பெருமையாக விளங்குகிறது தாலாட்டு[6] என்பார் தமிழண்ணல்.
      
இப்பாடல்களுக்கு தனித்த அடிவரையறை கிடையாது. தாயின் மனநிலைக்கேற்பப் பாடல் நீளுவதும் உண்டு. குறைவதும் உண்டு. தாய் செய்யும் வேலைக்கேற்பவும் நீளும், குறையும். குழந்தைகளின் உறக்கநிலைக்கேற்பவும் பாடல்கள் அமையும். உலகில் இல்லாத பொருள்களையும் ஒப்பிட்டுச் சொல்லும் உயர்வு நவிற்சித்தன்மை தாலாட்டுப் பாடல்களிலும் உண்டு. மேலும் எதுகை மோனை, ஓசை சந்தத்துடன் இயல்பாகவே படைக்கப்படுவது தாலாட்டு.



தாலாட்டு - வடிவம்
      
தாலாட்டுப் பாடல்களின் தொடக்கம் வெறும் நாவசைகளின் ஒலிகளேயாகும். இவ்வரிகள் இசை நயத்துக்காகத் தாயால் இட்டுக் கட்டப்பட்டதே. அச்சொற்களுக்கு ஓசைநயம்தான் உண்டு. பொருள் கிடையாது என்றே கூறப்படுகிறது.
     
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ராராரோ ராரிரரோ
ராராரோ ராரிரரோ
துரிதுரி....துரிதுரி...ஆஸ்
ராரீ ராரீ ராராரோ
ராரீ ராரீ ராராரோ
லு-லு லாயீ..லு.. லு..லாயீ

என, அந்தந்தச் சமூக வட்டார மக்களின் பழக்கத்திற்கேற்ப தாலாட்டுப் பாடல்கள் பாடப்படும்.

ஆராரோ ஆரோரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரோரோ ஆராரோ ஆராரோ
தூரி தூரி தூரி தூரி என் கண்ணே நீ
தூரி தூரி தூரியம்மா

எனத் தாலாட்டுப் பாடல் தொடங்கும். தாலாட்டின் முடிவிலும்,

ராரீ ராரீ ராரீ ஆஸ்ச்
ராரீ ராரீ ராரீ ஆஸ்ச்
தூரி தூரி தூரி தூரி ஆஸ்ச்
தூரி தூரி தூரி தூரி ஆஸ்ச்

என்று மிக மென்மையான குரலில் பாடி முடிப்பர். தொட்டிலை மிக மெதுவாக ஆட்டி நிறுத்திவிடுவர். பாடல்களின் முதலிலும், இடையிலும் முன்னிலையாகச் சில சொற்களைக் கையாளுகின்றனர். கண்ணே, கண்ணுமணி, பொன்னுமணி, நித்திலமே, பசுங்கிளியே போன்ற சொற்களைச் சுயமாகவே சேர்த்துப் பாடுகின்றனர்.
      
தாலாட்டின் பண் நீலாம்பரி ஆகும். எல்லாப் பெண்களும் இந்த இராகத்தைப் பின்பற்றுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த, கேட்டறிந்த இராகத்தில் பாடுவார்கள். இப்பாடல்கள் அனைத்தும் மென்மையான இராகத்தில் அமைந்தவை. குழந்தை வளர்ப்பில் முதன்மையானவர்கள் பெண்களே. ஆகையால் அவர்களே தாலாட்டுப் பாடும் ஆற்றலும், அனுபவமும், உரிமையும் உடையவர்கள் எனப் போற்றப்படுகின்றனர். தாயே, தன் குழந்தை அழும்போதும், பாலூட்டும் போதும், குழந்தையைத் நீராட்டும் போதும், உறங்க வைக்கும் போதும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் போதும் தாலாட்டுப்பாடுவாள். தாயைத் தவிர்த்து, தாயின் பாட்டிமார், தாயின் சகோதரி, வளர்ப்புத்தாய், குழந்தையின் அத்தை, குழந்தையின் தமக்கை ஆகியோரும் தாலாட்டுப் பாடித் தாலாட்டுவர். ஆனாலும் தாய்மையின் தாலாட்டே, உணர்விலும் நெகிழ்விலும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

தாலாட்டு – பயன்பாடு
      
குழந்தையைத் தூங்கச் செய்வதே தாலாட்டுப் பாடல்களின் முதன்மைப் பயன்பாடாகும். அழும் குழந்தைகளை அமைதிப்படுத்தும் கருவியாக அமைகிறது. பசித்து அழும் குழந்தைக்கு உடற்பயிற்சி ஊட்டும் நோக்கத்துடன் மடியில் வைத்துக்கொண்டும் ஆட்டிக் கொண்டும் பாடுவர். குழந்தையைப் பற்றிய தன் கனவுகளைச் சொல்லவும், பட்ட இன்னல்களைச் சொல்லவும், குலப்பெருமையைச் சொல்லவும் தாய் தன் நினைவோடையில் சிதறும் முத்துக்களாய் தாலாட்டைப் படைக்கின்றாள்.
      
குழந்தைக்காகத் தாய் பாடும் வண்ண வண்ணப் பாடல்களைக் கேட்கும் போது, அப்பாடல்களில் குழந்தையின் அழுகைக்குக் காரணம் வினவுதல், குழந்தையைப் பேசத் தூண்டுதல், தாய்மாமனின் சிறப்பு, குழந்தைக்குரிய சடங்கு முறைகள், வருங்காலத்தில் தன் குழந்தையைப் பற்றிய தாயின் கனவுகள், தாயின் தவமும் தவப்பயனும், குலத்தொழிலின் பெருமைகள் போன்றவை பெரும்பாலும் தாலாட்டின் உள்ளடக்கமாக இருப்பது தெரிகிறது.

அழுகையை அமர்த்தும் பாட்டு
      
பச்சைக் குழந்தையை யாரும் கைநீட்டி அடித்திருக்க மாட்டார்கள். இதைத் தாயும் நன்கு அறிவாள். எனினும் தன் குழந்தையை யாரோ அடித்தது போல,
  
ஆரடிச்சா நீயழுத?
  அடிச்சாரச் சொல்லியழு
  மாமன் அடிச்சாரோ
  மல்லிகைப்பூ கைனால?’, என வினவுகிறாள். இவ்வாறு அழுகின்ற குழந்தை மானாமதுரை பிரம்பு கேட்டு அழுவதாகவும், தாய் தன் கணவன் பெருமையைக் கூறி, பிரம்பு மட்டுமா? உன் தந்தை ஊரையே வாங்கித்தருவார் கேள் என்று அழுகின்ற குழந்தையை அமர்த்தும் விதமாகப் பேசவும் தூண்டுகிறாள்.

மானாமதுரையிலே
 மணிப்பிரம்பு வித்ததிண்ணு
 வாங்கித் தரலையிண்ணு – எங்கட்டி நீ
 ஏங்கித் தவிப்பதேனோ?’

தாய்மை போற்றுதல்
      
பெண் திருமணமாகியும் குழந்தை பெறாமல் மலடியாக இருந்தால், அவள் தொட்டதெல்லாம் துலங்காது என்ற நம்பிக்கை பெண்ணுள்ளத்தில் வேரூன்றி நிற்கிறது. அதே கணத்தில் இவளுக்கு குழந்தை பிறந்து விட்டால் செத்த மரமும் தளிர்த்து விடும். கல்யாண பாகற்காய் இனிப்பாகிவிடும். உளுத்த மரமும் தழைத்து விடும் என்பதை,


 பட்டமரம் பாலூறும்
 பாகல்காய் தேனூறும்
 உறுத்த மரம் தான் தழையும்
 உத்தமியாள் வாசலிலே’, என்ற அடிகள் உணர்த்தும்.
      
மனிதனின் நரம்பில்லா நாவானது நல்லது கெட்டது என்ற இரண்டையும் உரைக்கும் வல்லமையுடையது. ஆதலால் பிறர் மனம் துன்பப்படா வண்ணம் ஆராய்ந்து உரைக்க வேண்டும். இதைத்தான் வள்ளுவர் நாவடக்கத்தின் இன்றியமையாமையைப் பற்றித் தம் குறளில் உரைத்துள்ளார். மலடியாக இருந்த தாயின் மனத்தையும், தந்தையையும், குழந்தை குளிரவைத்து வளருகின்றான். ஆதலால் மகிழ்ச்சி தாங்காமல் தன் மகனிடம் கோயிலுக்கு என்னென்ன செய்ய விரும்புகாறார்களோ, அதைத் தாலாட்டாகப் பாடி மகிழ்கிறாள் என்பதை,

கட்டைக் களஞ் செதுக்கி
 கருமலையைச் சூடேத்தி
 பொன்னைப் பொலி போடும்
 புண்ணியனார் பேரரசா
 சாலை பதிப்பமோ
 சத்திரங்கள் கட்டுவோமா
 மதுரைக்கும் திருப்பதிக்கும்
 வகுப்போமே பூஞ்சோலை....’, என்னும் வரிகள் குறிப்பிடுகின்றன.

தாயின் கனவுகள்
      
தாய் தன் மகன் வருங்காலத்தில் துரைமகனாகவோ, விவசாயியாகவோ, கை நிறைய புத்தகத்தைக் கையில் எடுத்துப் போதிக்கும் ஆசிரியனாகவோ? இதில் எதனைப் பெற்றுப் புகழ் பெறப் போகிறானோ என்ற தாயின் கனவுகள்,
கண்ணே கண்மணியே
 கண்ணுறங்காயோ
 கார வீடோ கச்சேரியோ
 கை நிறைய புத்தகமோ..., என இங்குத் தாலாட்டாக வெளிப்படுகின்றன.

தாய்மாமன் சிறப்பு
      
தாய் மட்டுமின்றி சிற்றன்னை, பாட்டி, அத்தை முதலான உறவினர் பிறராலும் தாலாட்டுப் பாடப்படும். குழந்தைக்குப் பாடலின் பொருள் புரியாது. எனினும் இசையில் மயங்கி தூங்குகிறது. இவ்வகைப் பாடல்களில் உறவினர்களின் பெருமைகள் எல்லாம் இடம்பெறும். சிறப்பாகத் தாய்மாமன் பற்றிய பெருமைகளே அதிகம் பேசப்படுகிறது.
      
மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப்பாடல்களும், தனது அண்ணன் தம்பிமார்களை ஏற்றிப்போற்றுவதும், கேலி செய்து மகிழ்வதும் தமிழ்ப்பெண்களின் தாலாட்டு மரபாக விளங்குகிறது.

உசந்த தலைப்பாவோ
 உல்லாச வல்லவாட்டு
 நிறைந்த தலைவாசலிலே
 வந்து நிற்பான் உன் மாமன் என்றும்,
 ஏலக்காய் காய்க்கும்
 இலை நால் பிஞ்சு வரும்
 ஜாதிக்காய் காய்க்கும்
 உன் தாய்மாமன் வாசலிலே..., என்றும் தாய்மாமன் பெருமையைப் பேசுகிறாள் தாய்.

காதணி விழா
      
குழந்தைக்கு எடுக்கும் விழாக்களில் காதணி விழா என்பது தொன்று தொட்டுப்பெரும் சடங்காக நிகழ்த்தப் பெறுகிறது. காது குத்துவதும் குழந்தை உடலில் ஏதாவது சிறுகாயம் ஒன்றை ஏற்படுத்துவதும் எமனை ஏமாற்றச் செய்யும் தந்திரங்கள். எமனை ஏமாற்ற உடலில் சிறுகாயம் ஏற்படுத்திவிட்டால் குழந்தையின் ஆயுள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை. குழந்தையின் ஆயுளைப் பாதுகாக்கும் சடங்கு என்பதால் இதனைப் பெண்கள் மிகுந்த மனமகிழ்ச்சியோடு கொண்டாடுவர் என்பதை,

என் அரசன் காதுகுத்த
 என்ன சொல்லும்ஆசாரி....
 கைவிளக்கு கொண்டு நீ
 கலிதீர்க்க வந்தவனோ…….
 உனக்கு கண்ணேறு தையாமல்
 சுண்ணாம்பு மஞ்சளம்
 கத்தி பொறி சூரியர்க்கு..., 
என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

குலத்தொழில் பெருமை
      
தாய் குழந்தைக்குத் தாலாட்டாக தன் குலத்தின் பெருமையையும் தொழிலின் பெருமையையும் பாடுகிறாள். வாழ்வில் நிகழும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாகத் தாலாட்டு அமைகிறது. இங்குப் பெண்கள் குடும்பத்தில் எத்தொழிலைச் செய்து வாழ்கிறார்களோ அத்தொழிலின் பெருமைப்பற்றிப் பேசப்படுகிறது.

ஐரமீனும் ஆரமீனும் – கண்ணே
 அம்புட்டுதாம் அப்பனுக்கு ......
 அத்திமரம் குத்தகையாம்
 ஐந்து லட்சம் சம்பளமாம்
 சாமத்தலை முழுக்காம் – உங்கப்பாவுக்கு
 சர்க்கார் உத்தியோகமாம்,

அக்காலத்தில் அரசாங்க வேலை சிறப்பானது என்ற நம்பிக்கையும் தாலாட்டில் வெளிப்படுவதைக் காணலாம்.

     
தாலாட்டு – இன்றைய நிலை

தாலாட்டுப் பாடல்கள் இயற்கை வளம், உறவுப் பிணைப்பு, பல்லுயிர் ஓம்பல், விருந்தோம்பல், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு, வறுமை என விரிந்து படர்ந்து நெகிழ்ந்து கொண்டே போகும் தன்மையைக் கொண்டு மனித வாழ்வின் யதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. பெண்கள் தாம் விரும்பிய இலட்சியம், சந்தித்த மனித உறவுகள், வாழ்வின் எல்லை, சாதித்த செயல்கள், இறைமை, பொருளியல், கல்வி, காதல், பரத்தமை முதலியவற்றை மனப்பதிவுகளாகத் தம் குழந்தைகளுக்குத் தாலாட்டோடு இணைத்துப்பாடும், சமூக உறவின் மேம்பாடாக விளங்குகின்றனர் என்பதில் சற்றேதும் ஐயமில்லை. இதனால் தாலாட்டின் தனிச்சிறப்பே வாழ்க்கையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எதிரொலிப்பதாகும் என்னும் மாக்சிம் கார்க்கியின் கூற்றோடு ஒத்துப்போகிறது எனலாம்.

      இத்தகைய தனித்தன்மையைக் கொண்ட தாலாட்டுப் பாடல்கள் இன்றைய நிலையில் தேய்பிறையாகத் தேய்ந்து கொண்டு போகிறது என்பது வருந்தக்கூடிய செய்தியாகும். உலகமயமாகுதல் போக்கு உலகெங்கும் உதயமாக, இயந்திர வாழ்க்கையில் தமிழர்களின் கலையும் பண்பாடுகளும் நவநாகரீக அலைகளால் தாக்கப்பட்டு நலிவுற்றுத் தள்ளாடிக் கொண்டு நிற்கின்றன. இதற்குத் தாலாட்டுப் பாடல்களும் விதிவிலக்கல்ல.

      இன்றைய நிலையில் தாய்கள் பாடக்கூடிய சூழல் அமையாததும், பாடத் தெரியாததும், தொட்டில் கட்டும் பழக்கம் இல்லாததும், தொழில் நிமித்தமாய் நேரமின்மையும், குழந்தைக்கு நல்ல உணவு கிடைப்பதும் அது தானாகவே உறங்குவதும், ஆங்கிலக் குழந்தைப் பாடல்களின் தாக்கங்களாலும் நம் தாய்மொழியின் தாலாட்டுகளின் பயன்பாடுகள் குறுகிவிட்டன. இயந்திர வாழ்கையின் அவசர ஓட்டத்தில் உணர்வுகள் பதுங்கிக்கொள்ள, ஆடம்பரமும் பொருளியல் வளமையும் மட்டுமே முன்நிற்கின்றன. அன்பு, பாசம், நேசம் போன்றவை தூரமாய் விலகி நிற்கின்றன.

      சில மேல் நிலை கல்விக்கூடங்களில் பாடப்பகுதியாகயாக நாட்டுப்புறவியல் போதிக்கப் படுவதால், ஒரு சிலரேனும் இக் கலைகள் மேல் 
ஆர்வம் கொண்டு ஆய்வுகள் செய்து நூலாகவும், அகப்பக்கங்களிலும் படைப்புகளை வெளிக்கொணருகின்றனர்.


திரைப்படங்களின் தாக்கத்தால் தாலாட்டுப் பாடல்கள் மறுஉருவம் எடுத்து நவீன இசைக் கலவையில் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருப்பது சற்றே ஆறுதல் தரும் செய்தியாகும்.

 சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
 சிந்திடும் மலரே ஆராரோ
 வண்ணத் தமிழ்ச் சோலையே
 மாணிக்கமாலையே ஆரிரோ அன்பே ஆராரோ
என்று பதிபக்தியில் வரும் பாடலும்,

 மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் கலைவண்ணமே

 என்ற பாசமலர் படப்பாடலும் இன்றளவும் நம் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது. கிழக்குச்சீமையில் வரும் மானூத்து மந்தையிலே’, சின்னத்தம்பியில் வரும் தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே’, பாடல்களும் பிரபலமான தாலாட்டுப் பாடல்களாக உலா வந்ததும் நாம் அறிந்ததே. 



முடிவுரை
      தாலாட்டு தமிழ்ப்பண்பாட்டின் முதற்பாட்டு. தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும்.  தாலாட்டு உறங்க வைக்கும் பாட்டு என்றாலும் கிறங்கவைக்கும் பாட்டாகும். தாயின் இசையில் குழந்தை அடம்பிடிக்காமல் கண்ணயரும். இத்தகைய வல்லமை கொண்ட பாடல்களில் இலக்கண இலக்கிய அமைதி அறியாத ஒரு கிராமத்துத் தாயின் சிந்தனையில், தமிழரின் பண்பாடு எவ்வாறெல்லாம் உறைந்து கிடக்கின்றது என்பதையும் நன்கு அறியலாம். பாரதியின் தனிப்பாடல்களுக்கு வழிகாட்டிய இத்தாலாட்டுப் பாடல்களின் வழியில் பாரதிதாசனும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் வெவ்வேறு தாலாட்டுப் பாடல்களை இலக்கியச் செல்வங்களாகப் படைத்துள்ளார்கள்.

      ஆராரோ ஆராரோ
     ஆரிவரோ ஆராரோ
கல்லைப் பிசைந்து
கனியாக்கும் செந்தமிழ்
சொல்லை மணியாகத்
தொடுத்தவனும் நீதானோ? 
-          கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

     





துணை நூல்கள்

1.       சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ஒன்பதாம் பதிப்பு 2010, மணிவாசகர் பதிப்பகம். சென்னை.
2.       இரா. தண்டாயுதம், மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள், முதற்பதிப்பு 1998, தமிழ்ப் புத்தகாலயம். சென்னை.
3.       கி. வா. ஜகந்நாதன், மலை அருவி, ஐந்தாம் பதிப்பு 2004, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
4.       சு. சண்முசுந்தரம், நாட்டுப்புறவியல், இரண்டாம் பதிப்பு 2007, காவ்யா, சென்னை.
5.       கே. தனசேகரன், கிராமியக் கலைகள், இரண்டாம் பதிப்பு 2010, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
6.       கோ. பெரியண்ணன், நாட்டுப்புறப் பாடல்கள், 2008, ஜோதிப்பிரியா, சென்னை.
7.       வை. முத்துகிருஷ்ணன், தற்காலத் தாலாட்டுப் பாடல்கள், 1995, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
8.       சிம் கையேடு
           
 



[1] சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப. 43
[2] சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப. 43
[3] சிம் பல்கலைக்கழக கையேடு, ப. 34
[4] சிம் பல்கலைக்கழக கையேடு, ப. 34
[5] இரா.தண்டாயுதம், மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள், ப. 93
[6] சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப. 43

2 கருத்துகள்:

  1. ஆராரோ! ஆரிரரோ! ஆராரோ! அன்னை இவள் என்ன தவம் செய்தாளோ? அடித்தாரைச் சொல்லி அழு என் கண்ணே! பிறையாய் நீ வளர உன் பின்னே யார், யாரோ?

    பதிலளிநீக்கு
  2. நன்கு எழுதியுள்ளீர்கள் திரு சேகரன். வாழ்த்து

    பதிலளிநீக்கு